இந்திய பிரதமரின் விசேட செய்தியுடன் கொழும்பை வந்தடைந்தார் ஜெய்சங்கர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்தார்.
சுமார் 12 மணித்தியாலங்கள் நாட்டில் தங்கியிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்றிரவு சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்த தீடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் அந்நாட்டுக்கான அழைப்பினை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவுடனான சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல தசாப்த காலமாக அரசியல், இராஜதந்திரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருங்கி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)