இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் இனப் பரிமாணங்கள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் இனப் பரிமாணங்கள்

சிவசாந்தி சிவலிங்கம்

இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலானது குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் தமிழ் பேசும் பிராந்தியங்களில் வாக்களிப்பு முறைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

சிங்கள அரசியல்வாதியான சஜித் பிரேமதாச, இனப் பிளவுகளுக்கு மத்தியிலும் தமிழ் சமூகத்தின் கணிசமான ஆதரவைப் பெற்றார். வரலாற்று ரீதியாக ராஜபக்சவுக்கு எதிரான உணர்வுகளுடன் இணைந்துள்ள தமிழ் வாக்காளர்கள், அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொருளாதார தீர்வுகள் இரண்டையும் வழங்குவார்கள் என அவர்கள் நம்பும் வேட்பாளருக்கு ஆதரவளித்த போக்கின் தொடர்ச்சியாகவும் பிரேமதாசாவுக்கு வாக்களித்தமையை பார்க்க முடியும்.

சிங்கள மேலாதிக்க அரசியலில் எச்சரிக்கையாக இருந்த தமிழ் வாக்காளர்கள், பிரேமதாசவை அதிகாரப் பகிர்வு, உள்ளடங்கலான தன்மை மற்றும் பொருளாதார மீட்சி போன்ற வாக்குறுதிகளை அளிக்கும் வேட்பாளராகக் கருதினர்.

ஓர் ஒற்றையாட்சியின் கீழ் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு பரப்புரையாற்றிய பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) வழங்கிய ஆதரவு இந்த ஆதரவை மேலும் உறுதிப்படுத்தியது.

கடந்தகால சிங்கள பெரும்பான்மை வேட்பாளர்களைப் போல் அல்லாமல், மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தத்தை நிலைநாட்டுவதாகவும், அதிகாரப் பகிர்வு பொறிமுறைகளை ஆராய்வதாகவும் வழங்கப்பட்ட பிரேமதாசவின் வாக்குறுதிகள், அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சுயாட்சி தொடர்பான நீண்டகால மனக்குறைகள் நீடிக்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிரொலித்தது.

மேலும் வாசிக்க: 2024 இலங்கைத் தேர்தல்கள்: ஜனரஞ்சக இடதுசாரிகளின் முக்கியமான எழுச்சி

எவ்வாறாயினும், தேர்தல் அனுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு ஆதரவாக குறிப்பிடத்தக்க உயர்வையும் கண்டதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், அவரது வாக்குகள் 2019 உடன் ஒப்பிடும்போது அண்ணளவாக 17% இனால் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியை பிரதிபலிப்பதுடன் நீதி, பொருளாதார நியாயத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய உடனடி கரிசனங்களை நிவர்த்தி செய்யும் மாற்றுக் குரலுக்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

வடமாகாணத்தில் தமிழ் சமூகத்தினரிடையே காணப்படும் அரசியல் உணர்வானது ஓர் சிக்கலான பரப்பை வெளிப்படுத்துகிறது. தமிழ் வாக்காளர்கள் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்காக ஜனாதிபதித் தேர்தலை மூலோபாயமாகப் பயன்படுத்திய அதேவேளை, இந்தத் தேர்தல் மிகவும் நுணுக்கமான அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

பிரேமதாச கணிசமான ஆதரவைப் பெற்றதுடன், இது அவரது அரசியல் தீர்வுகள் மற்றும் பொருளாதார மீட்சியின் வாக்குறுதிகளால் உந்தப்பட்ட சிங்கள அரசியல்வாதிகளுடனான ஈடுபாட்டில் ஒரு நடைமுறை மாற்றத்தைக் குறிக்கிறது.

இருந்த போதிலும், பல வாக்காளர்கள் நீண்டகால பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக அநீதிகள் குறித்து பிரதான அரசியல் தலைவர்களிடமிருந்து போதுமான பதிலளிப்புகள் இல்லாததால் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த அதிருப்தி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் போன்ற வேட்பாளர்களை ஆதரிப்பதற்கு சிலரை வழிவகுத்ததுடன், இது சமூகத்தின் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய தற்போதைய அரசாங்கப் பிரதிநிதிகள் மீதான ஏமாற்றத்தை பிரதிபலிக்கிறது.

