குடும்ப ஒத்துழைப்பும், அயராத உழைப்புமே என் சாதனைக்கான அடித்தளம்: 5 தங்க விருதுகளை வென்ற சியாமா
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 'சிறந்த மாணவர் விருது' உள்ளிட்ட ஐந்து விருதுகளை அப்பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையினைச் சேர்ந்த எம்.ஏ. பாத்திமா சியாமா பெற்றுக்கொண்டார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி நடைபெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 22ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் போதே காலியினை பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கான இந்த விருதுகள் கிடைக்கப் பெற்றன.
Best Academic Performance in the University, Best Overall Performance in the Faculty, Best Performance in Economics in the Department, Best performance in Monetary Economics and Applied Economics in the Department மற்றும் Best Performance in the Faculty ஆகிய ஐந்து விருதுகளையே இவர் சுவீகரித்துக் கொண்டார்.
இவருடனான விசேட நேர்காணலொன்றை விடியல் இணையத்தளம் மேற்கொண்டிருந்தது. அதன் முழுமை:
1. உங்களைப் பற்றி அறிமுகமொன்றை வழங்கவும்?
காலி - ஹாலிவெல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட நான், தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை காலி, முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தான் கல்வி கற்றேன். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர். உயர் தரத்தில் வணிகப் பிரிவில் சித்தியடைந்ததன் மூலம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினேன்.
2. உங்களுக்கான இந்த விருதுகள் என்று அறிவிக்கப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு காணப்பட்டது?
உண்மையில் இந்த பதக்கங்கள் கிடைத்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாகும். மகிழ்ச்சியை விபரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஒன்று, இரண்டு அல்ல, ஐந்து பதக்கங்கள் கிடைக்கும் என்று நான் நம்பவுமில்லை, எதிர்ப்பார்க்கவுமில்லை. திடீரென என் பெயரை அழைத்த போது அத்தருணம் என்னால் மேடைக்கு ஏறமுடியாத அளவிற்கு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.
அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் அதுவும் பெற்றோருக்கு முன்னால் பதக்கங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்;. இறைவனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் மிகையாகாது.
3. இந்த விருதுகளை அடைவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தீர்கள்?
இந்த விருதுகளை பெறுவதற்காக நான் அதிக முயற்சி செய்தேன். உண்மையில் எங்களது பீடத்தில் பொருளியல் பாடத்திற்கான இரண்டு விருதுகள் உண்டு என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.
அது தவிர்ந்து இவ்வாறான மேலதிக விருதுகள் உள்ளதென்பது பட்டமளிப்பு விழாவில் தான் அறிந்து கொண்டேன். ஏற்கனவே உறுதியாக தரப்படவிருந்த இரண்டு விருதுகளுக்கும் நான் அயராது முயற்சி செய்தேன்;.
எனது பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட பெண்மானவர்கள் இருவரின் உதவியுடன் குறித்த இரண்டு விருதுகளுக்காக கடுமையாக உழைத்தேன். இதற்காக பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.
குறிப்பான அந்தப் பாடங்களுக்கான புத்தங்களை நூலகத்தில் தேடி, அதில் குறிப்புகள் எடுத்து படித்தேன். அதுமட்டுமல்லாது மேலதிக நேரம் ஒதுக்கி, முழு கவனத்தையும் அதன் பால் செலுத்தி முயற்சித்தேன். சிறு விடயங்களிலும் கூட அலட்சியமில்லாது கவனஞ்செலுத்தி இவ்விரு விருதுகளை வெல்ல உழைத்தேன்.
4. இவ்வாறானதொரு பாரிய சாதனையை நிலையாட்டுவதற்காக பாடுபட்டபோது எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்கினீர்கள்?
நிறைய சவால்கனை எதிர்நோக்கினேன். பாடசாலை முதலே கல்விக்காக பல சவால்களை எதிர்கொண்டேன். முதலாம் தரம் முதல் உயர் தரம் வரை ஒரே பாடசாலையில் படிப்பதற்காக ஹாலிவெல கிராமத்தில் இருந்து நகரத்தில் உள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு ஒவ்வொரு நாளும் செல்வதே பெரிய சவாலாக இருந்தது.
சில சமயம் பஸ்ஸில் அல்லது முச்சக்கர வண்டியில் நானும், சகோதரிகளும் நீண்ட தூரம் பயணிப்போம். புலமைப்பரிசில், சாதாரன தரம் மற்றும் உயர் தரங்களுக்கு மேலதிக வகுப்புகள் செல்வற்கு தூரம் பெரும் தடையாக இருந்தது.
