சவூதியினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் பள்ளிவாசல்களுக்கு விநியோகம்
சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
நாட்டிலுள்ள 2,500 பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு 20 கிலோ வீதம் பேரீச்சம் பழங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பங்கேற்புடன் இடமபெற்றது.
சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊதின் நன்கொடையான 50 தொன் பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் வழங்கியது.
இதனை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, புத்தசாசன மற்றும் மத கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரான மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் ஆகியோரிடம் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நன்கொடையானது இரு புனிதசத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் அவர்களால், பல சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டங்களின் கீழ், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் தேவைப்படும் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கோடு, வழங்கப்பட்டதாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை சவூதித் தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,
"மன்னர் சல்மான் நிவாரணங்களுக்கான மையம் உலகெங்கிலும் மேற்கொண்டு வரும் பெரும் மனிதாபிமான முயற்சிகளை சவூதி அரேபிய தூதுவர் அவர்கள் பாராட்டியதோடு அம்முயற்சிகள் இரு புனிதஸ்தலங்ககளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத், பட்டத்து இளவரசர் பிரதமர் போன்றோரின் தலைமையிலான சவூதி அரேபியா அரசாங்கம் பல்வேறு சூழ்நிலைகளையும், இன்னல்ககளையும் எதிர்கொள்ளும் சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கும் அந்நாடுகளிலுள்ள மக்களுக்கும் உதவுவதில் காட்டும் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன.
இலங்கை மக்களுக்காக சவூதி அரேபிய இராச்சியம் வழங்கிய அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும், குறிப்பாக புனித ரமழான் மாதத்தில் அதன் மூலம் பயனடைவதற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் விரைவாகத் தொடர்பு கொள்ளவும்" என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட புத்தசாசன சமய விவகார அமைச்சின் செயலாளர்,
"இலங்கை மக்களுக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்காகவும் சவூதி அரேபிய அரசுக்கும், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, இவ்வாறு மனிதாபிமானத்தின் இராச்சியமான சவூதி அரேபியா, உலகின் அனைத்துப் பகுதிகளிலும், தாராளமான நன்கொடைகளை வாரிவழங்குவதென்பது ஆச்சரித்தக்க விடயமல்ல" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)