பதில் வலய கல்வி பணிப்பாளராகவே நியமிக்கப்பட்டேன்: எஸ். புவனேந்திரன்
கல்முனை வலயக் கல்வி பணிமனையின் புதிய வலய கல்வி பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக அதிகாரி செல்லத்துரை புவனேந்திரன் கடமையேற்றுள்ளார் என இணையத்தளத்திலும், பேஸ்புக்கிலும் வெளியான செய்தி உண்மையில்லை என நாம் மேற்கொண்ட தேடலில் உறுதியானது.
பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட செய்தி
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் இன்று (16) வியாழக்கிழமை ஓய்வுபெற்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக செயற்படும் பிரதிக் கல்விப் பணிப்பாளரான செல்லத்துரை புவனேந்திரன், பதில் வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதில் நியமனம், கிழக்க மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்து பண்டாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, பதில் வலய கல்வி பணிப்பாளராக இன்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளர்.
கல்முனை வலயக் கல்வி பணிமனையின் புதிய வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என இணையத்தளத்திலும், பேஸ்புக்கிலும் வெளியான செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் அறிவதற்காக சிரேஷ்ட கல்வி நிர்வாக அதிகாரியான செல்லத்துரை புவனேந்திரனை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியது.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
"கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் இன்று ஓய்வுபெற்றார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதில் கடமையாற்றுவதற்காக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
நிரந்த வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை பதில் கடமையாற்றுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தி
இது தொடர்பில் கல்முனை வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலினை தொடர்புகொண்ட வினவிய போது,
"கல்முனை வலய கல்வி பணிப்பாளர் பதவியிலிருந்து இன்று நான் ஓய்வுபெற்றேன். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் பதில் வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்லத்துரை புவனேந்திரனிடம் தனது பொறுப்புக்களை ஒப்படைத்தேன்.
நிரந்தர வலய கல்வி பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை இவர் பதில் கடமையாற்றுவார்" அவர் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)