45ஆவது அகவையில் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்
முயற்சிகளே வரலாறுகளை உருவாக்குகின்றன. அவ்வரலாறுகள் காலத்தால் கல்வெட்டுக்களாக்கப்படுகின்றன. அவ்வாறு கல்வெட்டானதொரு வரலாறு தான் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வரலாறு.
களனி பல்கலைக்கழகம் செழித்துப்போன இலங்கை திருநாட்டின் களனி நகரத்தில் அழகிய சுற்றுப்புறங்களால் சூழப்பட்டதே களனி பல்கலைக்கழகம். 1875ஆம் ஆண்டில் பௌத்த பிக்குகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக வித்தியாலங்கார பிரிவேணாவாக இது உருவாக்கப்பட்டது.
இலங்கையில் நவீன பல்கலைக்கழகங்களை நிறுவுவதன் நோக்கமாக 1959ஆம் ஆண்டு வித்தியாலங்கார பல்கலைக்கழகமாக இது மாற்றப்பட்டது. பின்னர் 1972ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் விதியாலங்கார வளாகமாக இது மாற்றம் பெற்றது.
அதன்படி தனிச் சிங்கள பல்கலைக்கழகமாக இருந்த வித்தியாலங்கார வளாகத்திற்கு 1973ஆம் ஆண்டு முதன் முதலில் 17 தமிழ் மொழி மூல மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை களனி பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்ற தமிழ், முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை வருடா வருடமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முகமாகவும், கடமைகளை செய்து முடிக்கும் முகமாகவும் 1974ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி முஸ்லிம் மஜ்லிஸ் உருவாக்கப்பட்டது.
களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸை உருவாக்க அர்ப்பணிப்போடு செயற்பட்டோர் என்ற வகையில் அக்கரைப்பற்றினை சேர்ந்த ஏ.எம்.அஹமட்லெப்பை, மருதமுனையை சேர்ந்த கவிஞர் மருதூர் மஜீத், தல்கஸ்ப்பிட்டிய என்.எம். அமீன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸின் முதல் தலைவராக இஸ்லாமிய கற்கை துறையில் சிறப்பு பட்டத்தை மேற்கொண்ட ஏ. எம். அஹமட்லெப்பையும், முதல் செயலாளராக அக்காலத்தில் பட்டதாரியாக பிரவேசித்த என்.எம்.அமீனும் தெரிவானர்கள்.
மஜ்லிஸின் முதலாம் வருடம் சிறப்பாக கொண்டுசெல்லப்பட்டதோடு அதன் இரண்டாம் வருட செயற்பாடுகளும் பலராலும் பேசப்படும் அளவுக்கு வளர்ச்சி கண்டன. அதன்படி முஸ்லிம் மஜ்லிஸின் இரண்டாவது தலைவராக மருதமுனையை சேர்ந்த ஏ. எம். கமர்த்தீனும் செயலாளர்களாக அக்கரைப்பற்றினை சேர்ந்த ஏ. எம். ஜௌபரும், தல்கஸ்ப்பிட்டிய என்.எம். அமீனும், கனிஷ்ட பொருளாளராக தோப்பூர் யூ. எல்.எம் . முஹ்ஸீனும் தெரிவானர்கள்.
தமக்கான கல்வியியல் தேவைகள் பலவற்றை வென்றெடுப்பதற்கான முக்கியமான அமைப்பாக முஸ்லிம் மஜ்லிஸ் திகழ்ந்தது. இதன் போது அப்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கத்தவராக இருந்த மர்ஹூம். ஏ.சீ.எஸ்.ஹமீத் (அக்குரனை பாராளுமன்ற உறுப்பினர், வெளிவிவகார அமைச்சர்) மூலமாகவும் பல தேவைகளை வென்றெடுக்க முடிந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை உருவாக்கும் பிரேரணையும் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினாலேயே முதலில் முன்வைக்கப்பட்டது. அதன்படி 1975ஆம் ஆண்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தோற்றம் பெற்றது.
களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் முதலாமாண்டு நிறைவு விழாவும், வருடாந்த மாநாடும் 1975 நவம்பர் 2ஆம் திகதி நடாத்தப்பட்டது. இம்மாநாட்டிற்கு நாடெங்கிலுமுள்ள அனைத்து வளாகங்களிலுமிருந்து பட்டதாரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
மேலும் ஒரு மைல்கல்லாக முஸ்லிம் மஜ்லிஸின் முதலாவது சஞ்சிகையான “இன்ஸானிய” 1975 இல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழியிலமைந்த ஆக்கங்களுடன் வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்தியம்பும் வரலாற்று கட்டுரைகளை இது உள்ளடக்கி இருந்தது.
கடந்த 6 வருட காலமாக களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பானது நேர்த்தியாகவும் ஆளுமைத் தன்மையாகவும் மத நல்லிணக்கத்தோடும் சமூகத்திற்கு பயன்படுமாறு சேவை நோக்கத்தோடும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.
பல்கலைக்கழக மாணவர்களிடையே இன, மத பேதம் எதையும் காட்டிடா வண்ணம் நல்லிணக்கத்தை பேணியவாறே முஸ்லிம் மஜ்லிஸின் செயற்பாடுகள் யாவும் அமையப்பெற்றிருப்பது முஸ்லிம் மஜ்லிஸின் சிறந்த ஆளுமைத்தன்மையை எடுத்தியம்புகின்றது.
