50,000க்கு அதிகான கர்ப்பிணிகள் ஏன் இதுவரை கொவிட் தடுப்பூசி பெறவில்லை?
ஆர். ஜெயந்தி
"பிரசவத்தின் பின்னர் சவூதி அரேபியாவில் வசிக்கும் கணவரிடம் செல்ல எதிர்பார்த்துள்ளேன். சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் இந்த பயணத்திற்கு தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமொன்று காணப்படுகின்றது" என வத்தளையில் வசிக்கும் ஆறு மாத கர்ப்பிணியான சுமத்திரா மகேந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார்.
இதனால் கொவிட் - 19 இற்கான தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை தாமதப்படுத்தியுள்ளேன். சினோபார்ம் தவிர்ந்த வேறொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் தயாராகவுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
"கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வது முக்கியமானது. எனினும் கணவரை சந்திப்பதற்கான தனது வெளிநாட்டுக்கு பயணத்திற்கு இந்த தடுப்பூசியின் காரணமாக தடை வந்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது" என 32 வயதான சுமத்திரா தெரிவித்தார்.
மேற்படி சுமத்திரா போன்று பல கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை கொவிட் -19 இற்கு எதிரான தடுப்பூசியேற்றாமல் அலட்சியமாக செயற்படுவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் ஆராய்வதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
நாட்டில் கொவிட் - 19 இன் மூன்றாவது அலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிரித்துச் செல்கின்ற அதேவேளை, மரண வீதமும் அதிகரிக்கின்றது.
கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி வரை 12,022 பேர் கொவிட் - 19 தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் 43 பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் என குடும்ப சுகாதார பணியகத்தினால் செப்டம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றுக்குள்ளான் முதலாவது கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் கடந்த மே 6ஆம் திகதி நாட்டில் பதிவானது. அன்றிலிருந்து கடந்த நான்கு மாத காலப் பகுதிக்குள் இதன் எண்ணிக்கை 43 உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, 2020 மார்ச் மாதம் முதல் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 6,049 கர்ப்பிணிப் தாய்மார்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 111 பேர் 2020 ஆண்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களாவர். ஏனைய 5,938 கர்ப்பிணி தாய்மார்களும் கடந்த ஒன்பது மாத காலப் பகுதியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி தரவுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் கர்ப்பிணித் தாய்மார்களை இலகுவில் தொற்றக்கூடியதாகும். இதனை தவிர்க்கும் முகமாகவே, கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் - 19 இற்கு எதிரான தடுப்பூசியினை அவரசமாக ஏற்றிக்கொள்ளுமாறும் சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன், வீரியமிக்க டெல்டா வைரஸ் கர்ப்பிணித் தாய்மார்களை இலகுவில் தொற்றும் என்பதன் காரணமாக கர்ப்பம் தவிர்ப்பதை ஒரு வருடங்களுக்கு பிற்போடுமாறு சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலும், கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் - 19 இற்கு எதிரான தடுப்பூசியேற்றுவதில் அலட்சியமாக செயற்படுவதாக சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்த 25 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி இரட்டை குழந்தைகளைப் பிரசவித்திருந்தார்.
எனினும் மறுநாள் (9) காலை அவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்திருந்தார். இவர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டிருக்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குடும்ப சுகாதார பணியக்கத்தினால் கடந்த செப்டம்பர் 10ஆம் வரையான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 15 சதவீதமான கர்ப்பிணித் தாய்மார்களே கொவிட் - 19 இற்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் -19 எனும் நோயினை தடுப்பூசியின் ஊடாகவே கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் நாட்டு மக்களுக்கு இலவசமாக கொவிட் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஜுலை மாதம் வரையான காலப் பகுதியில் சுமார் 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மருந்துகள் வழங்கள் ஒழுங்குபடுத்தல் இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டுக்கு கொண்டுவரப்படும் கொவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலிச் செய்திகளும் மூட நம்பிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தி தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் இன்று தள்ளப்பட்டுள்ளது. அதிலும் கர்ப்பிணிப் தாய்மார்களுக்கான தடுப்பூசியேற்றல் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை, கர்ப்பிணிப் தாய்மார்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற தடுப்பூசியேற்றலே சிறந்த தெரிவு என என குடும்ப சுகாதார பணிக்கத்தின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில் பெரும்பாலானோர் பிற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் - 19 அடையாளம் காண்பதற்கு முன்னர் பல்வேறு நோய் நிலைமைகள் காரணமாக உயிரிழக்கும் கர்ப்பிணிப்பிணிகளின் வருடாந்த எண்ணிக்கை 90 முதல் 100 வரை இருந்ததாக விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எனினும் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை கொவிட் தொற்றினால் மாத்திரம் 40க்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"போலி பிரசாரங்கள் காரணமாக ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளக் கர்ப்பிணித் தாய்மார் தயக்கம் காட்டினர். எனினும், தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகள் தடுப்பூசியேற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது" என நுவரெலியா சுகாதார பிரிவின் குழந்தைகள் மற்றும் தாய்மார் நல உத்தியோகத்தர் செல்லையா கேதீஸ்வரி தெரிவிக்கின்றார்.
கர்ப்பிணித் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசியேற்ற விசேட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கங்கள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கொழும்பு டி சொய்சா போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணர் கௌரி செந்தில் நாதனிடம் வினவியதற்கு பின்வருமாறு தெரிவித்தார்,
"ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது அவரின் போசாக்கு தேவை அதிகரிப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவடைகிறது. அத்துடன் சுவாசப் பிரச்சினையினையும் எதிர்நோக்குகின்றனர்.
எனவே கொவிட் தொற்று சாதாரண பெண்களை விட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றது. இந்த ஆபத்தான நிலையில் இருந்து கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்பதற்கான கொவிட் தடுப்பு முறைகளில் தடுப்பூசி முக்கியமான ஒன்றாகும். இந்த தடுப்பூசியேற்றலின் ஊடாக மரண வீதத்தினை குறைக்க முடியும்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதால் உடல் வலி, லேசான காய்ச்சல் போன்ற சிறிய பக்க விளைவுகள் தோன்றிய போதும் இதுவரை ஆபத்தான பக்க விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை.
கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும். நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து கொவிட் தடுப்பூசிகளும் தரமானவையாகும். இதனால் தமது பிரதேசத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு தடுப்பூசியை கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பிட்ட சில நாடுகளில் சினோபார்ம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
அவ்வாறான நாடுகளுக்கு சினோபார்ம் தடுப்பூசியேற்றியவர்கள் பயணிக்கின்ற சந்தர்ப்பத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சிறிய காரணங்களுக்காகத் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தாமதப்படுத்தி உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டாம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)