தேர்தல் ஆணைக்குழுவிற்கு போலித் தகவல்களை வழங்கிய மு.கா
தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்தது
றிப்தி அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி போராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரை கட்சியால் வழங்கப்படாமல், போலியான தகவல்களே வழங்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இறுதிப் போராளர் மாநாட்டுக்கு முன்னரே கட்சியை விட்டுச் சென்றவர்களும், வேறு கட்சியில் இணைந்தவர்களும் கூட இதுவரை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களாகவே பெயரிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்திற்கு கடந்த ஜுன் 30ஆம் திகதி அளிக்கப்பட்ட ஆவணங்களுடனான பதிலிலேயே இந்த விடயம் அம்பலமாகியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி, பொல்கொல்லயில் இடம்பெற்றது.
இந்த பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெற வேண்டிய கட்டாய உயர்பீடக் கூட்டம் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் விபரம் உள்ளிட்ட 99 அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் போராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.
எனினும், கட்சியின் பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரை வழங்கப்படாமல், போலியான தகவல்களே வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லமும், பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமும், பிரதித் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும், பிரதிப் பொருளாளராக எம்.சீ. எஹியா கானும், போராளர் மாநாட்டு செயலாளராக முன்னாள் மாகண சபை உறுப்பினர் அஹமட் ஹையும், கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளராக முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் தெரிவுசெய்யப்பட்டனர்.
எனினும் இந்த புதிய தெரிவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மாறாக 2020ஆம் பெப்ரவரி 21ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில், கட்சியின்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவூத்தார் நெய்னா முஹம்மது - சிரேஷ்ட பிரதித் தலைவர் எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லம் - பொருளாளர் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் - பிரதி தேசிய அமைப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சியின் பிரதி பொருளாளர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போராளர் மாநாட்டுக்கு முன்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம்.மாஹீர் மற்றும் எஸ்.எல்.எம். பழீல் ஆகியோர் தொடர்ந்தும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்களாக செயற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கினங்க ஐ.எம்.மாஹீர் மற்றும் அக்கட்சியின் போராளர் மாநாட்டு செயலாளராகவும் எஸ்.எல்.எம். பழீல் அக்கட்சியின் கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளராக செயற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகயீனம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவுத்தார் நெய்னா முஹம்மது, கடந்த போராளார் மாநட்டு முன்னர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அப்பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். அஸ்லம் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் இதுவரை ராவுத்தார் நெய்னா முஹம்மதின் பெயரே தேர்தல் ஆணைக்குழுவின் ஆவணங்களில் காணப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போலியான தகவல்கள் வழங்கப்பட்டமையினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் இரண்டு கட்சிகளின் உறுப்பினராக செயற்படுகின்றார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் செயலாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, சமய மற்றும் கலாசார விவகார பணிப்பாளரகவும் பெயரிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விபரம் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படாமை தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரை நாம் தொடர்புகொண்டு கேட்டதற்கு "குறித்த போராளர் மாநாடு நிறைவடைந்த பின்னர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவிட்டேன்" என அவர் தெரிவித்தார்.
"எனினும், போராளர் மாநாட்டு அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஞாபகமூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அந்த அறிக்கை அனுப்பப்படும்" என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
மு.கா பொருளாளராக பைசால் காசீம் தெரிவு; ஜெமீல், உதுமாலெப்பைக்கு முக்கிய பதவிகள்
Comments (0)
Facebook Comments (0)