அவ்வாறே இன்றைய சமுதாயத்திற்கும் மாணவர்களுக்கும் உதவுகின்ற வகையில் பல சேவைகளும் இதனால் நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில், பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள், முன்னோடி கருத்தரங்குகள் போன்றவற்றை “Forward Focused” என்னும் தலைப்பில் வருடத்தின் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பாடசாலைகளில் நடாத்தி வருகின்றது.
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மஜ்லிஸை பிரதிநிதித்துவ படுத்தும் மாணவர்களே இக்கருத்தரங்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றி கொடுக்கினர். அசாதாரணமான, முடக்கப்பட்ட இன்றைய COVID19 கால விடுமுறையில் தான் மற்றைய அமைப்புக்கள் online மூலமான கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றன.
ஆனால் அன்றும் இன்றும் இவ்வாறான பயனுள்ள கருத்தரங்குகளை நடாத்துவதில் சிறந்து விளங்குவது களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் என்பது அடிக்கோடிடப்பட வேண்டிய விடயமாகும்.
மேலும் வருடாவருடம் இரத்த தான முகாம்களை நடாத்துதல், நோன்பு காலங்களில், எந்த பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றிடாத அளவு “Annual Grand Iftar” ஒன்றை ஏற்பாடு செய்து பௌத்த, இந்து, இஸ்லாம் மத பெரியார்களும் மஜ்லிஸின் பழைய அங்கத்தவர்களும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ். முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த சஞ்சிகையான USWA சஞ்சிகையை மும்மொழியிலான ஆக்கங்களை சுமந்து வெளியிடுகின்றது. மேலும் திறமைகளுக்கான அங்கீகரமாக உள்ளக விளையாட்டுக்கள், ஆண்களுக்கான வெளியக விளையாட்டுகள், அறிவு சார்ந்த போட்டிகள் என பல தொடர்களை நடாத்துதல், மஜ்லிஸின் Annual Visit யை ஏற்பாடு செய்தல், Fight Cancer Sri Lanka அமைப்புடன் இணைந்து புற்று நோயாளர்களுக்கு உதவ நிதி சேகரித்தல், பல்கலைக்கழக சிரமதான பணிகளில் பங்கேற்றல், இலவச வழிகாட்டல் செயலமர்வுகளை பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு வகையான சேவைகளை இன்றுவரை செயற்படுத்தி வருகிறது என்பதில் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பெருமை கொள்கின்றனர்.
களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது, Association of Islamic Students (AIS) என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த முஸ்லிம் மஜ்லிஸின் தற்போதைய சிரேஷ்ட பொருளாளராக களனி பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. M.J.M.Razi செயலாற்றுகின்றார்.
முஸ்லிம் மஜ்லிஸின் நிர்வாக அமைப்பின் தற்போதைய தலைவராக M.S.அஹ்மத், உப தலைவராக M.R.M.நபீல், செயலாளராக M.Z.F.ஸம்ரினா, உப செயலாளராக M.F.F.ஸபியா, உப பொருளாளராக N. அப்துல் ரஹ்மான், தனியார் துறை ஒருங்கிணைப்பாளராக S.M.நிசாத், பொது ஒருங்கிணைப்பாளராக M.N.M.நாசிஹ் , பிரதம ஆசிரியராக M. A. M.சிமாக் அவர்களும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
எமது முஸ்லிம் மஜ்லிஸின் இவ்வாறான வெற்றிகரமான இயக்கத்திற்கு மஜ்லிஸை முனைப்புடன் சிறப்பாக வழிநடாத்திய கடந்தகால தலைவர்களான M.N.M.நுஸ்கி (2013/2014), ஹசீப் மரிக்கார் (2014/2015), R.M.W.அக்ரம் (2015/2016), A.M.அஷ்ரான் (2016/2017), இஜாஸ் அஹமட் (2017/2018), றுக்ஷான் நிசார் (2018/2019) ஆகியோர் அளப்பரிய பங்காற்றி உள்ளனர்.
தலைமைத்துவம், உதவும் மனப்பாங்கு, நேர்சிந்தனை எனும் சிறப்பியல்புகளை கொண்ட வரலாறு பேசக்கூடிய சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதிலும் தற்கால சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை வழங்குவதிலும் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது ஒரு பெரும்புள்ளியாய் விளங்குகின்றமை உலகறிந்த விடயமே.
இன்று மட்டுமல்ல, இனி வருங்காலத்திலும் கூட இவ்வாறான சேவைகளையும் சமூக தேவைகளையும் நிறைவேற்றுவதில் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது அளப்பரிய தொண்டாற்றும் என்பது வெளிப்படை உண்மை.
இற்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் விதைக்கப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸை இன்று வானளாவும்படி வளர வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் நன்றிகளும்.
இன்று விருட்சமாய் திகழும் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது, இதுவரை காலமும் சொல்லாலும் பொருளாலும் மனதாலும் உதவி புரிந்த சகலரையும் நினைவு கூர கடமைப்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும், இதன் பின்வரும் காலமும் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வளர்ச்சியில் பங்களித்த, பங்களிக்கவுள்ள அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்!
Comments (0)
Facebook Comments (0)