மேலும் வாசிக்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணம் வழங்கல்

நிஜமான பிரதிநிதித்துவத்திற்கான இந்த ஏக்கமானது, ஊழலை எதிர்கொள்வதற்கும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் விருப்பமுள்ள கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட திஸாநாயக்க மற்றும் NPP க்கான கதவைத் திறந்துள்ளது.

NPP இனுடைய தளமானது, வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துவதுடன், பாரம்பரிய அரசியல் உயரடுக்கின் மீது ஏமாற்றமடைந்த தமிழ் வாக்காளர்களுடன் வலுவாக எதிரொலிக்கிறது.

கிழக்கு மாகாணத்தில், NPP இனுடைய எழுச்சியானது, கொவிட்-19 பெருந்தொற்றின் நீடித்த விளைவுகளுடன் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே குறிப்பிடத்தக்க சீற்றத்தைத் தூண்டிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கட்டாய தகனம் தொடர்பான கொள்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

பிரதான முஸ்லிம் கட்சிகள் உட்பட உள்ளூர் அரசியல்வாதிகள் இந்தக் கொள்கையை சவாலுக்குட்படுத்த தவறியமை நம்பிக்கையின் கணிசமான வீழ்ச்சிக்கும், அரசியல் அமைப்புக்களிலிருந்து அந்நியப்பட்ட உணர்வுக்கும் வழிவகுத்தது.

பிரேமதாச மற்றும் SJB கணிசமான ஆதரவைப் பெற்ற போதிலும், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மீதான ஆழமான நம்பிக்கையின்மை காரணமாக முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் சந்தேகம் நீடித்தது.

மேலும் வாசிக்க: புல்மோட்டையில் நடந்தது என்ன?

இந்த அதிருப்திக்கு பதிலளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் NPP ஈடுபட்டதுடன், ஓட்டமாவடி மயானத்திற்கான திஸாநாயக்கவின் விஜயம் இதற்கு உதாரணமென்பதுடன், அது ஒதுக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது.

இதன் விளைவாக, திஸாநாயக்கவிற்கு ஆதரவான மாற்றம் சிறுபான்மை சமூக அக்கறைகளுக்கு முன்னுரிமை அளித்து அனைவரையும் உள்ளடக்கலான தலைமைத்துவத்திற்கான வளர்ந்து வரும் கோரிக்கையை பிரதிபலிக்கிறது.

மலையக தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக உள்ளூர் அரசியலில் செல்வாக்கு செலுத்திய மத்திய மாகாணத்தில், பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரேமதாச குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றார்.

எவ்வாறாயினும், சமீபத்திய போக்குகள் பாரம்பரிய அரசியல் பரிமாணத்தில் அதிகளவில் ஏமாற்றமடைந்துள்ளதுடன் நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் NPP இன் முக்கியத்துவத்திற்கு ஈர்க்கப்படுகின்ற இளைய வாக்காளர்களிடையே ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.

பிரேமதாசவின் அணுகுமுறையானது குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் ஸ்திரப்படுத்தும் சக்தியாக பலரிடையே எதிரொலித்த போதிலும் கூட, இளம் வாக்காளர்கள் தங்களது குறிப்பான கரிசனங்களைப் பேசும் பிரதிநிதித்துவத்தை நாடுவதால், NPPயின் உருவாக்கமானது ஒரு சவாலை முன்வைக்கிறது.

முடிவு: ஒரு புதிய அரசியல் பரப்பு?

2024 ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் இனரீதியான வாக்களிப்பு முறைமைகளில் ஆழமான மாற்றத்தைக் குறிப்பதுடன், குறிப்பாக அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தமிழ் பேசும் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க ஈர்ப்பினை பெறுகிறது.

பாரம்பரிய அரசியல் உயரடுக்குகளால் ஓரங்கட்டப்பட்டதாக வரலாற்று ரீதியாக உணர்ந்த சமூகங்கள் நீதி, உள்ளடக்கம் மற்றும் பொருளாதார சீர்திருத்தம் ஆகிய விடயங்களில் NPPயின் அவதானத்துடன் ஆழமாக எதிரொலிப்பதால், ஆதரவின் எழுச்சியானது அரசியல் மாற்றத்திற்கான பரந்த விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான வளப்பரம்பல் போன்ற நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கட்சியின் அர்ப்பணிப்பு, தங்களின் நலன்கள் மற்றும் கரிசனங்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை விரும்பும் வாக்காளர்களை அணிதிரட்டியுள்ளது.

