இடைநடுவில் தெற்காசிய நாடுகள்

இடைநடுவில் தெற்காசிய நாடுகள்

P.K. பாலச்சந்திரன்

தெற்காசியாவில் இந்த வருடம் தேர்தல் வருடமாக மாறி வருகின்றது. இந்த வருடம் பங்களாதேஷ் மற்றும் பூட்டான் நாடாளுமன்றத் தேர்தல்களுடன் மலர்ந்தது.

ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை ஆகியன ஜனாதிபதியை அல்லது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்க உள்ளன.

தேர்தல்கள் ஒரு சமூகத்தில் உள்ள பிளவுகளையும், அதிகாரங்கள் அல்லது சித்தாந்தங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதையும் வெளிப்படுத்துகின்றன.

அவை மக்களின் விருப்பங்களையும் வாக்காளர்கள் தங்களது நாடு செல்ல விரும்பும் திசையையும் சுட்டிக்காட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுத் தரப்பினரின் வகிபங்கும் வெளிப்படுகின்றது.

பங்களாதேஷ்

இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பங்களாதேஷ் மக்களின் விருப்பத்தை முதலில் பரிசோதித்தது.

எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP’s) தேர்தலைப் புறக்கணித்தமைக்கு நன்றி  கூறி, ஆளும் அவாமி லீக் (AL) மற்றும் அதன் தலைவரான பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக இலகுவாக முன்னேறினார்.

இது அவர் பிரதமராக பதவியேற்கின்ற ஐந்தாவது சந்தர்ப்பமாகும். ஆனால் வெற்றி பெற்ற போதிலும், ஹசீனாவின் ஜனநாயக நற்சான்றிதழ்கள் சிதைவடைந்திருந்தன. பங்களாதேஷத்தை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான உயரிய பாதையில் கொண்டு சென்ற வினைத்திறனான, துணிச்சலான தலைவராக அவரது பாராட்டத்தக்க செயற்பாடு, ஜனநாயகமற்ற தேர்தலின் காரணமாக அதன் ஒளியை இழந்தது.

ஹசீனா ராஜினாமா செய்ய மாட்டார் என்பதுடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு நடுநிலையான பராமரிப்பாளரின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மாட்டார் என்பதால் BNP தேர்தலை புறக்கணித்தது.

ஹசீனாவின் வாதம் இரு பக்கமுடையது: 2011 இல் பராமரிப்பாளர் முறைமை நடுநிலைமையை உறுதி செய்யாமையால் ஒழிக்கப்பட்டதுடன், மற்றைய ஜனநாயக நாடுகளில், ஏற்கனவே உள்ள அரசாங்கங்களால் தேர்தல்கள் நடாத்தப்பட்டன என்பனவே அவையாகும்.

ஹசீனா அவரது வலுவான கை முறைமைகளை வெறுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தாராளவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்தை புறக்கணித்து, மீண்டும் மீண்டும் தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகமா என்று யாரும் BNPயிடம் கேட்கவில்லை.

BNP இன் புறக்கணிப்புகள் AL அதிகார ஏகபோகத்தை அனுபவிப்பதற்கு வழிவகுத்தது. புறக்கணிப்பு மக்களிடையே அரசியல் அக்கறையின்மையை பரப்பியுள்ளது. புறக்கணிப்புகளால் BNP சிதைந்துவிட்டது. அதன் நடத்தை மக்களை அரசியல் விருப்பற்றவர்களாக மாற்றுவதற்கு பங்களித்துள்ளது.

குடித்தொகை அரசியல் விருப்பற்றவர்களாக மாறுவதால், செயற்பட வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சமநிலைகள் மறைந்து, சர்வாதிகார ஆட்சி ஏற்படுகிறது.

பங்களாதேஷ அரசியல் விமர்சகரான அஃப்சன் சௌத்ரி இந்த எழுத்தாளரிடம் கூறியது போல், பங்களாதேஷ் அடிப்படையில் ஓர் அரசியல் சார்பற்ற விவசாய சமூகம் என்பதுடன், இதன் பிரதான அக்கறை வாழ்வாதாரமாகும்.                                                                    

வாழ்வாதாரத்தை வழங்குகின்ற எந்தவொரு தலைவரும் அதிகாரம் பெற வாக்களிக்கப்படுகிறார் அல்லது ஆட்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஜனநாயக சுதந்திரங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

இந்த கரிசனங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உரிமைக் குழுக்களுக்கு விடப்படுகின்றன,” என்று சவுத்ரி கூறினார்.

