கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தினை தொடர்ந்து ஆத்திரமடைந்த மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டதோடு அவர்களது ஊடகக் கருவிகளும் சேதப்படுத்தப்பட்டு ஊடகக் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது ஊடகப் பணியினை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் படகு விபத்து தொடர்பிலும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பிலும், ஆத்திரமுற்ற மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் தகவல்களை உலகறியச் செய்வதற்காக களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இத்தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் வண்மையாகக் கண்டிக்கின்ற அதே வேளை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றது.
சவால்களுக்கு முகம் கொடுத்தவாறு தன்னலம் கருதாது பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தங்கு தடையின்றி அவர்கள் தமது கடமையினை நிறைவேற்ற உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.
இதனை வெறுமனே ஒரு சம்பவமாக கருதி கடந்து செல்லக் கூடாது என்பதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.
மேலும், படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உறவுகளின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இழப்புக்களைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையினையும் பொறுமையினையும் வழங்குவானாக எனவும், காயமடைந்தோர் விரைவாக குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்.
காத்தான்குடி மீடியா போரம்
25.11.2021
Comments (0)
Facebook Comments (0)