அதாஉல்லாவின் வியூகம் என்ன?
-றிப்தி அலி-
கடந்த நவம்பர் 16ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதினைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த அரசாங்கம் இதுவரை தனது பெரும்பான்மையினை பாராளுமன்றத்தில் நிரூபிக்காத நிலையில் கடந்த 100 நாட்களாக இந்த ஆட்சியினை கொண்டு செல்கின்றது.
இந்த காலப் பகுதியில் இலங்கையின் முஸ்லிம் அரசியலில் பரலவாக பேசப்பட்ட ஒரு பெயர் தான் ஏ.எல்.எம்.அதாஉல்லா. அதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான இவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் போன்ற பதவிகள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் கதையாடல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், மக்களின் வாக்குரிமையின் ஊடாக கிடைக்கப் பெறும் பதவியொன்றுக்கே செல்வேன் எனும் நிலைப்பாட்டில் இன்று வரை உள்ள அரசியல்வாதி அதாஉல்லா ஆவார். 1957ஆம் ஆண்டு ஓக்டோபர் 6ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் பிறந்த அஹமது லெப்பை மரைக்கார் அதாஉல்லா ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் அரசியல் நடவடிக்கைகளினால் 1990ஆம் ஆண்டுகளில் கவரப்பட்ட இவர், அக்கட்சியில் இணைந்து முக்கிய பணியாற்றினார். இவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்றினைச் சேர்ந்த சேகு இஸ்ஸதீன் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளராவார்.
இவர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். இதனால் 1999ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் நியமிக்கப்பட்டார்.
அதாஉல்லா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட லிபரல் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் மிக நெருக்கத்திற்குரியவராகவும் செயற்பட்ட அசித பெரேரா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை துறந்தார்.
அன்றிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடையும் வரை தொடர்ச்சியாக 16 வருடங்கள் ஏ.எல்.எம். அதாஉல்லா பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.
இக்காலப் பகுதியில் பிரதி கல்வி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற நெடுச்சாலைகள் அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துள்ள கிழக்கு உட்கட்டமைப்பு அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஆகிய பதவிகளை இவர் வகித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக செயற்பட்ட இவர், அக்கட்சியின் தலைரான ரவூப் ஹக்கீமுடன் 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் முரண்பட்டுக்கொண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறி அஷ்ரப் காங்கிரஸ் எனும் கட்சியினை உருவாக்கினார்.
பின்னர் அக்கட்சி தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது. எனினும் இக்கட்சியில் அனைத்து இன மக்களையும் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் பெயரினை தேசிய காங்கிரஸ் என மாற்றினார்.
2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட இவர் 2011ஆம் மார்ச் மாதம் இவடைய சொந்த ஊரான அக்கறைப்பற்றினை மாநகர சபையாக தரமுயர்த்தி தனது மகனான சக்கி அதாஉல்லாவினை முதல் மேயராக தேர்தலின் ஊடாக இவர் நியமித்தார்.
அது மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக் காலத்தில் நான்கு உறுப்பினர்களுடன் ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாக இவரது கட்சி காணப்பட்டதுடன் அச்சபையின் இரண்டாவது பதவிக் காலத்தில் மூன்று உறுப்பினர்கள் காணப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக இவரது கட்சியின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண அமைச்சர், மாகாண சபையின் தவிசாளர், மற்றும் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை வகித்தனர்.
அது மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் பல உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவம் காணப்பட்டதுடன், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றினை இக்கட்சி இன்று வரை தனது கட்டுப்பாட்டினும் வைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மிகப் பலம்பொருந்திய ஒருவராக காணப்பட்ட ஏ.எல்.எம். அதாஉல்லா, 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததினை அடுத்து இவரது அரசியலிலும் பாரிய பின்னடைவு காணப்பட்டது.
இதற்கான பிரதான காரணம் இவரது மஹிந்த புராணமாகும். அதாவது, 2014ஆம் அளுத்கம பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக கலவரமொன்று இடம்பெற்றது. இதற்கு அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினை அனைத்து தரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.
எனினும் அதாஉல்லா மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் முஸ்லிம்கள் அவரை வெறுக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முழு முஸ்லிம் சமூகமும் அப்போது மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த நிலையில் அதாஉல்லா மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தார்.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதாஉல்லாவும் தோல்வியடைந்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக தனித்துப் போட்டியிட்டது.
இதன்போது அதாஉல்லாவின் வாக்குகளை அக்கட்சியினர் கைப்பிற்றியமையும் அதாஉல்லாவின் தோல்விக்கு ஒரு காரணமாகும். அதாஉல்லா அதிகாரத்திலிருந்த போது அவருடனிருந்து சொகுசுகளை அனுபவித்த பலர், அவர் அதிகாரத்தில் இல்லாத போது அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். பிற்காலத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் வெளியேற்றம் அதாஉல்லாவிற்கு ஒரு பாரிய இழப்பாகும்.