பங்களாதேஷின் பொருளாதாரத்தை சீராகவும் வேகமாகவும் மேம்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை ஹசீனா செயற்படுத்தியுள்ளார்.

ஓர் கருத்துக்கணிப்பு தொலைக்காட்சி பங்கேற்பில் ஹசீனா கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் அபிவிருத்தி 7.25%; தனிநபர் வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்தது; வரவு செலவுத் திட்ட அளவு 12 மடங்கு அதிகரித்துள்ளதுடன் வருடாந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (ADP) 13 மடங்கு அதிகரித்துள்ளது;

GDP இன் அளவு 12 மடங்கு அதிகரித்தது; அந்நிய செலாவணி கையிருப்பு 36 மடங்கு அதிகரித்ததுடன்; ஏற்றுமதி வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது; வருடாந்த வெளிநாட்டு செலாவணி ஆறு மடங்கு அதிகரித்தது; வெளிநாட்டு முதலீடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது; தொழிலாளர்களின் ஊதியம் ஒன்பது மடங்கு உயர்த்தப்பட்டது’; அந்நியச் செலாவணி கையிருப்பு 36 மடங்கு அதிகரித்து ஏற்றுமதி வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

வறுமை விகிதம் 41.51% இலிருந்து 18.7% ஆகக் குறைந்துள்ளது என்றும், குடிநீர் பெறுபவர்கள் 55% இல் இருந்து 98.8% ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுகாதார கழிப்பறைகள் 43.28% இலிருந்து 97.32% ஆக அதிகரித்துள்ள அதே சமயம் குழந்தை இறப்பு ஆயிரத்திற்கு 84லிருந்து 21 ஆக குறைந்துள்ளது. தாய்மை இறப்பு விகிதம் 100,000 க்கு 360 லிருந்து 100,000 க்கு 156 ஆக குறைந்துள்ளது. சராசரி மனித ஆயுட்காலம் 72.8 ஆண்டுகள் வரை சென்றுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் மின் உற்பத்தி திறன் எட்டு மடங்கு அதிகரித்துள்ள அதே நேரத்தில் மின் நுகர்வு விகிதம் 28% இலிருந்து 100% வரை அதிகரித்துள்ளது கல்வியறிவு விகிதம் 76.8% ஆக அதிகரித்த அதே நேரத்தில் தொழில்நுட்பக் கல்வியின் விரிவாக்கம் 22 மடங்கு அதிகரித்துள்ளது.

தானிய உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2009 இல், பங்களாதேஷின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 102 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் 2023 இல் அது 450 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

முன்னால் உள்ள சவால்கள்

BNP அமைப்பு ரீதியாக பலவீனமாக இருப்பதால், அது அதன் பாரம்பரிய சித்தாந்த பங்காளரான இஸ்லாமிய ஜமாத்-இ-இஸ்லாமிக்கு ஒத்துழைக்க வேண்டியதுடன், அதன் பிற்போக்கு சித்தாந்தம் பங்களாதேஷ மக்களின், குறிப்பாக பெண்களின் சமூக முன்னேற்றத்தை எதிர்ப்பதுடன் அண்டை நாடான இந்தியாவுடன் மோதல்களைக் கூர்மைப்படுத்துகிறது.

BNP - ஜமாத்-இ-இஸ்லாமிய கூட்டணி தொடர்ந்து இந்து மற்றும் இந்திய எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டும். இது ஹசீனாவை கட்டுப்படுத்த விரும்புவதுடன் தெற்காசியாவில் இந்தியாவின் முதன்மைக்கு சவாலளிக்க விரும்பும் அமெரிக்காவின் மறைமுக ஆதரவைப் பெறவுள்ளது.

