இந்தோனேசியாவின் அவசர நிலைமையை எச்சரிக்கின்ற போராட்டங்கள்
நித்து அர்தித்யா
இந்தோனேசியா தனது தேர்தல் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை எதிர்த்து பரவலான எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொள்கின்றது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச கரிசனங்களை சுட்டிக்காட்டுகின்றன.
இது ஜனநாயகத்தின் கொள்கைகள் மீதான இந்தோனேசியாவின் மதிப்பை சோதனைக்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆகஸ்ட் 22, 2024 அன்று, இந்தோனேசிய நாடாளுமன்றமானது தேர்தல் சட்டங்களில் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளை மாற்றியமைக்கக்கூடிய திருத்தங்களை முன்மொழிந்தபோது சர்ச்சை வெடித்தது. இப்பிரச்சினையின் முக்கிய அம்சம் இரண்டு முக்கிய அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்புகளில் தங்கியுள்ளது.
முதலாவது தீர்ப்பு எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கு அரசியல் பரப்பை திறப்பதாகக் கருதப்படுகின்ற அரசியல் கட்சிகள் பிராந்திய தலைமை பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைப்பதற்கான எல்லையை குறைத்தது.
இரண்டாவது தீர்ப்பானது, வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச வயதுத் தேவையை மாற்றியமைத்து, ஜனாதிபதி விடோடோவின் 29 வயது மகன் கேசங் பங்கரேப்பை வரவிருக்கும் பிராந்தியத் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.
இதற்கு பதிலடியாக, ஜனாதிபதி விடோடோ மற்றும் அவரது வாரிசான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட (உத்தியோகபூர்வமற்ற) பிரபோவோ சுபியாண்டோவின் பங்காளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்தோனேசிய பாராளுமன்றம், விரைவான சட்ட மாற்றங்களின் மூலம் இந்த தீர்ப்புகளை மாற்றியமைக்க முயன்றது.
இந்த மாற்றங்கள் அதிக வேட்பாளர் நியமன எல்லைகளை மீண்டும் நிலைநிறுத்துவதுடன், கேசங் பங்கரேப்பை முன்மொழிவதற்கு பதிலாக பதவியேற்பு திகதியில் விண்ணப்பிப்பதற்கான வயதை மாற்றியமைப்பதன் மூலம் இயங்க அனுமதித்திருக்கும்.
இந்த நகர்வுகள் ஒரு அரசியல் வம்சத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதுடன் விடோடோவின் பதவிக்காலம் அக்டோபர் 2024 இல் முடிவடைந்த பிறகும் அவருக்கான தொடர்ச்சியான செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது.
முன்மொழியப்பட்ட தேர்தல் மாற்றங்களுக்கு எதிரான பொதுப் போராட்டம் விரைவானதுடன் கடுமையானதாகும். ஓகஸ்ட் 22 அன்று, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசிய பாராளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.
கடந்த மாதம் பங்களாதேஷிலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை நினைவுபடுத்தும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை ஆக்கிரமித்து, கோஷங்களை எழுப்பி, தீயை மூட்டினர்.
இந்தப் போராட்டங்கள் தலைநகரில் மட்டும் நின்றுவிடவில்லை. அவை ஜகார்த்தா, மகசார், பாண்டுங் மற்றும் செமராங் போன்ற நகரங்களிலும் நடைபெற்றன. அவை மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த சாதாரண குடிமக்களைக் கொண்டிருந்ததுடன், ஜனநாயகக் கொள்கைகளின் சுரண்டல் மற்றும் ஒரு குடும்பத்திற்குள் அரசியல் அதிகாரம் வேரூன்றுவதை அவர்கள் கண்டமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
ஜகார்த்தாவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால், போராட்டங்கள் வன்முறையாக மாறியதுடன், அவர்கள் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் பதிலடி கொடுத்தனர்.
மத்திய ஜகார்த்தா காவல்துறைத் தலைவர், சுமார் 3,200 அதிகாரிகள் நகரம் முழுவதும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியதுடன், இராணுவ வாகனங்களும் படைகளின் அணிவகுப்பாக காட்சியளித்தது.
இந்த கொந்தளிப்பானது பங்குச் சந்தை மற்றும் இந்தோனேசிய நாணயத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 22, வியாழன் அன்று, ரூபியா மிக மோசமாக செயற்பட்ட ஆசிய நாணயமாக மாறியது. இதற்கிடையில், அரசாங்கப் பிணைப்பத்திரங்களின் வருவாய் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்தது.
இந்தோனேசியாவின் நிலைமையை சர்வதேச சமூகம் கண்காணித்தது. எதிர்ப்புக்கள் மற்றும் முன்மொழியப்பட்ட தேர்தல் சட்ட மாற்றங்கள் சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையானது ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக அளவுக்கதிகமான வன்முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தது.
இந்த சூழ்நிலையானது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் வகிபங்கு மற்றும் உலகின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் சர்வாதிகார போக்குகளுக்கு மத்தியில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு அதன் அர்ப்பணிப்பு பற்றிய கலந்துரையாடல்களை தூண்டியுள்ளது.
சட்ட அமுலாக்கப் பிரிவினரிடம் இருந்து கடுமையான பதில் வந்த போதிலும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்மொழியப்பட்ட தேர்தல் சட்ட மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் மற்றும் விடோடோவின் குடும்பத்தை மையமாகக் கொண்ட அரசியல் வம்சங்களை நிராகரிக்க வேண்டும் என்று கோரினர்.