எங்கள் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் யாருமில்லாமையினால் தந்தை தான் எல்லாவற்றிற்குமே எங்களுடன் வரவேண்டிய நிலைமை காணப்பட்டது. பல்கலைக்கழம் நுழைந்தவுடன் இவ்வாறான பெரும் போரட்டங்கள் அரிதாகவே காணப்பட்டது எனலாம். எனினும் எனது வீட்டிற்கும் பல்கலைக்கழகத்திற்கும் தூரம் நீண்டதாக காணப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அங்கு விடுதி வசதியுடன் சேர்த்து அனைத்திற்குமான சலுகைகளும் வழங்கப்பட்டது. எந்தவொரு குறையும் இன்றி எனது கல்வி சார்ந்த நடவடிக்கைகளை பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்து சென்றேன். குறிப்பாக பாதுகாப்பிற்கும், கலாசாரத்தை பேணவும் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் துணையாக இருந்தது.
முஸ்லிம் பெண்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவெடுப்பது ஒரு பெரும் சவாலான விடயமாகும். எனது பெற்றொரும் பெரும் போராட்டத்தின் மத்;தியில் தான் என்னை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஏனெனில், உறவினர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு எதிரான சிந்தனையிலேயே இருந்தனர். பல்கலைக்கழகம் செல்வது ஒரு புறம் இருக்க, அதிகமாக படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற சிந்தனையும், கருத்துக்களுமே எனது பெற்றோருக்கு உறவினர்கள மூலம் புகட்டப்பட்டது.
ஆனால் எனது தந்தை இவை அனைத்தையும் மீறி எனது எதிர்காலத்தை வளமாக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார். நான் முற்றிலும் உள ரீதியாக பாதிக்கப்படாத அளவிற்கு எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தமை முக்கிய விடயமாகும்.
5. ஒரு முஸ்லிம் மாணவி என்ற வகையில் பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு கிடைத்த அனுபவத்தினை பகிர முடியுமா?
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதை அறிந்தவுடன் நான் பயப்பட்டேன் ஏனென்றால், இந்த பல்கலைக்கழகத்திற்கு குறைவான முஸ்லிம் மாணவர்களே தெரிவு செய்யப்படுவார்;. அங்கு எவ்வாறு நிலைத்து நிற்பது என்ற தயக்கமும், பயமும் எனக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.
ஆனால் அங்கு சென்ற பிறகு, அங்கு கிடைத்த பாதுகாப்பும், ஆறுதலும் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது. எனக்கான பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றுக்கு முழு உத்தரவாதமும், சுந்திரமும் கிடைக்கப்பெற்றன என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டேன்.
முக்கியமாக நோன்பு காலங்களில் சஹர் மற்றும் இப்தார் ஏற்பாடுகள், இரவு நேர தராவீஹ் தொழுகை என எல்லாவற்றிற்குமான முழு ஒத்துழைப்பையும் பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் வழங்கியது. பல்கலைக்கழகமும் அதற்கான முழு அங்கீகாரத்தையும் எமது மஜ்லிஸிற்கு வழங்கியிருந்தது.
எந்தவொரு நிகழ்வு வந்தாலும் எமக்கான ஆடைச் சுதந்திரம் மறுக்கப்படாமல் முழு உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை கட்டாயம் கூற வேண்டும். விரிவுரையாளர்கள் எனும் போது, எனது பீடத்தில் இருந்த விரிவுரையாளர்களும் சரி, கல்வி கற்றுத்தந்த விரிவுரையாளர்களும் சரி அனைவரும் எல்லா மாணவர்களுடனும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக தான் பழகினார்கள்.
மாணவர்கள் என்ற கண்ணோட்டம் மட்டுமே அவர்களிடத்தில் காணப்பட்டது. இந்த நான்கு வருடங்களில் ஒரு சிறு விடயத்திலும் கூட எனக்கு பாகுபாடு காட்டப்படவில்லை என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மையைக் கூறினால் இங்கு திறமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனது விரிவுரையாளர்கள் என்னை வகுப்பில் மற்ற மாணவர்கள் முன்னால் புகழ்ந்தும் பேசியிருக்கிறார்கள். நல்ல வழிகாட்டியாகவும், அனைத்து விடயங்களிலும் ஊக்கப்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.