போதைப்பொருள் மற்றும் பிரச்சினைக்குரிய அரசியல் எதிரிகளை சமாளிப்பதற்கு துணிவாக பலத்தை பயன்படுத்தியதற்காக பங்களாதேஷ அதிகாரிகள் மீது அமெரிக்கா இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

பங்களாதேஷம் சீனாவிற்கு எதிரான இராணுவமயமாக்கப்பட்ட இந்திய - பசிபிக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் டாக்கா இப்போது இல்லாத பண்பான, ஓர் வலுவான பொருளாதார உள்ளடக்கத்துடனான இந்திய-பசிபிக் கூட்டணியை விரும்புகிறது.

இருப்பினும், ஹசீனா அமெரிக்காவை எதிர்த்துப் போராட முடியாது, ஏனெனில் அமெரிக்கா பங்களாதேஷிய பொருட்களை ஏற்றுமதி  செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களாக இருந்தாலும் ஹசீனாவின் நிலையான ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். புதுடில்லி இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய போராளிகளுக்கு புகலிடம் மறுப்பது தொடர்பில் ஹசீனாவை நம்பியிருக்கிறது.

சீனாவும் இந்தியாவும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளன. சீனா மேலதிகமாக ராணுவ தளவாடங்களை வழங்கியுள்ளது.

அவரது வெற்றி, சர்ச்சைக்குரியதாக இருந்தால், உள்நாட்டு முரண்பாடுகளை நிர்வகித்தல் மற்றும் புவிசார் அரசியலில் இறுக்கமான கயிற்றில் நடத்தல் போன்றவற்றில், ஷேக் ஹசீனா, தேர்தலுக்குப் பின்னரான சவால்களை திறமையுடன் சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூட்டான்

பூட்டான் அதன் தேசிய சட்டமன்றத்திற்கு ஜனவரி 9 அன்று தேர்தலை நடாத்தியது. முன்னாள் பிரதம மந்திரி ஷெரிங் டோப்கேயின் மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 47 ஆசனங்களில் 30 ஆசனங்களை வென்றது. தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நடாத்தப்பட்டது.

டோப்கேயின் தேர்தல் பிரச்சார அறிக்கையானது, எட்டு பேரில் ஒருவர் "உணவுக்கான அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பது" மற்றும் பிற தேவைகளைக் காட்டும் அரசாங்க புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியது.

உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பூட்டானின் பொருளாதாரம் 1.7% வளர்ச்சியடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம்  தொடர்ச்சியாக உள்ள பிரச்சினையாகும், இது நாட்டின் பொருளாதாரத் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற இளைஞர்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாக, பூட்டானுக்கு உலக சந்தையில் நேரடி அணுகல் இருப்பதில்லை. இது இந்தியாவால் திணறுவதாக உணர்கிறது.

இதனால் பீதியடைந்து, பிராந்திய சலுகைகளை கொடுத்து சீனா மூலம் பயன்பெற முயல்கிறது. இந்த செயற்பாட்டில், இது புதுடில்லியில் பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது.

பூட்டான் இந்தியாவைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை ஈடுசெய்ய அரசியல் மற்றும் இராஜதந்திர சுதந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக முயற்சிக்கிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அதன் தேசிய சட்டமன்றம் மற்றும் மாகாண தேர்தல்கள் பெப்ரவரி 8-ம் திகதி நடாத்த உள்ளது. கடந்த ஆண்டு குழப்பகரமானதாக இருந்தது. அரசியல், பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரிவுகளில் பாகிஸ்தான் பல நிச்சயமற்ற நிலையைக் கண்டது.

2024ல் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வினாக்கள்: பாகிஸ்தான் அரசியல் ஸ்திரத்தன்மையைக் காணுமா? எந்த கட்சி அதிகாரத்திற்கு வர உள்ளது?

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) இப்போது நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பான ராணுவத்தினால் இலக்கு வைக்கப்பட்ட நிலையிலுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் அல்லது PML(N), 2018 தேர்தலுக்கு முன்பு அதே நிச்சயமற்ற நிலையில் இருந்தது.

2018ஆம் ஆண்டில், Deep State அல்லது ஸ்தாபனம் என்றும் அழைக்கப்படும் PTI இராணுவத்தால் அதிகாரத்தில் நிறுவப்பட்டது. Deep State மத்தியிலும் அனைத்து மாகாணங்களிலும் அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ளுகின்றது.

