ரஜரட்ட பல்கலையில் ஜப்பானிய மொழி ஆய்வுகூடம் அங்குரார்ப்பணம்

ரஜரட்ட பல்கலையில் ஜப்பானிய  மொழி ஆய்வுகூடம் அங்குரார்ப்பணம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பீடத்தின் மொழிகள் திணைக்களத்தில் ஜப்பானிய மொழி ஆய்வுகூடத்தின் அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (திருமதி) ஜி.ஏ.எஸ்.கினிகத்தர, சமூக விஞ்ஞானம் மற்றும் மனித நேய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். டி.ரி. மென்டிஸ், மொழிகள் திணைக்களத்தின் தலைமை அதிகாரி பேராசிரியர். ஒலகன்வத்த சந்திரசிறி தேரர் ஆகியோருடன், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் இதர பீடங்களின் அங்கத்தவர்களும், ஜப்பானிய தூதரகத்தின் ஆலோசகர் கவகாமி டகாயுகி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி சார்பாக பங்கேற்றிருந்தனர்.

Cultural Grassroots Projects இன் நன்கொடையினூடாக 12 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஜப்பானிய அரசாங்கத்தினால் ஜப்பானிய மொழி ஆய்வுகூடம் நிறுவப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியை சிறந்த முறையில் பயில்வதற்கு இந்தத் திட்டம் ஆதரவளிப்பதுடன், புத்தாக்கமான வழிமுறையான “Active Learning” (அறுகோணி மேசையில் குழுநிலைச் செயற்பாடுகள்) என்பதற்கமைய பயில உதவியாக அமைந்திருக்கும்.

மேலும் கணனி உதவியிலான பயிற்றுவிப்பு மற்றும் இணைய அடிப்படையிலான பயிலல் போன்ற அம்சங்களையும் இந்த நிலையம் கொண்டுள்ளது. ஜப்பானிய மையத்தினால் புதிய புத்தகங்களும் இந்தத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்தது.

இவற்றினூடாக, இலங்கையில் ஜப்பானிய மொழியில் முன்னோடியான மையமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தை திகழச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேட வைபவங்களுடன் அங்குரார்ப்பண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜப்பானிய மொழி தொடர்பான எதிர்காலத் திட்டம் அடங்கிய விளக்கம் அடங்கலாக, வரவேற்பு மற்றும் மாணவர்களின் இசை நிகழ்வு போன்றவற்றுடன், “Guide to Japanese Literature”எனும் தலைப்பில் புத்தக வெளியீடும் இடம்பெற்றது.

ஜப்பான் மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருட பூர்த்தியடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில், ஜப்பானிய மொழியை பயில்வதன் முக்கியத்துவம் மேலும் ஊக்குவிக்கப்படுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான அடிப்படை உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்து நிலையில், ஜப்பானிய மொழி ஆய்வுகூடம் அங்குரார்ப்பணம் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென உப வேந்தர் பேராசிரியர். ஜி.ஏ.எஸ். கினிகெதர தெரிவித்தார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் தமது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், உள்நாட்டு சமூகத்துக்கு சேவையாற்றக்கூடிய வகையில் மாணவர்களின் திறன்களை கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.

தூதுவர் மிசுகொஷி ஹிதெகியின் சார்பாக நிகழ்வில் பங்கேற்றிருந்த கவகாமி டகாயுகி கருத்துத் தெரிவிக்கையில், “ஜப்பானிய மொழியை பயில்வது என்பது, ஜப்பானில் வழங்கப்படும் பல புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த ஜப்பானிய மொழி ஆய்வுகூடத்தின் ஆரம்பம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் நட்புறவில் மேலும் முக்கிய பங்களிப்பை வழங்கும் ஒரு அங்கமாக அமைந்திருக்கும்.” என்றார்.