சக மாணவர்கள் எல்லோருமே என் நண்பிகள் தான். என் துறையில் நான் மட்டும் தான் முஸ்லிம். ஆனால் நான்கு வருடங்களில் வர்த்தையில் கூட பாகுபாடு காட்டப்படவில்லை. மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் நடந்த கொள்வார்கள். என் அனுபவத்தில் கூறுவதாக இருந்தால் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் என்ற கண்ணோட்டமே மேலோங்கியிருந்தது.
6. கல்விசாரா செயற்பாடுகளில் உங்களின் எந்தளவு ஆர்வம் காணப்பட்டது?
எங்களது பீடத்தில் பெரிதாக கல்விசாரா செயற்பாடுகள் இருக்கவில்லை. நான் விளையாட்டுகளில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவற்றில் பங்கு கொள்வது முக்கியம் என்று கூற வேண்டும்.
ஏனெனில் எமது இறுதியாண்டு முடிவு விழாவில் தரப்படும் விருதுகளுக்கான புள்ளிகளில் கல்விசாரா செயற்பாடுகளின் புள்ளிகளும் சேர்க்கப்படும். எதிர்பாராத விதமாக நான் மூன்றாவது வருடத்தில் இருக்கும் போது எங்களது பிரிவிற்கு உலக வங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் பங்குகொண்டு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. இச்செயற்திட்;டம் உண்மையாகவே எனக்கு பெரும் புள்ளியாக இருந்தது. அது மாத்திரமல்லாம், உயர் தர மாணவர்களுக்கான நிகழ்சிகள் ஒழுங்கமைத்து செய்தேன். அது மட்டுமல்லாது முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றிலும் பிரதிநிதித்துவம் வகித்தேன்.
7. உங்களின் கல்வி செயற்பாட்டிற்கு குடும்ப ஒத்துழைப்பு எவ்வாறு காணப்பட்டது?
இந்த பதக்கங்கள் மற்றும் சாதனை ஆகியன என் குடும்ப உறுப்பினர்களுக்கே உரித்தாகும். முக்கியமாக எனது தந்தையையே சாரும். நான் இந்தளவு சாதித்ததற்கான முழு காரணமும் அனைத்து பாரட்;டுக்களும் எனது குடும்பத்திற்கே சொந்தமாகும்.
எனது கல்விசார் செயற்பாடுகளுக்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பும் குடும்ப உறுப்பினர்களால் கிடைத்தது. நான் ஒரு போட்டிக்கு செல்வதாக இருந்தாலுமோ, பரீட்சை எழுதுவதாக இருந்தாலுமோ ஒவ்வொருவரும் என்னை உற்சாகப்படுத்துவர்.
என் கல்விசார்ந்த எந்த செலவாக இருந்தாலும் யோசிக்காது தந்தை செலவு செய்வார். நடுத்தர வர்க்க குடும்பமாக இருந்தாலும் எங்களுடைய கல்வி தேவைகளை எப்படியாவது அவர் நிறைவு செய்து விடுவார். சிறு வயது முதல் இன்று வரை எமது தேவைகளை அலட்சியப்படுத்தாமல் தந்தை அவற்றை பூர்த்தி செய்துள்ளார்.
நான் பல்கலைக்கழகத்திற்கு ஒருபோதும் பஸ்ஸில் தனியாக சென்றதில்லை. தந்தைக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் என்னை கூடிச் சென்று விடுவார். என் நிழல் போன்று சிறு வயது முதல் தற்போது வரை இருக்கிறார்.
இப்போது கூட நான் மேலும்; படிக்க வேண்டும் என்று கூறினாலும் எந்தவொரு முகச்சுழிவும் இல்லாமல் சரி சொல்லவர் என்பது எனக்குத் தெரியும். பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது கூட வீட்டு ஞாபகம் வராத அளவிற்கு குடும்பத்தினர் முடியுமான வரை என்னுடன் தொடர்பிலே இருப்பார்கள்.
ஊள ரீதியான பாதிப்புகளில் இருந்து என்னை பாதுகாத்ததில் பெரும் பங்கு அவர்களையே சாரும். இது தவிர என் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு நண்பிகள் எனக்கு பெரும் தூண்களாக இருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் போன்று எனக்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் இருந்தது.
8. பல பெண்களின் பல்கலைக்கழக கனவானது பகடிவதை, திருமணம் போன்ற சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் கலைந்து விடுகிறன. அவ்வாறான பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
நான் பல்கலைகழகம் நுழைந்த நாள் முதல் வெளியேறும் வரை எந்த விதமான பகிடிவதைகளுக்கும் உள்ளாகவும் இல்லை, யாரையும் பகிடிவதை செய்ததையும் காணவில்லை. எனது சிரேஷ்ட மாணவர்கள் அனைவரும் நல்லதொரு வழிகாட்டிகளாக இருந்தனர்.
