செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டின் சனத்தொகையில் அதிகமானோருக்குத் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி திட்டம்
இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.
கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஜூலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 3 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன், இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும் குருநாகல் மாவட்டத்துக்கு இரண்டு இலட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளை, முறையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி அவர்கள் சுகாதாரத் துறையினருக்கு எடுத்துரைத்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கெனவே முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ளவற்றை, கேகாலை மாவட்ட மக்களுக்காக, முலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென வழங்குமாறும், ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஃபைசர் தடுப்பூசிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் மொடர்னா தடுப்பூசிகளைக் கண்டி மாவட்டத்துக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் கிடைக்கவிருக்கும் தடுப்பூசிகளை, கொவிட் பரவலைக் கருத்திற்கொண்டு, விஞ்ஞானபூர்வமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது கணிசமான சதவீதமானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், தூதரகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியதன் தேவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)