200,000 மேலதிக Pfizer-BioNTech தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் அமெரிக்கா
அண்ணளவாக 200,000 மேலதிக Pfizer-BioNTech தடுப்பூசி மருந்தளவுகள் அமெரிக்க மக்களின் நன்கொடையாக இன்று இலங்கையை வந்தடைந்தன. இந்த அன்பளிப்பானது கொவிட்-19இற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவிசெய்வதற்கான அமெரிக்காவின் தொடரான உறுதிப்பாட்டை செயல்முறையில் நிரூபிக்கிறது.
பெருந்தொற்று தொடர்ந்து கொண்டிருக்கும் மற்றும் புதிய திரிபுகள் தோன்றிக்கொண்டிருக்கும் நிலையில், இயலுமானவரை அதிகளவானோருக்கு தடுப்பூசியேற்றவும் மற்றும் தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பான மற்றும் மிகவும் தன்னுறுதிவாய்ந்த ஒரு உலகத்தை உருவாக்கவும், இலங்கையின் சுகாதார அமைச்சு, யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் அமெரிக்கா தனது பங்காண்மையினைத் தொடர்கிறது.
அமெரிக்கா இதுவரை இலங்கைக்கு 2.6 மில்லியன் தடுப்பூசிகளையும் மற்றும் 17.9 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான அவசர விநியோகங்கள் மற்றும் முக்கிமான சேவைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
அவற்றிற்கு மேலதிகமாக, அமெரிக்க அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரமைப்பான USAID, இத்தடுப்பூசிகளை செயற்திறனுடன் விநியோகிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்லவும் இலங்கை அரசுடன் இணைந்து பங்காண்மையுடன் பணியாற்றுகிறது.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், இப்பெருந்தொற்றின் எதிர்மறையான பொருளாதாரத் தாக்கங்களைத் தணிப்பதற்குமான அமெரிக்காவின் இந்த உதவிகள் இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் 1.1 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக, அமெரிக்கா 240 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக விநியோகித்துள்ளது.
இந்த தடுப்பூசி நன்கொடைகள் உயிர்களைக் காப்பாற்றுவதுடன் கொவிட்-19இன் பரவலைத் தாமதப்படுத்துவதற்கும் உதவும். இப்பெருந்தொற்றினை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சிறந்த உலகை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது.
Comments (0)
Facebook Comments (0)