பகடிவதை தொடர்பாக மற்ற பல்கலைக்கழகங்களைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் என் நான்கு வருட அனுபவத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகடிவதை உட்;பட வேறு எந்த விதமான பிரச்சினைகளுக்கும் நான் முகங்கொடுக்கவுமில்லை மற்ற மாணவர்கள் எதிர்நோக்கியதையும் காணவில்லை.
பெற்றோர்களுக்கு நான் கூற விரும்புவது, படிக்கக் கூடிய பிள்ளைகள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குங்கள். ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரம் தான் கல்வி என்ற மனோநிலையை மாற்றினாலே எங்களது சமூகம் முன்னேறி விடும். நானே அதற்கொரு பெரிய உதாரணம் என்று கூறுவேன்.
மேலே கூறியது போன்று உறவினர்களது எதிர்ப்புகளையும் தாண்டி எனது பெற்றோர் தைரியமாக என் மீது நம்பிக்கை வைத்து பெரியதொரு தீர்மானம் எடுத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதால் தான் அவர்களுக்கு சேர வேண்டிய பெருமையை என்னால் பெற்றுக்கொடுக்க முடிந்தது.
உயர் தரம் வரையிலும் சரி, அதற்கு மேலும் சரி படிக்க வேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகளுக்கும், திறமையுள்ள பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க முன் வாருங்கள். அவர்களின் கல்வி உரிமையை பறிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகின்றேன்.
அத்துடன் ஆண் பிள்ளை மட்டும் தான் அதிகமாக படித்திருக்க வேண்டும், பெண் பிள்ளை குறைவாக படித்தால் போதும் என்ற பாகுபாட்டு மனோநிலையில் இருந்து பெற்றோர் வெளிவருவது சிறந்தது.
இந்தக் காலத்திலும் அவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள், குறித்த சிந்தனையிலிருந்து மாற்றம் பெறுவது முழு சமூகத்தையுமே மாற்றும். கல்விக்காக செலவிடுவதை செலவீனமாகப் பார்க்காமல் எதிர்காலத்திற்கான முதலீடாக பாருங்கள். நிச்சயம் அதற்கான பலனை அடைவீர்கள்.
9. உங்களது எதிர்காலம் எவ்வாறு அமையவுள்ளது?
முதுமானி மற்றும் கலாநிதி பட்டங்களை அடைவதற்காக உயர் கல்வி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். எனக்கு ஆய்வு துறை தான் மிகவும் விருப்பம். இதனால் இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். அரச, தனியார் என்ற பாகுபாடில்லாமல் மனத் திருப்தியை தரக்கூடிய, தொழலொன்றை செய்து முன்னேர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள்ளது.
10. தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
கல்வி கற்கும் மாணவர்கள் அல்லது இதை வாசிக்கும் யாராகவாது இருக்கட்டும் நான் இரண்டு அறிவுரைகளை கூற விரும்புகிறேன். முதலாவது நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ அம்மதப் பற்று உங்களுக்குள் இருக்க வேண்டும். மதச் செயற்பாடுகளில் ஈடுபடுபதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு ஈடுபடும் போது உங்களுக்கு எப்போதும் நேரான சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.
நல்ல, தூய்மையான எண்ணங்கள் உருவாகும். அது உங்களுக்கு எதிர்பாராத நல்ல விளைவுகளை தரும் என்பதை உறுதியாக கூறுகிறேன். இறையச்சம் எப்போதும் இருந்தால் உங்களால் நூறு வீதம் கல்வியில் கவனஞ் செலுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
இரண்டாவதாக, உங்களின் தினசரி வாழ்க்கைக்கான நேர அட்டவணையொன்றை தயார் செய்து அதை பின்பற்றுங்கள். எந்த காரணங்களுக்காகவும் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
கல்வி செயற்பாடுகளை உரிய நேரத்திற்குள் மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இந்த நேர அட்டவணையை நன்றாக பின்பற்றுவீர்களாக இருந்தால்உங்களுடைய கல்வி செயற்பாடுகளிலும் ஏனைய செயற்பாடுகளிலும் நிலையான தன்மையை பேணிக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நேர்காணல் - பா. ஷிம்ரா
Comments (0)
Facebook Comments (0)