பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்போம்
சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உலக மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொடுக்கவே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இத்தினத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்முறை கொழும்பில் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்காலப்பகுதியில் பலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து நாமும் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.
பலஸ்தீனின் 13 மில்லியன் சனத் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இதுவரை பலஸ்தீனுக்கு வரலாற்று ரீதியாக சொந்தமாக 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை அபகரித்துள்ளது.
இது மொத்த நிலத்தில் 85 வீதமாகும். மேற்குக் கரையில் மாத்திரம் 2072 ஏக்கர் விவசாய நிலம் இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 37 வீதமாகும்.
அங்கு 931.5 ஏக்கர் விவசாய நிலம் மாத்திரமே பலஸ்தீனர்களுக்குச் சொந்தமாகவுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 17 வீதமாகும்.
இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆக்கிரமிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தே வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்களையும் நிர்மாணித்து வருகிறது. பல குடியிருப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீன மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது கூட முன்னரை விட இப்போது அதிகம் இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீன விவசாயிகளுக்கு கூட விவசாயத்தில் ஈடுபடும் உரிமை மறுக்கப்படுகிறது. ஒலிவ் மரங்கள் உட்பட பெறுமதிமிக்க மரங்களை இஸ்ரேல் அகற்றி வருகிறது.
இஸ்ரேலின் அடக்குமுறையினால் காஸாவில் வாழும் மக்களின் வாழ்க்கை சகல வழிகளிலும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் காஸா மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
காஸாவின் எல்லைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான கட்டுப்பாட்டையும் இஸ்ரேலே வைத்திருக்கிறது. இதனால் உரிய காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையாக காஸா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவில் வாழும் 10 வீதமான மக்கள் மாத்திரமே சுத்தமான குடி நீரைப் பெறுகின்றனர்.
மிகுதி 90 வீதமானோர் மனிதப் பாவனைக்குதவாத மாசடைந்த நீரையே பருகுகின்றனர். அதிலும் பலஸ்தீனர்கள் தமக்குச் சொந்தமான நீரை இஸ்ரேலிடமிருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்குக் கரையின் பிரதான நீர் மூலமான அகுபர் மலையிலிருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அத்துடன் மேற்குக் கரையில் பலஸ்தீன நகரங்களுக்கான நீர் விநியோகம் பல நாட்களுக்கு அல்லது வாரக் கணக்கில் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறு பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்குப் பதிலாக தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது.
இதனை உலகிலுள்ள எந்தவொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இலங்கையின் கடப்பாடாகும்.
இம்முறை ஐக்கிய நாடுகள் 77வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் உரை நிகழ்த்திய இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச சமூகத்தின் தலையீட்டில் பலஸ்தீனப் பிரச்சினை அவசரமாத் தீர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
"பலஸ்தீனர்களுக்கு தமது நிலப்பரப்பெல்லைக்குள் அவர்தம் அனைத்துவகையான வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த மறுக்கமுடியாத உரிமையுள்ளது போலவே அவர்களுக்கான சுயாதீன, சுயநிர்ணயமுள்ள தனித்தேசமொன்றை அமைத்தாளவும் அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
இதுவே இலங்கையின் பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான மாறாத கொள்கை நிலைப்பாடாகும்" என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
‘
"பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பில் நிரந்தர சமாதானத் தீர்வொன்றுக்கான அனைத்துவகையான முஸ்தீபுகளையும் அவசியமான நடவடிக்கைகளையும் பலஸ்தீனம் இஸ்ரேல் ஆகிய இருதரப்பினரதும் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பொறிமுறைகளுக்கும் இலங்கை எப்போதும் ஆதரவளிக்கும் உறுதியான நிலைப்பாடிலேயே உள்ளது" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இரு தேச ( Two-state solution ) உருவாக்க தீர்வு யோசனையையே இலங்கை எப்போதும் ஆதரிப்பதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவிதிருந்தார்.
இலங்கை எப்போதுமே பலஸ்தீனின் நட்பு நாடாகவே வரலாற்றில் தனது இடத்தைப் பதித்துள்ளது. இந் நிலைப்பாட்டில் எந்தவிதத்திலும் மாற்றங்கள் ஏற்பட அனுமதிக்க முடியாது.
அதேபோன்று இலங்கை முஸ்லிம்களும் எப்போதுமே பலஸ்தீனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்தக் குரல் தொய்வடைய நாம் இடமளிக்க முடியாது.
தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பலஸ்தீன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் அந்தப் புனித மண்ணின் விடுதலை க்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)