இதனால் தேசிய காங்கிரஸின் முக்கிய பதவிகள் அக்கரைப்பற்றினைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையினால் கிழக்கு மாகாணம் முழுவதும் விஸ்தரித்துக் காணப்பட்ட தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்றுக்குள் மாத்திரம் சுருங்கிக் கொண்டமையினை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் தேசிய காங்கிரஸின் தலைவராகவும் செயலாளராகவும் அதாஉல்லா தற்போது வரை செயற்பட்டு வருகின்றமை பாரிய விமர்ச்சனத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது போன்ற காரணிகளினால் அவரின் செல்வாக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து நாளுக்கு நாள் குறைவடைந்தது. தன்னுடனிருந்தவர்கள் பலர் வெளியேறிய போதிலும் தனது தலைவரான மஹிந்தவினை விட்டு அதாஉல்லா ஒருபோதும் வெளியேறவில்லை.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுடன் அன்றிலிருந்து இன்று வரை அதாஉல்லா நெருக்கமாக செயற்பட்டு வருவதுடன் அவரின் விசுவாசியாகவே இன்று வரையுள்ளார். இது வரவேற்றகத்தக ஒரு விடயமாகும். இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதாஉல்லா ஆதரித்த கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார். இதனையடுத்து புது உத்வேகமொன்று அதாஉல்லாவிடம் தற்போது காணப்படுகின்றது.
இதனால் பலர் தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டிருக்கின்றனர். ஜோர்தானுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிண்ணியாவினை சேர்ந்த ஏ.எல்.எம்.லாபீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரான அட்டாளைச்சேனையினை சேர்ந்த பழீல் பீ.ஏ போன்ற பலர் அதாஉல்லாவுடன் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் விரைவில் இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போதிருந்தே அதாஉல்லா தயாராகி வருகின்றார். இந்த தேர்தலில் அதாஉல்லா களமிறங்குவாரா அல்லது இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவரது மகனான அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாஉல்லாவினை களமிறக்குவாரா என்பது இன்று வரை கேள்விக்குரியாகவே உள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலா அல்லது தேசிய காங்கிரஸின் குதிரை சின்னத்திலா போட்டியிடுவார் என்பது தொடர்பிலும் இதுவரை முடிவாகவில்லை. எவ்வாறாயினும் அதாஉல்லாவின் பாராளுமன்ற வெற்றி வாய்ப்பு இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே அதாஉல்லாவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் சம்மாந்துறை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும், கல்முனை தொகுதியில் சாய்ந்தமருதினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிவில் அதிகாரி ஏ.எல்.எம்.சலீமும் தயாராகி வருகின்றனர்.
இவர்களை சேர்த்துக்கொண்டு களமிறங்குவதன் ஊடாக பாராளுமன்றம் நுழைய முடியும் என்ற நிலைப்பாட்டில் அதாஉல்லா உள்ளார். குறிப்பாக சாய்ந்தமருதிற்கு தனியான நகர சபையினை வழங்குதவன் ஊடாக அப்பிரதேசத்திலுள்ள சுமார் 17,000 வாக்குகளை இலகுவாக சுவீகரிக்கவும் அவர் முயற்சி செய்தார்.
வாய்க் கெட்டியது கைக்கெட்டவில்லை என்ற அடிப்படையில் சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலினை மீளப் பெற கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேச மக்கள் பாராளுமன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதேவேளை, 503,790 பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரமேதாஸ 259,673 வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ஷ 135,058 வாக்குகளையும் பெற்றுக்கெண்டனர்.
இதில் அம்பாறை தொகுதியில் 89,647 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதாஉல்லா களமிறங்கினால் அவர் வெற்றி பெறுவதற்கு சுமார் 65,000 மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும். குறித்த வாக்குகளை அவர் பெறுவாரா என்பது இன்று வரை கேள்விக்குரியாகவே உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பாராளுன்ற தேர்தலில் களமிறங்க தயாராவிருக்கும் விமலவீர திசாநாயக்க, ஸ்ரீயானி விஜயவிக்ரம மற்றும் ரொஷான் ஆகியோர் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அதாஉல்லா தனது தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவரா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது. அதாவது கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 32,000 வாக்குளைப் பெற்ற றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் ஒரு ஆசனத்தினைக் கூட பெற முடியவில்லை.
இவ்வாறான நிலையில் அதாஉல்லா தனித்து களமிறங்கும் பட்சத்தில் சுமார் 50,000 மேற்பட்ட வாக்குளை பெற்றால் மாத்திரமே ஒரு ஆசனத்தினை கைப்பற்ற முடியும். தற்போதைய சூழ்நிலையில் 50,000 வாக்குகளை பெற்று அதாஉல்லா பாராளுமன்ற நுழைவாரா என்பது பாரிய கேள்விக்குறியாகும்.
Comments (0)
Facebook Comments (0)