60 வயதுக்கு மேற்பட்ட 2.65 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை
இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 2.65 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்தது.
இது தொடர்பில் யுனிசெப் இன்று (18) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரலாற்றின் மிக முக்கியமான கூட்டு முயற்சிகளில் ஒன்றான கொவெக்ஸ் வசதியானது, ஒரு புறத்தில் CEPI, Gavi, UNICEF மற்றும் WHO என்பவற்றின் பங்காளித்துவத்துடனும், மறுபுறத்தில் பல்வேறு நன்கொடையாளர்களுடனும், பெருந்தொற்றிலிருந்து இலகுவில் பாதிக்கப்படக் கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசிகள் கிடைக்கக் கூடியதாக இருப்பதற்கு உதவுகின்றன.
சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு (NVDP) அமைய கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட இலகுவில் பாதிக்கப்படக் கூடிய வயதான மக்கள் தொகைக்காக, முதலாவது தொகுதியான 264,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ராஸெனக்கா 'கொவிஸீல்ட்' தடுப்பூசிகள் அண்மையில் இலங்கையை வந்தடைந்தன.
NVDP இற்கு அமைய நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2.65 மில்லியன் வயதான மக்கள் இருக்கின்றனர். இலங்கை உள்ளடங்கலாக உலகம் முழுவதிலும் கொவிட்-19 தடுப்பூசிகளின் சகலருக்குமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு இருதரப்பு மற்றும் பல்தரப்பு நிறுவனங்கள், பாரிய அறக்கட்டைகளும், பெருநிறுவனங்களும் உள்ளடங்கலாக பங்காளர் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கி வருகின்றன.
இலங்கை ஐ.நா அலுவலகம் தொடர்பில் கருத்துரைத்த வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி,
"முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய ஒருமைப்பாடு மிக முக்கியமானதாக இருக்கின்றது. இயலுமான வரையில், இலங்கை மற்றும் நாடு முழுவதிலும் அதிக ஆபத்துள்ள குழுக்களை தடுப்பூசிகள் சென்றடைவதற்கு நன்கொடையாளர்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றனர்.
எவரும் பின்தங்கிவிடாது இருப்பதனை உறுதி செய்வதற்கு பெருந்தொற்று மீட்பு காலத்தின் ஊடாக நாடுகளுக்கு உதவுவதற்கு கொவெக்ஸ் வசதியிற்கு உலகெங்கிலும் உள்ள அபிவிருத்திப் பங்காளர்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க நிதியுதவியை வழங்குகின்றனர்.
இந்த பங்காளித்துவத்திற்கு நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இலங்கையில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதன் மூலம் இந்த பெருந்தொற்றைத் தோற்கடித்து சமூக மற்றும் பொருளாதார மீட்சிக்கான ஒரு போக்கை நாம் ஒன்றாக இணைக்க முடியும்.
கொவிட்-19 பெருந்தொற்றானது யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதைக் காட்டுகிறது, எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை மற்றும் தடுப்பூசிக்கான நியாயமான மற்றும் சமமான அணுகலினால் மட்டுமே வைரஸை நாம் தோற்கடிக்க முடியும்" என்றார்.
சுகாதார அமைச்சுக்கும், கொவெக்ஸ் வசதிக்கும் இடையிலான உடன்படிக்கையின் ஒரு அங்கமாக, 4.4 மில்லியன் மக்களை உள்ளடக்கும் நாட்டின் 20 சதவீதமான மக்கள் தொகைக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலாவது தொகுதி 1.44 மில்லியன் தடுப்பூசிகள் பல கட்டங்களாக மே 2021 வரை வழங்கப்படவுள்ளது.
தயாரிப்பாளர்கள் மற்றும் WHOஇன் அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) என்பவற்றுக்கு அமைய, UNICEFஇனால் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)