கடந்த ஆண்டு இதேபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பரவின. ஒக்டோபர் 2023 இல், இந்தோனேசிய ஆராய்ச்சி நிறுவனமான கொம்பாஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 60.7 சதவீதம் பேர் விடோடோவின் மகன் ஜிப்ரான் ரகாபுமிங் ராக்காவின் அரசியலில் நுழைவதை ஒரு வகையான "வம்ச வாரிசு" என்று கருதினர்.
நிலைமையானது வன்முறையைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களை வலியுறுத்தும் அதே வேளையில் அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுத்த இந்தோனேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளரான ஹசன் நஸ்பியின் அறிக்கைகளால் மேலும் தூண்டப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே பொதுமக்களின் நம்பிக்கைக்கு சேதம் ஏற்பட்டு விட்டது.
இந்தோனேசியாவின் தேர்தல் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் நாடு அரசியலமைப்பு நெருக்கடியின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக எச்சரிக்கின்ற சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தவிர்க்கும் முயற்சியானது இந்தோனேசிய அரசியல் உயரடுக்கிற்குள் ஜனாதிபதி விடோடோ தனது குடும்பம் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் மூலம் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்ற ஒரு பரந்த அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான நகர்வுகள் இந்தோனேசியாவில் ஜனநாயக நிறுவனங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதிகளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்ற எதேச்சாதிகாரத்தை நோக்கி வளர்ந்து வரும் போக்கின் அடையாளமாக இருப்பதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
அதிகாரப் போராட்டம் இந்தோனேசியாவின் ஜனநாயக அமைப்பின் பலவீனமான நிலையை எடுத்துக்காட்டுவதுடன், அங்கு நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை பிரிவுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை தற்போதைய நிர்வாகத்திற்கு ஆதரவாக உருமாறுகிறது.
அரசியல் அரங்கில் ஜனாதிபதி விடோடோவின் குடும்பத்தின் ஈடுபாடு, ஒரு வம்சத்தின் தோற்றம் பற்றிய கரிசனங்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, விடோடோவின் மைத்துனர் தலைமையிலான அரசியலமைப்பு நீதிமன்றம், விடோடோவின் மூத்த மகன் ஜிப்ரான் ரகாபுமிங் ரக்காவை துணை ஜனாதிபதியாக போட்டியிட அனுமதித்தது.
ஒக்டோபர் 2024 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பிரபோவோ சுபியாண்டோவுடன் ஜிப்ரான் பதவியேற்க உள்ளார். ஜோகோவி மற்றும் ராக்கா பற்றிய தனது கண்டறிவுகளை கொம்பஸ் நிறுவனம் வெளியிட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு நாட்டின் முக்கிய அரசியல் பதவிகளை வகிக்கின்ற ஜோகோவியின் இளைய மகன் கேசங் பங்கரேப் மற்றும் மருமகன் பாபி நசுஷன்ஆகிய இருவரை பற்றி எதுவும் கூறாத நிலையில் இது முரண்பாடாக வெளிவருகின்றது.
முன்மொழியப்பட்ட தேர்தல் சட்ட மாற்றங்களுடன் இணைந்ததாக, கோல்கர் கட்சியின் (இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சி) தலைவர் சமீபத்தில் ராஜினாமா செய்ததோடு, அவருக்குப் பதிலாக அறியப்பட்ட ஜோகோவி விசுவாசி ஒருவரை நியமித்ததும், வெளியேறும் ஜனாதிபதி நாட்டின் அரசியல் தளத்தில் தனது செல்வாக்கின் தொடர்ச்சியை உறுதி செய்ய சூழ்ச்சி செய்கிறார் என்ற கருத்திற்கு மேலும் வலுச்சேர்த்தது.
இந்த கருத்தானது ஜோகோவி பதவியை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு அரசியல் வாகனமாக செயற்பட கட்சி மறுசீரமைக்கப்படுகிறது என்று உள்நாட்டில் இருந்து வரும் அறிக்கைகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியின் பரந்த சூழலானது அரசியல் சூழ்ச்சி மற்றும் சவால்களின் வரலாற்றை உள்ளடக்கியது. முன்னய அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்புகள் நியாயமான போட்டியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன் எந்தவொரு பிரிவின் ஆதிக்கத்தையும் தடுக்கின்றன.
எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பின்னய வரலாற்றின் பெரும்பகுதியில் சர்வாதிகார ஆட்சியாளர்களின் பங்கைக் கொண்டிருந்த ஒரு நாட்டின் நீதிமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள மாற்றம் அரசியல்மயமாக்கல் பற்றிய கவலைகளைத் தூண்டியுள்ளது.
அந்த வகையில், முன்மொழியப்பட்ட மாற்றங்கள், பாதுகாப்பை மாற்றியமைத்து ஆளும் கூட்டணியின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. சர்ச்சைக்குரிய தேர்தல் சட்ட மாற்றங்கள் மீதான வாக்கெடுப்பை இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளதால், உடனடி நெருக்கடி தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், அடிப்படை சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஒத்திவைப்பு ஒரு தற்காலிக நிவாரணத்தை அளிக்கிறது, ஆனால் அரசியல் அதிகாரம் மற்றும் எதிர்ப்புக்களுக்கு காரணமான ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய அடிப்படைக் கரிசனங்களை நிவர்த்தி செய்யவில்லை.
Comments (0)
Facebook Comments (0)