இலங்கைக்கான முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் உறுதிப்படுத்தினர்
கொழும்பைத் தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுநோய் பரவி வரும் இந்த சூழ்நிலையில், இலங்கை மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் அளித்த ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக குறித்த அரசாங்கங்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் அப்துல்நாசர் எச். அல் ஹார்தி, குவைத்தின் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர், எகிப்தின் தூதுவர் ஹூசைன் எல் சஹார்டி, பலஸ்தீன அரசின் தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரக விடயங்களுக்கான பொறுப்பாளர் ஹூமைட் அல் தமீமி, கட்டாரின் ஹமாத் அல் புவைனைன், ஈராக்கின் குதைபா அஹமட் அல்கெரோ மற்றும் லிபியாவின் அமைச்சர் அமர் ஏ.எம். முப்ஃதா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலின்போது கலந்துகொண்ட தூதுவர்களும், தூதரகங்களின் தலைவர்களுமாவர்.
மத்திய கிழக்கில் மிகப்பெரியதொரு சமூகத்தினர் வசித்தும், பணிபுரிந்தும் வருவதனால், அந்த இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பராமரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் குணவர்தன பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்திலிருந்து நாட்டிற்கு மீளத் திரும்பி வருபவர்களை முறையாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற பொறிமுறையின் மூலமாக, அரபு உலகத்துடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான இலங்கையின் ஆர்வத்தை அமைச்சர் குணவர்தன மேலும் வெளிப்படுத்தினார். இலங்கைத் தேயிலை மற்றும் பழங்கள், மரக்கறிகள் போன்ற ஏனைய உற்பத்திகளுக்குமான சந்தை அணுகலை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
அணிசேரா வெளியுறவுக் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றும் என அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் பலஸ்தீன மக்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத உரிமைகளையும், சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசிற்கான அவர்களது உரிமையையும் இலங்கை தொடர்ந்தும் ஆதரித்து வருவதை அவர் நினைவு கூர்ந்தார். பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் மீதான இலங்கையின் அர்ப்பணிப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறைவடையாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான சவூதியின் நிதி, குவைத் நிதி மற்றும் ஏனைய நிதி முகவர்கள் போன்ற மத்திய கிழக்குப் பிராந்தியத்தால் வழங்கப்பட்ட அபிவிருத்தி சார்ந்த உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்த அதே வேளையில், எதிர்காலத்தில் இதுபோன்ற அபிவிருத்திகளுக்கான மேலதிக உதவிகளை அமைச்சர் குணவர்தன வரவேற்றார். இலங்கையர்கள் சீராக நாட்டிற்கு மீளத் திரும்புவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க விவரித்தார்.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளித்தமைக்காக தனது நன்றிகளைத் தெரிவித்த பலஸ்தீன அரசின் தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், மத்திய கிழக்குடனான இலங்கையின் சிறந்த உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.
வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Comments (0)
Facebook Comments (0)