ஊடக அடையாள அட்டை தொடர்பில் சஜித் அணியினால் பொய் பிரசாரம்: அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை தொடர்பில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் இன்று (19) வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மாத்திரமே இந்த ஊடக அடையாள அட்டையினை வழங்க முடியும் என தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன் ஊடக அடையாள அட்டை வழங்கும் செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் எந்தவித தொடர்புமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய்ப் பிரச்சாரமொன்றி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை விநியோக பணிகளை பாதுகாப்பு அமைச்சு மட்டுப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் இணையத்தள ஊடகவியலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த அடக்கு முறைச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி ஊடகவியலாளர்கள் ஊடக பணியினை தடையின்றி முன்னெடுப்பதற்காக வருடாந்தம் விநியோகிக்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை உடனடியாக வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த பணியினை உடனடியாக அரசாங்க தகவல் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என முன்னாள் முன்னாள் அமைச்சர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமயகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று அரசாங்க தகவல் திணைக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேல,
"ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு தலையீடுவதாக பொய்ப் பிசாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட அதிகாரி என்ற அடிப்படையில் குறித்த போலிக் குற்றச்சாட்டினை நிராகரிக்கின்றேன். இந்த அடையாள அட்டை விநியோக நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லை.
இந்த செயற்பாட்டினை எனது தலைமையின் கீழ் செயற்படும் அரசாங்க தகவல் திணைக்களமே மேற்கொள்கின்றது. 2020ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் கோரப்பட்டன.
அத்துடன் இந்த ஊடக அடையாள அட்டை விநியோக நடவடிக்கையினை கடந்த மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தோம். எனினும், கொவிட் - 19 காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலான இந்த அடையாள அட்டை விநியோக நடவடிக்கையில் கால தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜுலை 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த செயற்பட்டினை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம். 2020ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்காதாவர்கள் 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையினை ஜுலை 15ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும்.
இந்த காலப் பகுதிக்குள் விண்ணப்பித்த தகுதியான அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான அடையாள அட்டை வழங்கப்படும். இதுவரை 4,000 ஊடகவியலாளர்களுக்கான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இணையத்தள பதிவில் சில சர்ச்சைகள் காணப்படுகின்றன. அதாவது, சில தனிநபர்களினால் நடத்தப்படும் இணையத்தளங்களுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்க முடியாது.
இது தொடர்பில் உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. தனிநபர்களினால் நடத்தப்படும் இணையத்தளங்களுக்கு ஊடக அடையாள அட்டையினை வழங்கிவிட்டு அதற்கு தன்னால் ஒருபோதும் பொறுப்புக்கூற முடியாது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)