கொவிட் தாக்கத்தால் நெருக்கடிக்குள்ளான நாடும் மக்களும்

கொவிட் தாக்கத்தால் நெருக்கடிக்குள்ளான நாடும் மக்களும்

-விதுர்ஷன்-

கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்து இரண்டு ஆண்டுகளை அண்மித்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார மற்றும் வாழ்வியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்ககொண்டுள்ளன.

செல்வந்த நாடுகளின் நிலைமையே பெரும் நெருக்கடிக்குள் உள்ள நிலையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலை சவால் மிக்கதாகியுள்ளது. இலஙகையை பொறுத்த வரை இன்று பால்மாவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை ஏனைய இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களும் ஏற்படுமா என்ற அச்ச நிலைமை காணப்படுகின்றது.

மறுப்புறம் உணவுப்பொருடகளின் விலை அதிகரிப்பு மக்களின் வாழ்வியலை கடுமையாக பாதித்துள்ளது. தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரசாங்கம் செய்வதறியாது உள்ள நிலையில் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் என்று நம்ப இயலாது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை மத்திய வங்கி அடுத்து வரும் 6 மாதங்களுக்கான விசேட பொருளாதார அபிவிருத்தி இலக்கு திட்டத்திற்கான நிதி கொள்கையினை வெளியிட்டது. இதனை புதிதாக நியமனம் பெற்ற மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு பிரதான துறைகளும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.

நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் இறை உறுதிப்பாட்டை அடைந்துகொள்ளல், உரிய நேரத்தில் கடன் பணிக்கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தல், சந்தையில் அந்நிய செலாவணி திரவத்தன்மையை அதிகரித்தல், கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து அனைத்துத் தொழில் முயற்சிகளும் மீட்சியடைவதற்கு ஏற்றவாறான கட்டமைப்பை உருவாக்குதல், பொருளாதாரத்தின் விரைவான  எழுச்சியை ஊக்குவித்தல, நாட்டிற்கான தரமிடல்களையும் வியாபார இயலுமைக் குறிகாட்டிகளையும் மேம்படுத்தல், உள்நாட்டு உற்பத்திப்பொருளாதாரத்தை வலுப்படுத்தல், துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலயத்தின் செயற்பாடுகள் ஊடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்தல், துறைமுக நகரத்திற்குள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு துறைமுகநகர ஆணைக்குழு துணைச்சட்டத்தைத் தயாரித்தல், சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்றவகையில்  சூழலை  ஏற்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்தாண்டு பொருளாதார நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2019ஆம் ஆண்டின் மத்திய காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்த சரிவானது  இலங்கை வரலாற்றில் பாரியதொன்றென குறிப்பிடப்படுகின்றது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏற்பட்ட முடக்க நிலை மற்றும் வைரஸ் பரவலின் தீவிர தன்மை என்பன இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையை உறுதி செய்கின்றது.

நிலைமை இவ்வாறிருக்கையில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்படும்  என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோயால் முன்னெப்போதும் இல்லாதவாறு பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு இப்போது மீட்புப் பாதையில் பயணிப்பதாக குறிப்பிட்டுள்ள உலக வங்கி பிரதானமாக வெளிநாட்டு முதலீடுகள் காரணமாகவும் சுற்றுலாத்துறை மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக்குகின்றமை காரணமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2021 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தொடர்ச்சியான வர்த்தக கட்டுப்பாடுகள், மந்தநிலையிலிருந்தான பொருளாதார வடுக்கள் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவற்றுடன் இரட்டிப்பாகும் மெதுவான உலகளாவிய மீட்பு தொடர்ந்தும் வளர்ச்சியை பாதிக்கலாம்.

இந்த அறிக்கையானது தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தை எடுத்துக்காட்டி இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றிய இற்றைப்படுத்தலை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதம் சுருங்கியது.

இது மிக மோசமான அடைவுச் சாதனையாகும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் பல நாடுகளிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. பணப் பரிமாற்றம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளுடன் அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட்டது. மத்திய வங்கியின் கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்கான பிற நடவடிக்கைகள் ஆகியவை வணிகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் கொவிட்-19 இன் மோசமான தாக்கத்தை குறைக்க உதவியது.

அதே நேரத்தில், தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்த செலவுகள் மற்றும் குறைந்த வருமானம் ஆகியன நிதி நிலைமை மோசமடைவதில் பங்களித்தன. பொது மற்றும் பொது உத்தரவாத கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 109.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 பெப்ரவரி  மாதத்தில் இருப்புக்கள் 11 ஆண்டுகளில்  குறைந்த அளவிற்குக் குறைந்துவிட்டன, மேலும் செலாவணி விகிதம் 2021 ஜனவரி முதல்  மார்ச் 17ஆம் திகதி வரை 6.5 சதவீதத்தினால் குறைந்தது. கொவிட்-19 இற்கு மத்தியில் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஒரு முக்கிய சவாலாக உள்ளது.

"உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே, கொவிட்-19 இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நாடு மீட்பு கட்டத்திற்குள் நுழையும் போது நாங்கள் ஏற்கனவே சாதகமான அறிகுறிகளைக் காண்கிறோம்" என்று குறிப்பிட்ட மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளராகிய ஃபாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ், "தனியார் முதலீட்டின் முழு திறனையும் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மாதிரியில் மேம்பட்ட கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கை அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான முறையில் உயர்த்தவும் முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 வறுமையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிக் கலந்துரையாடும் ஒரு சிறப்பு கவனம் செலுத்தப்படும் பிரிவும் உள்ளது. தொழில்களை இழந்து வருமானம் குறைவடைவதால், குறிப்பாக நகர்ப்புறங்களில் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில், 3.20 டொலர் வறுமை விகிதமானது 2019ஆம் ஆண்டில் 9.2 சதவீதமாகவிருந்தது 2020ஆம் ஆண்டில் 11.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சமூகப் பாதுகாப்பு முறைமையானது தொழிலை இழந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதை ஆதரிக்கக்கூடும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. நெருக்கடியான காலங்களில் ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் வழங்கும் ஆதரவை விரைவாகவும் வினைத்திறனாகவும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு, அதிக இலக்கு வைக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலைகள் உதவக்கூடும் என்று அது ஆலோசனை வழங்குகின்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் முதலீடு செய்வது இலங்கையர்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளைக் கண்டறிய உதவும். இது நாட்டின் சமீபத்திய பேரினப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் கண்ணோட்டம், மற்றும் தொடர்புடைய அபிவிருத்திச் சவால்கள் பற்றிக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கொள்கைச் சிக்கல்களையும் இன்னும் ஆழமாக ஆராய்வது அவசியமாகின்றது. மறுப்புறம் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கையிருப்பிலுள்ள டொலர் பற்றாக்குறை  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நெருக்கடியான நிலைமைக்குள் நாடும் மக்களும் உள்ளமை வெளிப்பட்டுள்ளது.