முஸ்லிம் ஆசிரியை இடமாற்றக் கோரி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
-ஏ.எல் றபாய்தீன் பாபு-
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியையினை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று 2ஆம் திகதி ஹபாயா அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவுகும் பாடசாலை நிருவாகத்திற்குமிடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதிபரும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று 3ஆம் திகதி காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டமாகச் சென்று திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.
"அடாவடி ஆசிரியை எமக்கு வேண்டாம்", "தமிழ் கலாச்சாரத்தை மிதிக்காதே", "அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்", "உனது கலாச்சாரம் உனக்கு எனது கலாச்சாரம் எனக்கு" என ஆர்ப்பாட்டத்திலிருந்தவர்கள் கோசமிட்டுக் கொண்டிருந்த வேலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் ஸ்தலத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார்.
இதனை ஏற்க மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்குள் நுளைந்து வலயக் கல்விப் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சில கேள்விகளைக் கேட்டனர்.
அங்கு கூடியிருந்தவர்களிடம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வினயமாக வேண்டிக் கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கள் கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ற்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
2017இல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு ஸ்ரீ சண்முகா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.
மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் அவர்கள் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் ஷண்முஹாவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் ஸ்ரீ சண்முகாவிற்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.
அதன் பிரகாரம் ஸ்ரீ சண்முகாவிற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த சிலரினால் தடுக்கப்பட்டதாக தெரியவருகிறது அவரின் கையடக்கத் தொலைபேசியும் பறிக்க முயன்றுள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியையும் பாடசாலை அதிபரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவிகளில் சிலர்அச்சம் காரணமாக பாடசாலைக்குச் செல்லவில்லையென தெரிய வருகிறது
குறிப்பிட்ட விவகாரம் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)