இறைவரித் திணைக்களத்துக்கு 24 கோடி ரூபா மறுக்கப்பட்ட காசோலைகள்: அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் தேசிய இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற மறுக்கப்பட்ட காசோலைகளின் பெறுமதி 24 கோடி ரூபாய் (2,451,465,383) என பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.
இந்தத் தொகையை வசூலிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அக்குழு, தேசிய இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.
கசினோ வியாபார நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ள நிலுவை வரிப்பெறுமதி 2,670 மில்லியன் ரூபாவை வசூலிப்பது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு வெளியானது.
அத்துடன், 2010ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க நிலுவை வரிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரி தகவல்களுக்கு அமைய வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையின் பெறுமதி 14இ450 கோடி ரூபா (144,537,364,916 ரூபா) என்றும் இங்கு புலப்பட்டது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் குழு கூடியபோதே இவ்விபரங்கள் புலப்பட்டன.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக்க, மொஹமட் முசம்மில், நிரோஷன் பெரேரா,வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, கலாநிதி ஹரினி அமரசூரிய, காதர் மஸ்தான்,எஸ்.சிறிதரன், வீரசுமன வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து தேசிய இறைவரித் திணைக்களத்தின் கீழ் உள்ள ரமிஸ் கட்டமைப்பை செயல்படுத்த ஒரு பொதுவான வழிமுறையை தயாரிப்பதை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுஇ நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்த ரமிஸ் கட்டமைப்பில் 29 நிறுவனங்களை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 06 நிறுவனங்கள் ஏற்கனவே இணைந்திருப்பது குழுவில் புலப்பட்டது. இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது மேலும் 06 நிறுவனங்கள் இக்கட்டமைப்பில் இணைக்கப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டில் செயற்படும் அனைத்து வங்கிகளையும் இந்தக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பான வழிகாட்டல்களை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்தக் கட்டமைப்பில் இணைந்துகொள்ள தயார் என்பதும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டமைப்பில் அரசாங்க நிறுவனங்களை இணைத்துக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய இறைவரித் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது.
இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, தேசிய இறைவரித் திணைக்களம், தேசிய கணக்காய்வுத் திணைக்களம், திறைசேரி உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)