மேலும் வாசிக்க: திட்டமிட்ட முறையில் இயங்காமையினால் குப்பை மேடாக மாறிய அஷ்ரப் நகர் நில நிரப்புதளம்

அதே சமயம், சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஆட்சியில் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியை விரும்புவோர் மத்தியில் கணிசமான ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கின்றனர்.

பிரேமதாசாவின் அதிகாரப் பகிர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி வாக்குறுதிகள், வேகமாக மாறிவரும் சூழலின் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் ஓர் நிலையான அரசியல் பரப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வாக்காளர்களிடம் எதிரொலிக்கிறது.

வாக்காளர் உணர்வில் உள்ள இந்த இரட்டைத்தன்மையானது, புதிய தலைமைக்கான அழைப்புக்கும் ஸ்திரத்தன்மையில் வேரூன்றிய நடைமுறையான தீர்வுகளுக்கான விருப்பத்திற்கும் இடையேயான ஓர் சிக்கலான இடைவினையாற்றுகின்றது.

சில வாக்காளர்கள் திஸாநாயக்கவின் உள்ளடங்கலான நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பான நோக்கினால் ஈர்க்கப்பட்டாலும், மற்றவர்கள் எச்சரிக்கையாக இருந்து, அரசியலில் மிகவும் வழமையான அணுகுமுறையை உள்ளடக்கிய பிரேமதாச போன்ற ஸ்தாபிக்கப்பட்ட தலைவர்களிடமிருந்து உறுதிமொழியைப் பெறுகின்றனர்.

நவம்பர் 14 இல் திட்டமிடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த வளர்ந்து வரும் அரசியல் பரிமாணத்திற்கு அவை ஓர் முக்கியமான சோதனையை முன்வைக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்ட இந்த மாற்றங்கள் இரு கட்சிகளும் அரசியல் பரப்பை மீள்வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறுகளுடன் அரசியல் கூட்டணிகள் மற்றும் முன்னுரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

அனுர குமார திஸாநாயக்கவின் அதிகரித்து வரும் ஆதரவானது, அனைத்து சமூகங்களின், குறிப்பாக வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் புதிய தலைமைத்துவத்திற்கான வலுவான கோரிக்கையை சுட்டிக் காட்டுகிறது.

மாறாக, பிரேமதாசாவின் தற்போதைய வேண்டுகோளானது, முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் பல அங்கத்தவர்கள் எதிர்பார்க்கும் ஸ்திரத்தன்மைக்கு இடையே பேணப்பட வேண்டிய நுட்பமான சமநிலையை விளக்குகிற பல வாக்காளர்களால் விரும்பப்படுகின்ற நடைமுறையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

உண்மையில், அடுத்த நிர்வாகமானது சிங்களப் பெரும்பான்மையினரின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாது சிறுபான்மை சமூகங்களின் நீண்டகால மனக்குறைகளை எதிர்கொள்ளும் சவாலையும் முகங்கொடுக்கும். தமிழ் பேசும் பிராந்தியங்களில் உருவாகி வரும் வாக்காளர் பரிமாணவியல், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தொகுதிகளின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை வினைத்திறனாக நிவர்த்தி செய்யும் இந்தத் தலைவர்களின் இயலளவானது இலங்கையின் எதிர்காலத்தில் மிகவும் உள்ளடங்கலான மற்றும் சமத்துவமான அரசியல் பரப்பினை வடிவமைப்பதில் முக்கியமானதாக இருக்கும்.

வாக்காளர்கள் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை கோருவதால், வரவிருக்கும் தேர்தல்கள் தேசத்தின் அரசியல் விபரிப்பை மீள்வரையறை செய்யும் என்பதுடன் ஓர் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மிகவும் இணக்கமான சகவாழ்வு மற்றும் கூட்டு முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

சிவசாந்தி, Factum நிகழ்ச்சித் திட்ட முகாமையாளராகவும், அபிவிருத்தித் துறையில் குறிப்பாக களமட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் சமூக வசதிப்படுத்தலை மேற்கொள்வதில் எட்டு வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ளவராவார்.