55 இலட்சம் ரூபா ஹஜ் நிதியை வழங்கி ஆதரவாளர்களை திருப்திப்படுத்த முயலும் அமைச்சர் விதுர
றிப்தி அலி
புத்தசசான மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் நெருங்கிய ஆதரவாளர்கள் மூவரின் ஹஜ் பயணத்துக்காக சுமார் 55 இலட்சம் ரூபாவினை ஹஜ் நிதியத்திலிருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அறிவுறுத்தல் புத்தசசான மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமமொன்றினைச் சேர்ந்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் ஆதரவாளர்கள் மூவர் தற்போது புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற மக்கா சென்றுள்ளனர்.
இவர்களை அழைத்துச் சென்ற ஹஜ் முகவருக்கே குறித்த தொகைப் பணத்தினை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்துக்கான ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹீம் அன்சாரின் சிபாரிசின் மூலமே இந்த பாரிய தொகை பணத்தினை ஹஜ் நிதியத்திலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் சொத்தான ஹஜ் நிதியத்திலுள்ள பல கோடி ரூபா பணம், புத்தசசான மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே தனது ஆதரவாளர்களின் ஹஜ் பயணத்திற்காக குறித்த நிதியத்திலிருந்து நிதியினை வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)