இலங்கைக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும்: உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும்:  உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும் என இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் டன் யாங் தாய் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் மலேசிய உயர் ஸ்தானிகரிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த 11ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடல்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

தமது பொருளாதாரத்தில் பெருமளவிலான கட்டணச் சுமையை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸுக்கு மத்தியில் அனைத்து நாடுகளும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகக் கருத்துத் தெரிவித்த உயர் ஸ்தானிகர், வைரஸ் பரவுவதைச் சமாளிப்பதற்காக இலங்கை செயற்படுத்திய கொள்கைகளைப் பாராட்டினார்.

ஆசியான் மையம் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரங்கள் கொவிட்-19 க்கு பிந்தைய காலத்தில் தொற்றுநோயைக் கடந்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் என எதிர்பார்க்கும் வகையிலான சமீபத்தில் கைச்சாத்திட்ட பிராந்தியத்தின் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஆகியவற்றுக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

மலேசிய வெளிநாட்டு அமைச்சருக்கு தனது நேர்மையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை நடாத்துவதன் மூலம் இலங்கை மற்றும் மலேசியா ஆகியன அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பன்முகத் துறைகளில் தமது ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக எடுத்துரைத்தார்.

மலேசியாவுடன், குறிப்பாக விவசாய அடிப்படையிலான தொழில்களில், வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கைக்கு மகத்தான சாத்தியம் இருப்பதாக இரு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர்.

பாதுகாப்பு தொடர்பான துறைகளில் மலேசியா வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் குணவர்தன மேலும் பாராட்டியதுடன், அது தொடர்பான நெருக்கமான ஒத்துழைப்பை இருவரும் ஆதரித்தனர்.

மலேசியாவிலான எந்தவொரு பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் மலேசியா ஒருபோதும் மன்னிக்க மாட்டாது என்றும், அதைக் குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றும், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்றும் உயர் ஸ்தானிகர் டன் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் இலங்கைக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவுகளை நல்கும் என மலேசிய உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார். தனது ஆட்சிக் காலத்தில் ஆசியான் சமூகத்துடனான வலுவான பிணைப்பை உருவாக்க இலங்கை எதிர்பார்ப்பதாகவும், இலங்கை ஆசியானின் ஒரு துறை சார் உரையாடல் கூட்டாளராக மாற வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.

இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக மலேசியா உருவாகியதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்து வருகின்றது.

தற்போது, இலங்கையின் மொத்த இறக்குமதியில் 4.6% ஐ விநியோகிக்கும் மலேசியா, 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கான 4வது விநியோகஸ்த்தராக விளங்கியது. 2019ஆம் ஆண்டில் இலங்கையின் 39வது ஏற்றுமதித் தளமாக மலேசியா காணப்பட்டது. 2019ஆம் ஆண்டில் மலேசியா இலங்கையின் 6வது முதலீட்டுப் பங்காளியாகவும் இருந்தது.