நாமல் ராஜபக்ஷவின் பெயரில் போலி டுவிட்டர் பதிவு
மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் முதிர்ச்சியின்றி தூற்றி, குற்றம்சாட்டியதை வன்மையாகக் கண்டிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் டுவிட்டர் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கதிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
"கொவிட் 19 அனர்த்த நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தியாகத்துடன் சேவையாற்றும் @CBSL அதிகாரிகளுக்கு அரசியல் முதிர்ச்சியின்றி தூற்றி குற்றம்சாட்டியதை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது ஒன்றிணைந்து உடன்பாட்டின் ஊடாக தீர்மானமெடுத்து, செயற்படுவதேயாகும்" என்பதே குறித்த போலி டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி டுவிட்டர் பதிவு போலியானதாகும் என்று நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இது போன்ற பதிவுகள் எதுவும் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருக்கின்றதா என விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் பரிசோதித்துப் பார்த்தபோது, அவ்வாறான எதனையும் அதில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)