புதிய ஜனாதிபதி தனது வாக்குறுதிகளுக்கமைய அனைத்து மக்களையும் அரவணைக்க வேண்டும்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஏழாவது ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரியவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த ஜனாதிபதியினை தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெற்றது. எந்தவொரு பாரிய வன்முறைகளுமின்றி இந்த தேர்தல் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
அது போன்று தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் எந்தவொரு தேர்தல் வன்முறை சம்பவங்களும் இடம்பெறக்கூடாது என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த தேர்தலில் சுமார் 1,360,016 வாக்குகளின் வித்தியாசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்;டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை இடம்பெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையின மக்களே இருந்துள்ளனர். எனினும் குறித்த சக்தி இந்த தேர்தலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களான தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வாக்களித்து மைத்ரிபால சிறிசேனவினை ஆட்சியில் அமர்த்தினர்.
அதுபோன்றே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களினை பிரதிநிதிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இந்த தேர்தலில் எந்தவித நிபந்தனையுமின்றி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்தனர்.
இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் சஜித் பிரேமதாசவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற எண்ணத்தில் காணப்பட்டனர். மேற்குறிப்பிட்ட கட்சிகளின் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு தெற்கில் வேறு வகையில் சித்தரிக்கப்பட்டது. இதனால் தெற்கு உள்ளிட்ட சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கான ஆதரவு வலுப்பெற்றிருந்தது.
இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் மாத்திரமே சஜித் பிரேதமாச வெற்றி பெற்றிருந்தார்.
இது தவிர்த்து ஏனைய 16 தேர்தல் மாவட்டங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியடைந்தார். இந்த தேர்தல் முடிவுகள் இனங்கள் துருவமயப்பட்டுச் செல்லும் நிலையினை இலங்கை அரசியலில் உணர்த்தியிருக்கின்றது.
உண்மையில் கட்சி அரசியலுக்கு அப்பால் சிங்கள மக்கள் தமது நிலைப்பாடுகளை எடுக்கும் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு தம்மை இழுத்துக்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் முடிவுகளினை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இதுவொரு பிழையான தீர்மானமாகும். இந்த தேர்தலில் சுமார் 5இ471இ959 மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர்.
இவரின் இந்த தீர்மானம், தனக்கு வாக்களித்த மக்களினை நடுக்காட்டில் வீட்டுச் செல்வது போன்ற விடயமாகும். இது தொடர்பில் அவர் மறுபரீசிலினை செய்ய வேண்டிய நிலையொன்றுள்ளதுடன், இலங்கை அரசியலில் அவர் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தல் அவரின் ஆரம்பம் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தேர்தலில் சஜித் பிரேதமசாவினை களமிறக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முன்னின்றனர்.
'சஜித் பிரேமதாச ஒரு ஜனசரஞ்சகமான வேட்பாளர். இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிக வாக்குகள் கிடைக்கும். இதனால் இந்த தேர்தலில் இவரே களமிறங்க்பட வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்து வந்ததுடன் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் ஆசீர்வாதத்தினை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அமைச்சர் ஹக்கீமும் அவருடைய கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செயற்பட்டது.
அதுபோன்று 2015ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் தவிர்ந்த அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் பிரதான வியூகம் வகிப்பாளராக காணப்பட்டார்.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவினையும், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவினையும் களமிறக்கியதற்கு பிரதான வகிபாகம் மேற்கொண்;டார் ரவூப் ஹக்கீம்.
எனினும் அவருடைய அனைத்து தேர்தல் வியூகங்கள் தோல்வியில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் சிறுபான்மை மக்களின் எதிர்கால நிலைப்பாடு என்பது பாரிய கேள்விக்குரியாகியுள்ளது.
இதற்கு முன்னர் நான் எழுதிய பல கட்டுரைகளில் சிறுபான்மையின மக்கள் பிரதான வேட்பாளர்கள் மூவருக்கும் ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தேன். எனினும் அது இடம்பெறவில்லை என்பதுடன் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கே வாக்கிளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவொரு பாரிய தவறாகும். மக்களின் இந்த பிழையான நிலைப்பாட்டினால் சில சிறுபான்மையின கட்சிகள் மக்களின் தீர்மானத்திற்கு கட்டுப்பாட்டு சஜித் பிரேமதசாவிற்கு ஆதரவளிக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒன்பது வருடங்கள் நாட்டில் இடம்பெற்ற ஆட்சியில் முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியது போன்று தமிழ் மக்களும் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதேபோன்று தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மக்களின் பிரச்சினைகள் வித்தியாசமானவை என்பதனால் அவர்கள் ஒருபோது இணைந்து சென்றதில்லை.
எனினும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்வுள்ளமையினால் சிறுபான்மையின மக்கள் அவருடன் இணைந்து செல்வதே சிறந்ததாகும். அத்துடன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாத சிறிய குழுவினரால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலினை அடுத்து நாட்டின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளேன் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இதற்கமைய குறித்த தேர்தலில் இவர் களமிறங்கியதுடன் நாட்டின் பாதுகாப்பு என்ற விடயத்தினை முன்வைத்தே வாக்குகளை கோரியிருந்தாh.
தற்போது இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இவர், நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது இவரது கடமையாகும். இதேவேளை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் பின்னர் தேர்தல் செயலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ,
'தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி, ஏனைய மக்களுக்காகவும் இன, மத போதமின்றி சேவையாற்றுவேன்' என்றார்.
இதற்கமைய சிறுபான்மையினரினையும் அவரவணைத்து ஆட்சியினை முன்கொண்டு செல்வது இவரது தலையாய கடமையாகும். இதற்கு மேலதிகமாக கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.
அதுபோன்று சிறுபான்மையின மக்கள் முன்னைய சம்பவங்களினை மறந்து புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேபோன்று கடந்த நான்கரை வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற நிலையற்ற ஆட்சியினால் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் முகங்கொடுத்தனர்.
இதனால் நாட்டில் உடனடியாக நிலையான ஆட்சியினை புதிய ஜனாதிபதி உருவாக்க வேண்டும். இதன் ஊடாக நாட்டினை குறுகிய காலத்திற்குள் பல்வேறு வகையில் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதும்; குறிப்பிடத்தக்கதாகும்.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)