காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா?

காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா?

"அமெரிக்காவை விட காஸா 4,250 ஆண்டுகள் பழைமையானது. பலஸ்தீன் காணப்படுவது ஹமாசின் துப்பாக்கி முனையில் அல்ல. மாறாக சர்வதேச நாடுகளின் இறையாண்மையில் ஆகும். ஆகவே நிச்சயமாக ஒரு நாள் பலஸ்தீன் விடுதலை அடையும்" என நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சரும் சபை முதல்வருமான விமல் ரத்னாநயக்க தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவொன்று அண்மையில் பகிரப்பட்டதை காண முடிந்தது.

அதேவேளை, பலஸ்தீன மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கத் தயாராவுள்ளதாகவும் காஸாவில் உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் எனவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருடனான சந்திப்பின் பின்னர் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி இருவரும் ஆளும் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களாவர். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மேற்படி இருவரும் பலஸ்தீன மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தனர்.

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு அமைப்பின் இணைத் தலைவராகவும் அமைச்சர் விமல் ரத்னாநாயக்க கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறு தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது பலஸ்தீன் மக்களை மறந்துவிட்டது என்ற குற்றச்சாடொன்று பரலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினை அடுத்தே இந்த குற்றசாட்டு வீரியமடைந்துள்ளது.

ஒரு வருடங்களுக்கு மேல் காஸா பிராந்தியத்தில் இடம்பெற்று வந்த யுத்தம் அண்மையில் தற்காலிகமாக முடிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தீடிரென கடந்த வாரம் இஸ்ரேல் மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தது.

இதனால் அப்பாவி சிறுவர்கள் என ஆயிரத்துக் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த யுத்த நிறுத்த மீறலை அனைத்து நாடுகளும் கண்டித்ததுடன் அரபு நாடுகள் பல விசேட மாநாடுகளை நடத்தியது.

இவ்வாறான நிலையில், பலஸ்தீன மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அன்று மாலையே இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சினால் காஸா தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

எனினும், குறித்த அறிக்கை பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியது. குறிப்பாக காஸா விவகாரத்தில் வெளிநாட்டமைச்சின் ஊடக அறிக்கை அரசாங்கத்தின் கண்டன அறிக்கை அல்ல என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், நிசாம் காரியப்பர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உக்கிரம் அடைந்து வரும் காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி அரசாங்கத்தின் கண்டன அறிக்கை அல்ல என்றும், மூன்றே மூன்று வரிகளைக் கொண்ட அந்த செய்தியில் இஸ்ரவேலின் அடாவடித்தனத்தையோ, அதற்கான அமெரிக்காவின் ஆதரவையோ கண்டிக்கும் ஒரு சொல்  கூட  இல்லாதது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

புனித ரமழான் மாதத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலஸ்தீன முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,  காசா மீது பாரிய தாக்குதல்களை நடத்தி ,அங்கு இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலின் ஈனச் செயலை பல்வேறு உலக நாடுகளும் கண்டித்தும், அந்நாட்டுக்கு எதிராக சில ராஜதந்திர நடவடிக்கைகளையெடுத்தும் இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த மனிதாபிமான விடயத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல்  தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றது.

இதனை சுட்டிக்காட்டி  எங்கள் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதாரபூர்வமான  அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் வெளியிட்ட பின்னணியில், வெறுமனே  அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு யாரும் கையொப்பம் இடாத ஓர் உப்புச்சப்பற்ற ஊடகச் செய்தியை மட்டும் வெளியிட்டு, இந்நாட்டு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்கு எத்தனித்துள்ளதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களில் அரசாங்கம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும" என்றார்.

இதேவேளை, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஓட்டிய கொம்பனித் தெரு பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுவனொருவன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானிக்கும் ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பிய போது, பலஸ்தீன மக்களுக்காக ஸ்டீக்கர் ஓட்டியவர்கள் நாங்கள். அதனால் இவ்வாறான கைது ஒருபோதும் எங்கள் அரசாங்கத்தில் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஆட்சி வருவதற்கு முன்னர் பஸ்தீன மக்களுக்காக மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்த விடயம் யாவரும் அறிந்த உண்மையாகும். அதனை ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தைப்படுத்துவது சிறந்தல்ல. ஆட்சிக்கு பின்னர் ஒரு நாட்டின் அரசாங்கமாக பலஸ்தீன மக்களுக்கு செய்ய வேண்டியதை உடனடியாக செய்ய வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பலஸ்தீன மக்களுக்காக பல்வேறு தடவைகள் குரல்கொடுக்கப்பட்டுள்ளன. அது போன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.