உண்மையைத் தேடி - #Corona #FakeNews (Episode - 01)

கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி பல்வேறு கட்டுக் கதைகள், வதந்திகள், திரிவுபடுத்தப்பட்ட விடயங்கள், பொய்த் தகவல்கள் பரவிவருகின்றன. வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதைப் போன்று பொய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் பெரும் சவாலாக உள்ளது.

#Corona #FakeNews உண்மையைத் தேடி நிகழ்ச்சியினூடாக பொய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஓர் வழிகாட்டலாக இது அமைகின்றது. இந்த முதலாவது பாகத்தில் நாம் இரண்டு விடயங்கள் பற்றி ஆராய்கின்றோம்:

1. தற்போது பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள் பெயர்களிலேயே அவர்களது உத்தியோக பூர்வ கடிதத்தலைப்புக்களில் போலியான அறிக்கைகள் சமூக ஊடகப்பரப்பில் வெளியிடப்படுகின்றன.

இதனால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டதாகவும் போலியான அறிக்கை வெளியாகியிருந்தது. இதனையடுத்து தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அன்றேல் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இருந்து மாத்திரமே அறிக்கைகளை படிக்குமாறு ஏப்ரல் 3ஆம் திகதி வெளியான அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணி தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவிடம் நாம் விசாரித்தோம்.

2. ஏப்ரல் இரண்டாம் திகதி பேருவளை ,குட்டிமலை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலினுள் மக்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டதாகவும் பொதுச் சுகாதார அதிகாரிகளை உள்ளே செல்வதற்கு இடமளிக்கவில்லை என்றும் சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் பரவிய செய்தி பொய் என்பது கண்டறியப்பட்டமை எவ்வாறு என்பது தொடர்பாக விளக்குகின்றார் விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி.

போலித்தகவல்களால் ஏமாற்றப்படாமல் தப்புவதற்கு கடைப்பிடிக்கவேண்டிய சில அத்தியாவசிய விடயங்கள் பற்றிய ஆலோசனைகளுடன் முதலாவது நிகழ்ச்சி நிறைவிற்கு வருகின்றது. இந்த நிகழ்ச்சியை அருண் ஆரோக்கியநாதன் மற்றும் துஷியந்தி சிலுவைதாஸ் ஆகியோர் தொகுத்துவழங்கியுள்ளனர்.