Deep State ஆதரிக்கும் கட்சி அல்லது தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இராணுவம் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை கூட அகற்றுகிறது என்று தேசிய முன்னேற்றக் கற்கை நிறுவனத்தின் முரண்பாடு மற்றும் பாதுகாப்பு கற்கைகள் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி D. சுபா சந்திரன் கூறுகிறார்.

இந்த நேரத்தில், இராணுவம் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் அல்லது PML(N) இற்கு ஆதரவளிக்கிறது. இராணுவம் அதன் உளவுப்பிரிவு மூலமாக தனது வாடிக்கையாளரின் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்க அரசியல் கட்சிகள் அல்லது பினாமிகளை உருவாக்கி பேணுகின்றது.

2018 ஆம் ஆண்டில், Deep State பஞ்சாபில் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) இனை உருவாக்கியதுடன், சிந்துவில் முத்தாதியா குவாமி இயக்கத்தை பிளவுபடுத்தியதுடன் பலுசிஸ்தானில் பலுசிஸ்தான் அவாமி கட்சியை மூழ்கடித்தது.

இந்த ஆண்டும் அரசியல் பொறிமுறை நடைபெறுகிறது என்று சுபா சந்திரன் கூறுகின்றார். நவாஸ் ஷெரீப்பின் PML (N), Deep State PTIயின் இம்ரான் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை சிறையில் அடைத்து தகுதி நீக்கம் செய்தது. இம்ரான் தனது கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டையை கூட மீட்பதற்கு சட்டரீதியாக போராட்டம் நடாத்தி வருகிறார்.

பெரும்பாலான PTI தலைவர்கள் இம்ரானை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் ஜஹாங்கீர் கான் தரீன் தலைமையிலான இஸ்தேகாம்-இ-பாகிஸ்தான் கட்சி (IPP) என்ற புதிய கட்சியில் இணைந்துள்ளனர். பஞ்சாபில் PML(N) உடன் IPP ஒப்பந்தம் செய்ய வைப்பதற்கு Deep State முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

அது எப்படியிருந்தாலும், PTIயும் அதன் தலைவர் இம்ரான் கானும் பஞ்சாபிலும் உண்மையில் பாகிஸ்தான் முழுவதிலும் பெரும் பிரபலமாக உள்ளனர். ஸ்தாபனத்தின் அதிகாரத்தை மேலோங்கி புகழ் வெற்றிபெறுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்த வரையில், நவாஸ் ஷெரிப்பின் அரசாங்கம் குறைந்தபட்சம் இருதரப்பு வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவுவதற்காகவும் இந்தியாவுடன் நட்பாக இருக்க முயற்சிக்கும்.

ஆனால் இராணுவத்தின் ஆதரவுடன், 2019 இல் இந்திய அரசியலமைப்பின் 370 வது உறுப்புரையை ரத்து செய்வதன் மூலமாக பறிக்கப்பட்ட காஷ்மீருக்கான சுயாட்சியை இந்தியா மீள வழங்க வேண்டும் என்று ஷெரீப் தொடர்ந்து வலியுறுத்துவார். இந்தியா அதனை கருத்திலெடுக்காது என்பதுடன், அவ்விடயத்துடன் பதற்றம் தொடரும்.

இம்ரான் கானால் சேதப்படுத்தப்பட்ட அமெரிக்காவுடனான உறவுகளை நவாஸ் சரிப்படுத்துவார். தன்னை பதவி கவிழ்ப்பதற்கு அமெரிக்கா சதி செய்வதாக இம்ரான் குற்றம் சாட்டியிருந்தார். ஷெரீப் வெற்றியை அமெரிக்கா எதிர்பார்த்த நிலையில், IMF 3 பில்லியன் டொலர் அவசர உதவியின் கீழ் பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

காத்திருப்பு ஏற்பாட்டின் (SBA) கீழான மொத்த வழங்கல் இப்போது 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன், இது தோல்வியடைந்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) அதிக அளவில் முதலீடு செய்துள்ள சீனாவுடன் பாகிஸ்தான் தொடர்ந்து நல்லுறவைக் கொண்டிருக்கும்.

