அமான் அஷ்ரபின் பங்கேற்புடன் தேசிய முஸ்லிம் பேரவை உதயம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் புதல்வரான அமான் அஷ்ரபின் பங்கேற்புடன் தேசிய முஸ்லிம் பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி, சிறந்த உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த பேரவை, புதிய உத்வேகத்துடன் தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
முதன் முறையாக, இலங்கையில் உள்ள முஸ்லிம்களது நான்கு பிரதான பகுதியினரான சோனகர், மலாயர், மேமன் மற்றும் தாவூதி (போரா) ஆகிய சமூகத்தினர் ஒன்றிணைந்த ஒருங்கமைப்பாக இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை இயங்குகின்றது.
நாட்டின் முன்னணி வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், வைத்திய கலாநிதிகள் மற்றும் சிவில் செயற்பட்டாளர்கள் உள்ளிடக்கிய ஒரு குழுவினராலேயே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பேரவையின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம், கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜெட்விங் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கையின் புகழ்பெற்ற சிறந்ததொரு மருத்துவரான பேராசிரியர் கமால்தீனை தலைவராகவும், அவருடன் இணைந்து சபையில் அப்ஸல் மரைக்கார் (உப தலைவர்), குஸைமா ஜெபர்ஜி (உப தலைவர்), ஸஹரின் ஹமீன் (செயலாளர்) மற்றும் சப்ரி கௌஸ் (பொருளாளர்) ஆக இணைந்து கொள்கின்றனர்.
இந்த பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக அமான் அஷ்ரப் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)