விலை அதிகரிப்பு காரணமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கை மக்கள்
“இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய்க்கான திடீர் விலை அதிகரிப்பு காரணமாக தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகின்றது” என மூன்று பிள்ளைகளின் தாயான அலி பாத்திமா கூறுகின்றார்.
"கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எரிவாயுவின் விலைகள் பெரியளவில் அதிகரிக்கப்பட்டன. இதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் விறகடுப்பிற்கு மாறினோம். எனினும், விறகிற்கு பயன்படுத்தப்படுகின்ற மண்ணெண்ணெயின் விலையும் 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது" என அவர் குற்றஞ்சாட்டினார்.
“இதற்கு ஈடுகொடுக்க முடியாமையினால் கடதாசி, பிளாஸ்திரி போன்றவற்றினைப் பயன்படுத்தியே தற்போது எரியூட்டுகின்றோம். இதன்போது சுவாசிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன” என ராஜ கிரிய பிரதேசத்தில் வாழும் அலி பாத்திமா தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக எனது கணவர் தொழிலினை இழந்துள்ளார். இதனால், எனது குடும்பம் இன்று கடுமையாக கஷ்டப்படுகின்றது. இதற்கு மத்தியில் இந்த மண்ணெண்ணெய் விலை அதிரிப்பினை தாங்க முடியாதுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையிலுள்ள சாதாரன மக்கள் தங்களின் வீடுகளில் எரியூட்டல் நடவடிக்கைக்காக மண்ணெண்ணெயினைப் பயன்படுத்துகின்றனர். முன்னர் 87 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் இன்று 253 ரூபாவாகக் காணப்படுகின்றது.
இந்த மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினை அடுத்து மீன்கள், உணவுப் பண்டங்கள் போன்ற பலவற்றின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
எனினும், “இந்த விலை அதிகரிப்பினை அடுத்து பொதுமக்கள் மண்ணெண்ணெயினை கொள்வனவு செய்யும் சதவீதம் கடுமையாக குறைவடைந்துள்ளது” என கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியரொருவர் தெரிவித்தார்.
“இந்த தீடிர் விலை அதிகாரிப்பினை சாதாரன மக்களினால் தாங்க முடியாதுள்ளது. அதுபோன்று மண்ணெண்ணெயினையே நம்பியுள்ள மீன்பிடித் துறையும் தற்போது முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது” என தென் கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.
டீசல் விலை அதிகரிப்பினை அடுத்து பஸ் மற்றும் டிப்பர் போன்ற வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட விடயம் கண்டறியப்பட்டதினை அடுத்தே இந்த திடீர் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
எவ்வாறாயினும், “இந்த விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரன குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” எனவும் விரிவுரையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 367 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், மர உற்பத்திகள், பலகைகள், சமையல் உபகரணங்கள், கழிவறை பேப்பர்கள், கைப்பைகள், பெல்ட், தொப்பிகள், கண்ணாடி மற்றும் அலுமினியம் உற்பத்திப் பொருட்கள், கத்தி, கரண்டி, கத்திரி மற்றும் பிளேட், குளிர்சாதனப் பெட்டிகள், அறுவடை மெஷின் உள்ளிட்ட இயந்திரங்கள் எனப் பல பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணிக் கையிருப்பை முகாமைத்துவம் செய்யும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தடை காரணமாக பல பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)