இந்தியா

மே 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, பொதுவாக பாஜக வெற்றிக் குதிரையாகக் கருதப்படுகிறது. இது மோடியின் நீடித்த பிரபல்யத்தை அடிப்படையாகக் கொண்டதென சர்வதேச சமாதானத்திற்கான கார்னகி அறக்கட்டளையின் மிலன் வைஷ்ணவ் கூறுகின்றார்.

அவர் நவம்பர் பிற்பகுதியில் கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 78% பேர் மோடியின் செயற்பாட்டை அங்கீகரித்ததாக குறிப்பிட்ட "Morning Consult" இனை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தியா டுடேயின் இரு ஆண்டுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற “Mood of the Nation” கருத்துக்கணிப்பு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்று தொடர்ந்து குறிப்பிடுகின்றது.

ஆனால் மோடி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. இந்தியா என்ற சுருக்கப் பெயரால் அறியப்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டணி, வாக்காளர் பதவி சீரமைப்பு பிரச்சினைகளை தீர்த்து வைத்தால், BJP - NDA இனை தோற்கடிக்க முடியும்.

ஆனால் இந்தியா ஓர் மாறுபட்ட மற்றும் பரஸ்பரமாக விரோதமுடைய குழுவாகும். ஒரு ஜனரஞ்சமான தலைவர் ஒற்றுமையை உருவாக்க முடியும் எனினும், ஆனால் ஒரு ஜனரஞ்சமான தலைவர் இன்னுமில்லை. மோடியின் பிரசன்னத்திற்கு இணையாக யாரும் இல்லை.

இந்தியாவில் உள்ள இரண்டாவது குறை என்னவெனில், வேகமாக முன்னேற விரும்பும் இந்தியர்களை ஈர்க்கின்ற மோடியின் இந்து தேசியவாத மற்றும் முன்னோக்கு பொருளாதார விபரிப்பை எடுத்துக்கொள்வதற்கான சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார விவரிப்பு இருக்கவில்லை.

இந்தியா கூட்டணி, இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துவதுடன், பொருளாதார முன்னேற்றம் குறித்த மோடியின் கூற்றுகளை சட்டப்பூர்வமற்றதாக்கினாலும், சாமானியர்களுக்கு சாதனை உணர்வை வழங்குவதற்காக இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை மோடி முன்னிலைப்படுத்துகிறார்.

மோடி காலத்தின் மனநிலையை பிரதிபலிக்கின்ற அதே நேரத்தில் ராகுல் காந்தி இருண்ட பக்கத்தை சுட்டிக்காட்ட முயற்சிக்கிறார். மோடி இந்து - முஸ்லிம் பிரிவினையை கூச்சமின்றி பயன்படுத்தி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆனால், கடந்த சில நாட்களாகவே, முஸ்லிம்களை வெல்லும் முயற்சியில் மோடி ஈடுபட்டார். அவர் சவுதி அரேபியாவிடமிருந்து மெக்கா செல்லும் இந்திய முஸ்லிம் யாத்ரீகர்களுக்காக 150,000 ஒதுக்கீட்டைப் பெற்றார். அவர் அஜ்மீரில் உள்ள ஒரு முஸ்லீம் கோவிலுக்கும் மரியாதை செலுத்தினார். அவரது அரசாங்கம் பௌத்த சுற்றுலாத்தளம் போன்று சூஃபி (இஸ்லாமிய) மத யாத்திரை சுற்றுலாத்தளம் ஒன்றை அமைக்க உள்ளது.

இந்தியா வகுப்புவாத பிரிவினையை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறது, ஆனால் பயனற்றது. சில அரசியல் அல்லது பொருளாதார பேரழிவுகள் நிகழவில்லை எனில், இப்போது முதல் மே வரையிலான காலகட்டத்தில், மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இலங்கை

இலங்கையில் செப்ரெம்பரில் ஜனாதிபதி தேர்தலும் அதன்பிறகு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசியல் நிலவரம் குறித்து இன்னும் தெளிவில்லை. எந்தவொரு தலைவரும் அல்லது கட்சியும் முன்னணியில் இருப்பதாகத் தெரியவில்லை.

