நீதியானதும் நேர்மையானதுமான பொதுத் தேர்தலை முன்னெடுக்க ஜப்பான் உதவி

நீதியானதும் நேர்மையானதுமான பொதுத் தேர்தலை முன்னெடுக்க ஜப்பான் உதவி

இலங்கையில் நீதியானதும் நேர்மையானதுமான பொதுத் தேர்தலை முன்னெடுப்பதனூடாக ஜனநாயகத்தை தக்கவைத்துக் கொள்ளல் திட்டத்துக்காக 47,019 அமெரிக்க டொலர்களை (சுமார் 8.5 மில்லியன் ரூபாய்) ஜப்பானிய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவியாக இந்தத் தொகையை வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜப்பானிய தூதரகத்தின் இடைக்காலப் பொறுப்பதிகாரி கிடமுரா டொஷிஹிரோ மற்றும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ஆகியோரிடையே உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) புதன்கிழமை ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்றுப் பரவும் காலப்பகுதியிலும், இலங்கையின் மக்களுக்கு தமது வாக்களிக்கும் உரிமையை நேர்மையாகவும், நீதியான வகையிலும் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.

இலங்கையின் நீண்ட கால நட்புநாடு எனும் வகையில், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகளில் பவ்ரல் அமைப்புக்கு தனது உதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளதுடன், நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான உதவிகளை வழங்கவும் முன்வந்துள்ளது.

முன்னணி தேர்தல் கண்காணிப்பாளரான பவ்ரல், இந்தத் திட்டத்தினூடாக நடுநிலையான முறையில் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும். இதில் நாடு முழுவதிலும் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள 460 தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பதும் அடங்கியுள்ளது.

மேலும், தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்றவற்றினூடாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல்களும் வழங்கப்படும். பவ்ரல் உடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த தேர்தல் உதவிச் செயற்பாடுகளினூடாக, பொது மக்களைச் சென்றடைந்து, அவர்களையும் அரசியல் தீர்மானமெடுத்தலில் பங்கேற்கச் செய்வதை உறுதி செய்யக்கூடியதாக அமைந்திருக்கும் என ஜப்பான் எதிர்பார்க்கின்றது.

இந்த நன்கொடை தொடர்பில் பவ்ரல் கருத்துத் தெரிவிக்கையில்,

"இலங்கையில் இயங்கும் முன்னணி தேர்தல் கண்காணிப்பாளராக பவ்ரல் திகழ்கின்றது. கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற சகல தேர்தல்களினதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சுமார் 5,000 தேர்தல் கண்காணிப்பாளர்களை பவ்ரல் பணிக்கமர்த்துவதுடன், இவர்கள் நாடு தழுவிய பரந்த சிவில் சமூகக் குழுக்களையும், செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள்.

வன்முறைகளைக் குறைத்து, தேர்தல் நீதியானதும், நேர்மையான சூழலில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்து, வாக்காளர்களுக்கு தமது வாக்குகளை சுதந்திரமான முறையில் அளிப்பதற்கு உதவுவதாக இந்தச் செயற்பாடு அமைந்திருக்கும்.

வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை பவ்ரல் முன்னெடுப்பதுடன், நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான தூய அரசியலை முன்னெடுப்பதை வலியுறுத்துகின்றது. இது தொடர்ச்சியான செயன்முறை என்பதுடன், வாக்காளர் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளினூடாகவும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நடமாடல் மற்றும் சமூக இடைவெளி பேணல் போன்றன அமுலிலுள்ள நிலையில், குழுநிலை கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் பவ்ரல் தனது விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை சமூக ஊடகங்கள், அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களினூடாக மீளமைத்து முன்னெடுக்கின்றது.

கடந்த முப்பது வருட காலமாக தனது பணியை பொறுப்பான வகையிலும், வினைத்திறனான முறையிலும் பவ்ரல் முன்னெடுப்பதுடன், மக்களின் நம்பிக்கையையும் வென்றுள்ளது.

இலங்கை மக்களின் பாரிய பங்களிப்பினூடாக இந்த நிலையை எய்த முடிந்திருந்ததுடன், நன்கொடையாளர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த இரு தசாப்த காலங்களாக இந்தப் பணியை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் பங்களிப்புக்கு பவ்ரல் நன்றி தெரிவித்துள்ளது."