கொழும்பில் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் - 2022

கொழும்பில் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் - 2022

தமது உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழிற்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு  வன்முறைகளை  எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி அழுத்தம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு - 2022"   எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை பி.ப 5.00 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் திட்டமிட்டுள்ளது.

"படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்" என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாகும்.

ஊடகவியலாளர்கள் சட்டத்தரணிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக்கொள்ள இருக்கும்; இந்த நிகழ்வில் "பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் மறைந்துள்ள ஊடக அடக்குமுறை" தொடர்பில் சட்டத்தரணி ஏமிஸா டிகெல், "ICCRP சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீறப்படல்" தொடர்பில் சட்டத்தரணி பிரபோத ரத்னாயக்க, "அரச பாதுகாப்பு மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு" தொடர்பில் உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தேவநாயகம் பிரேம்நாத், "புலனாய்வு ஊடகவியலாளர்களை கண்காணித்தல் மற்றும் இலக்குவைத்தல்" தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த ரூணுகே ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகவும் ஜனவரி 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கும் ஊடக அமைப்புகளின்  கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது