வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்
முஹம்மத் றிழா
வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது.
எங்குபோவது என்ற திட்டமில்லாத இளைஞர்கள் மோட்டார் வண்டிகளில் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக வீதிகளில் செல்கிறார்கள். இந்த திடீர் மாற்றம், நேற்றைய மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் அறிவிப்பை அடுத்து ஏற்பட்டது.
எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற ஏக்கத்திலிருந்த மக்களுக்கு இன்றுதான் விடிவு கிடைத்திருக்கிறது. இலங்கையின் மிகப்பெரிய மீன் விற்பனைச் சந்தையான பேலியகொடயில் கடந்த மாதம் 21ஆம் திகதி 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து, இம்மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த செய்தி வாழைச்சேனை மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாக முதலில் இருந்தது. தாங்கள் விற்றுவந்த மீனுக்கான பணத்தினை முதலாளிகளிடமிருந்து எப்படி அறவிடுவது என்ற யோசனை அவர்களை ஆட்கொள்ளலானது.
தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தலைமை அதிகாரி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா, பேலியகொட மீன் சந்தைக்கு வருகைதந்த அனைவரும் தங்களின் அருகிலுள்ள சுகாதார பரிசோதகரை நாடி பீ.சி.ஆர். பரிசோதனையை உடன் செய்து கொள்ளுமாறு அறிவித்த போது இங்கிருக்கிற யாரும் அதைப் பெரிதாக எடுத்திருக்கவில்லை.
யார் செய்த புண்ணியமோ வாழைச்சேனைப் பிரதேசத்தில் இரண்டாம், மூன்றாம் தொற்றாளர்களின் பரவல் குறிப்பிட்டளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், பேலியகொட மீன் விற்பனைச் சந்தைக்கு சென்று வந்தவர்களை சுகாதாரத் துறையினர் உடன் இனங்கண்டு, கடந்த 23ஆம் திகதி 25 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இப்பரிசோதனையின் முடிவின் படி 11 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதன் பின்னர், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக 24ஆம் திகதி தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைமை அதிகாரியினால் பிரகடனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, 24ஆம் திகதி திகதி நள்ளிரவு முதல் வியாழக்கிழமை (19) வரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் 60 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதில் கணிசமானவர்கள் குணமடைந்துள்ளார்கள். எழுமாறாக 1,500 இற்கும் அதிகமானவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. தற்பொழுதும் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறையினர் விழிப்புடனே செயற்பட்டு வருகிறார்கள்.
சுதந்திரமாகத் திரிந்த மக்கள் இந்த 27 நாட்களும் வீட்டினுள் அடைக்கப்பட்டதும், அவர்களது ஜீவனோபாயம் தடுக்கப்பட்டதும் புதிய வரலாறுதான். வாழைச்சேனையைப் பொருத்தமட்டில் மீன்பிடித் தொழில் பிரதான வருமான மீட்டும் தொழிலாகும்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 3,000 குடும்பங்கள் இத்தொழிலில் நேரடியாகவும் 1,500 குடும்பங்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித் துறை 2.7 சதவீத பங்களிப்பை செலுத்திவருகின்றது. ஐரோப்பிய சந்தையில் இலங்கைக்கு விதித்த தடை நீக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சந்தையில் இலங்கையின் மீன் மற்றும் கடலுணவுகளுக்கான கேள்வி அதிகரித்தே வருகிறது.
வாழைச்சேனை மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் கரைக்கடல்களில் மீன்பிடிக்கும் வல்லமை கொண்டவர்கள். பல முதிர்ந்த அனுபவம் பெற்ற படகோட்டிகளும் இங்குள்ளார்கள். இலங்கையின் கடற்பரப்பில் எங்கு சென்றாலும் விரைவாக திரும்பிவரும் விற்பன்னர்கள் அவர்கள்.
இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் வாழைச்சேனை பகுதியிலும், தரமான மீன்கள் இலங்கை சந்தையிலும், சில வகை மீன்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மீன் விற்பனை செய்யும் பேர்போன முதலாளிமார்களும் இங்குள்ளார்கள். கடல் மீன்களை பெட்டியில் கட்டி வீடு வீடாக விற்பனை செய்யும் மீனவன் தொடக்கம் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் வியாபாரி வரையும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடலிலுள்ள மீன்களை எமது அன்றாட உணவுத் தேவைக்கு அவர்கள் கொணர்ந்து சேர்க்க பல பகீரத பிரயத்தனங்கள் செய்வதை யாரும் அறிவதில்லை. இந்த மீன்களால் எமது உடலாரோக்கியத்துக்கு தேவையான புரதம், இரும்புச்சத்து, கனியுப்புகள், விசேடமாக ஒமேகா 3 ஆகிய போசனைப் பதார்த்தங்கள் எமக்கு கிடைக்கின்றன.
கடலுக்கு கொண்டு செல்லும் வலைகளில் ஏற்படும் கிழிவுகளை தைக்கின்ற தொழிலும் 27 நாட்களாக கதவைடைக்கப்பட்டேதான் இருந்தது. இன்றைய தினம் இத்தொழிலில் ஈடுபடும் மூவர் மீன்பிடி வலையை வீதியில் விரித்து வேலையை துவங்கியதை காணமுடிந்தது.
வீட்டில் சும்மா முடங்கியிருப்பதால் வரும் அலுப்பிலிருந்து மீள இன்றைய தினமே தமது தொழிலை ஆரம்பித்திக்கிறார்கள். வாகரைபோது, ப் பகுதியில் கரைவலை வாடி வைத்திருக்கும் ஒருவரை தொடர்பு கொண்ட “27 நாட்களின் பின்னர் தான் அங்கு சென்று வாடியைப் பார்த்து திரும்பியதாக சொன்னார்".
கரைவலைத் தொழில் செய்பவர்கள் பெரிய நெத்தலி இன மீனின் வருகைக்கு தவம் இருப்பார்கள். இந்த தனிமைப்படுத்தல் நாளில் இவ்வின நெத்தலி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் ஒருவருக்கு 20 இலட்சம் ரூபா தொழில் நடைபெற்றிருக்கிறது.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு பிரப்பிக்கப்பட்டபோது வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) பிரதேச செயலகத்திற்கு அரசாங்கம் சுமார் 04 கோடி 71 இலட்சம் ரூபாவினை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பாதிக்கப்பட்ட 8,535 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பணமாகவும், தனிமைப்படுத்தப்பட்ட 449 குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவாகவும் வழங்க நிதியொதிக்கியது.
அதுமாத்திரமல்லாது, இலங்கையின் முன்னணி முஸ்லிம் தனவந்தர்களிடமிருந்தும், பிரதேச தனவந்தர்களிடமிருந்தும், அண்மிய கிராமங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் வறுமையால் வாடும் மக்களுக்கு பல மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு வாழைச்சேனை மக்கள் தங்களின் நன்றியறிதலை சொல்லியுள்ளார்கள்.
வயதான மீனவர் ஒருவரையும் காணக்கிடைத்தது. இந்த தனிமைப்படுத்தல் பற்றி அவருடன் கதைக்கலானேன். யுத்த காலத்திலும் எமது தொழிலை நாங்கள் தொடர்ந்து செய்திருக்கிறோம். சுனாமி வந்த போது ஒரு தடங்கல் ஏற்பட்டது உண்மைதான்.
இப்போது கொரோனாவால் தொழில் தடைப்பட்டிருக்கிறது. மீன் சந்தை திறக்கும் போது நமது மீனுக்கு அதிக கேள்வி வந்துவிடும் என்று சலைக்காது பதில்தருகிறார். மேலும் அவர் சொன்னார், மாடு ஒன்றை வாங்கி குடும்ப உறுப்பினர்கள் பங்கு போடுவதை கண்டுள்ளேன்.
ஆனால் சுமார் 55 கிலோ எடையுள்ள கெந்தா ரக மீன் ஒன்றை மாடு அறுத்து பங்கு போடுவது போல குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து வாங்கி பங்கு போட்டுக் கொண்ட புதிய அனுபவம் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். பேலியகொட மீன் விற்பனை நிலையம் மூடப்பட்டதால் விலைமதிப்புள்ள மீன்களை உள்ளுர் சந்தையில் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பற்றிய அச்சம் மீனவர்களிடமிருந்து வெகுவாக குறைந்திருக்கிறது. தாங்கள் பொருளாதார ரீதியில் தடைப்பட்டிருப்பது இதற்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடும். இருப்பினும், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் கொண்ட குழுவால் அறிவிக்கப்படும் வரை துறைமுகத்தில் கட்டப்பட்டிருக்கும் படகுகள் கடல் நோக்கிச் செல்ல முடியாது என்பதே உண்மை.
மேலும், வாழைச்சேனை பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி உறுப்பினருமான எஸ்.எம்.முஸம்மில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தல் மற்றும் மக்களின் வாழ்வொழுங்கு தொடர்பான, கொரோனா இடர் காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான அரச அறிவித்தல்கள் பற்றிய வழிகாட்டி குறிப்புக்களையும் பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்காக வேண்டி வெளியிட்டுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு மீனவர்களும் எதிர்காலத்தில் செயற்படுவது அவசியமாகும்.
மீண்டும் நாடுமுழுவதும் மூடப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடைகளைத் திறப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய மீன்பிடி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேலியகொட மீன் சந்தை திறக்கப்படவுள்ளதாக மீன்பிடி அமைச்சு அறிவித்துள்ளது. பேலியகொட மீன்பிடிச்சந்தையில் பணத்தாள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் ஒன்லைன் பண பரிமாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சு அவதானம் செலுத்திவருகிறது. மீன் வர்த்தகம் இணைய முறை மூலமும் நடைபெற வங்கிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படுகிறது எனவும் மீன்பிடி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆக, உலக வர்த்தகத்தை தலைகீழாக போட்டுடைக்கும் கொரோனா தொற்றினை எதிர்த்து வர்த்தகர்கள் போராடவேண்டிய புதிய போக்கிற்கு வாழைச்சேனை மீனவர்களின் பொருளாதாரமும் வந்தடைந்திருப்பதை மீனவ வியாபாரிகள் உணரவேண்டியது அவசியமாகும். இவ்வாறான புதிய பொருளாதார போக்கினை நன்கு அறிந்து செயற்பட அவர்கள் முனைய வேண்டியதும் அவசியமாகிறது.
Comments (0)
Facebook Comments (0)