களத்தில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க; சமகி ஜன பலவேகய (SJB) தலைவரான சஜித் பிரேமதாச; தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரான அனுரகுமார திஸாநாயக்க ஆகியோராவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஒன்றில் அரசியல் சார்பற்ற பலம்மிக்க தொழில் அதிபரான தம்மிக்க பெரேராவை நிறுத்தலாம் அல்லது விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாம்.

முன்னதாக நடாத்தப்பட்ட ஓர் கருத்துக் கணிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைத் தொடும் விலைக்கு எதிரான பொதுமக்களின் கோப அலையில், NPP இன் திஸாநாயக்க முன்னணியில் இருப்பார் என்று சுட்டிக்காட்டியது.

NPP இன்னும் பதவிக்கு வராததால் பல இளைஞர்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிப்பிழந்த ராஜபக்ச சகோதரர்களின் கட்சியான SLPP, நாட்டின் அரசியல் அமைப்பு வீழ்ச்சியடையாமல் இருப்பதற்காக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரித்தாலும், அது தீர்மானிக்கப்படாமல் உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் கட்சிகள் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தீர்மானமெடுக்காமல் உள்ளன. இந்திய வம்சாவளி தமிழர்கள் வெல்லும் குதிரையை ஆதரித்த வரலாறு உள்ளது.

விக்கிரமசிங்கவின் எதிர்ப்பாளர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை நுகர்வோரின் பைகளில் பணம் குறைவடைந்து வருவது முக்கிய பிரச்சினையாகும். புதிய வரிகள் குறிப்பாக அதிகரித்த VAT விகிதங்கள் மக்களை கடுமையாக பாதித்துள்ளன.

அதன் பாதுகாப்பில், வரி சீர்திருத்தங்கள் மற்றும் வரி வசூலிப்பு தொடர்பான IMF இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது. 2022 இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம், ஒரு வருடத்திற்குள் ஒற்றை இலக்க நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.

அந்நியச் செலாவணி வரத்து அதிகரித்து,சென்மதி நிலுவையின் நிலையை மேம்படுத்துகிறது. IMF இனுடைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இரண்டு தவணைகள் பெறப்பட்டதன் காரணமாக, ஏப்ரல் 2022 இல் மிகக் குறைந்த அளவில் இருந்த மொத்த உத்தியோகபூர்வ இருப்புக்கள் (GOR), 2023 இன் இறுதியில் US$ 4.4 பில்லியனாக மேம்பட்டது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் பிற வரவுகளில் இருந்து வருமானதில் முனைப்பான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதியும் உதவியுள்ளது. வரி வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப் பொருட்களின் விலைகளும் வினைத்திறனான செலவீனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களின் நிதி செயற்திறன் மேம்பட்டுள்ளது.

கடன் சுமையைக் குறைப்பதற்கு, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் மேம்படுத்துகையை (DDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடன் மறுசீரமைப்பிற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குபவர்கள் குழு (OCC) மற்றும் சீனாவின் EXIM வங்கியுடன் கொள்கையளவிலான ஓர் ஒப்பந்தம் (AIP) எட்டப்பட்ட அதே சமயம் மற்றைய கடன் வழங்குனர்களுடன் AIP ஐ அடைவதற்காக நன்நம்பிக்கை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அடிப்படையான பணவீக்க அழுத்தங்கள் தணிந்தமையால் யூன் 2023 முதல் பணவீக்க கொள்கை படிப்படியாக தளர்த்தப்பட்டது. சந்தைக் கடன் வட்டி விகிதங்களின் படிப்படியான இயல்புநிலையானது முதலீட்டாளர் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்தியது.

எவ்வாறாயினும், பொதுமக்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில், பெப்ரவரியில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்றும், VAT விகிதம் 18% லிருந்து முன்னிருந்த 15% ஆக குறைக்கப்படும் என்றும் UNP வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வணிக வாய்ப்புகள் இன்னும் போதுமான அளவு மேம்படாததால் தொழிற்துறை வரிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும், நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எவ்வாறான கருத்துக்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதை எவராலும் கணிக்க முடியாது. வாய்ப்புகள் சமமாக உள்ளன.

P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.