இலங்கையில் கொரோனா; சமூக பரவல் ஏற்படாது பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பு
றிப்தி அலி
முழு உலகத்தினையும் இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் கொரோன வைரஸின் பரவல் வீதம் எமது நாட்டில் கடந்த நான்கு தினங்களில் பாரியளவில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை அடையாவிடினும் பரவும் வேகம் மற்றும் நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
எனினும், இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதர துறையும், பாதுகாப்பு துறையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இந்த தரப்பினருக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களினையும் வழங்க வேண்டியது பொதுக்களின் தலையாய கடமையாகும். எனினும், தேவையானளவு ஒத்துழைப்பு பொதுமக்களிடமிருந்து சுகாதர துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு கிடைக்கின்றதா என்பது பாரிய கேள்விக்குரியாகும்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை (29) நண்பகல் 12.00 மணி வரை 619ஆக ஆதிகரித்துள்ளதுடன் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்ககை 134ஆக காணப்படுகின்றது.
அந்த வகையில் இலங்கையில் முதல் 100 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 57 நாட்களிலேயே கண்டறியப்பட்டனர். ஆனால் இரண்டாவது 100 தொற்றாளர்களை அடைவதற்கு வெறுமனே 19 நாட்கள் மாத்திரமே ஏற்பட்டது. மூன்றாவது 100 தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கை ஒன்பது நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் நான்காவது 100 தொற்றாளர்கள் நான்கு நாட்களிலும், ஐந்தாவது 100 தொற்றாளர்கள் இரண்டு நாட்களிலும், ஆறாவது 100 தொற்றாளர்கள் இரண்டு நாட்களிலும் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை, இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 80 சதவீதமானவர்கள் நோய் அறிகுறியின்றியும், குறைந்தளவான அறிகுறிகளுடனுமேய காணப்படுகின்றனர் என ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என்பதனை அறியாமல் சமூகத்தோடு தொடர்புகளை பேணக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும், அவர்களினால் சமூகத்திற்கு வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதனால் கொரானா வைரஸ் தொற்றாளர்களினை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனையினை அதிகரிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்ததினை வழங்கி வந்தது.
இந்த பரிசோதனையினை அதிகரிப்பதன் மூலம் மக்களோடு மக்களாக காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் என குறித்த சங்கம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பீ.சீ.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையினை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் 16 இடமங்களில் இந்த பீ.சீ.ஆர் பரிசோதனை இடம்பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய கடந்த திங்கட்கிழமை (27) 1,553 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தினமும் சராசரியாக 1,000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதுவே ஆகக் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையாகும். ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்று வீதத்தில் எமது நாட்டில் இன்னும் அந்த பரவல் இடம்பெறவில்லை என்பது எமக்கு மன ஆறுதலைத் தருகின்றது.
இதனாலேயே இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் சமூகப் பரவல் நிலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது எமக்கு சந்தோசமளிக்கும் விடயமாக காணப்பட்டாலும், அந்த நிலைமையை இழந்து விடாமல் பாதுகாத்து எமது நாட்டை கொரோனா வைரஸிலிருந்து மீன்டெடுக்க வேண்டிய பொறுப்பு எம்மனைவரிடமும் காணப்படுகின்றது.
இன, மத வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். அது மாத்திரமல்லாமல், ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு, கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம், பொலிஸ் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் போன்றவற்றினால் வழங்கப்படும் அறிவுத்தல்களை செயற்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நாட்டில் அமுலிலிருந்த ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் சற்று தளர்;த்தப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காலப் பகுதியில் சமூகப் பரவல் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. குறிப்பாக தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாம் வழங்க வேண்டும்.
அதுபோன்று தமிழ் - சிங்கள புத்தாண்டு வீட்டில் கொண்டாடப்பட்டது போன்று புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்களின் மதக் கடமைகள் அனைத்தும் வீடுகளிலேயே இடம்பெறுகின்றது.
இது போன்று வெசாக் தின வைபவங்களும் வீடுகளிலேயே மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது போன்று நோன்புப் பெருநாளும் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும். இவற்றுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்கி இந்த தொற்றை அழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வதை பார்த்து பதற்றமடையாமல் அதிலிந்;து விரைவாக மீள்வதற்கான விழிப்புணர்வில் மக்கள் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல் அலட்சியமாக இருப்போமேயானால் பாரிய அபாயகர நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
Comments (0)
Facebook Comments (0)