தெஹிவளை தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் விடுதலை
எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டலில் குண்டு ஒன்றினை வெடிக்கச் செய்த தற்கொலைதாரியான ஜெமீலின் சகோதரர் ஏ.எல். ஹகீம் உள்ளிட்ட மூவர் சுமார் இரு வருட தடுப்புக் காவலின் பின்னர் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் உள்ள பீ 10263 எனும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி, தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு 3 பொலிஸ் அதிகாரிகளை கொலைச் செய்தமை மற்றும் சிலருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர், சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருடன் பிரதான விசாரணைகளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விவகாரத்தில் முன்னெடுத்திருந்தது.
ஆரம்பத்தில் சுமார் 21 சந்தேக நபர்கள் இந்த வழக்கு கோவையின் கீழ் கைது செய்திருந்த பொலிஸார் கடந்த 2020 ஜனவரி 17ஆம் திகதி 6 சந்தேக நபர்களை மட்டும் இந்த விவகாரத்தில் பெயரிட்டு மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.
இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம், மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட், ஏ.எல். ஹகீம் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீல், நூர்தீன் மொஹம்மட் இர்பான், மொஹம்மட் இப்ராஹீம் இப்லால் அஹமட் ஆகியோரே இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.
அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்த சட்ட மா அதிபர், முதலில் நூர்தீன் மொஹம்மட் இர்பானை விடுதலை செய்ய ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் கடந்த வாரம், ஏ.எல். ஹகீம் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இப்லால் அஹமட் ஆகியோரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன்படி அவ்விருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எஞ்சியுள்ள மூன்று பேருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப் பகிர்வுப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.
பிரதானமாக 2019 ஏப்ரல் 21 தாக்குதல் நடந்த தினத்தன்று, தெஹிவளை குண்டுதாரியின் சகோதரரான ஹகீம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்குதல்களுக்கு முன்னரேயே அவர், தனது சகோதரரின் நடத்தை குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே அவர் கைதுச் செய்யப்பட்டு இரு வருடங்கள் வரை தடுப்பில் இருந்து வந்தார்.
எவ்வாறாயினும் அவருக்கு எதிராக குற்றம் சுமத்த சான்றுகள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சமூக செயற்பாட்டாளரான ஏ.எல். ஹகீம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம். நளீமுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)