இனவாதத்துக்கு துணைபோகும் தேரர்களை கைது செய்ய வேண்டும்: றிசாத் பதியுதீன்
நாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உட்பட இனவாதத்துக்குத் துணைபோகும் பெளத்த தேரர்களே முதலில் கைது செய்யப்பட வேண்டும்.அவ்வாறு கைது செய்யப்பட்டாலே நாட்டின் எதிர்காலம் சுபீட்சமாக அமையும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஆனந்த சாகர தேரர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை உடனடியாகக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே ரிசாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"ஆனந்த சாகர தேரர் என்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். பிணை பெற முடியாத விஷேட உயர் நீதிமன்றில் தினமும் தொடராக வாழ்க்கை விசாரித்து தண்டனை வழங்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு என்னைக் கைது செய்ய வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நான் சுதந்திரமாக வெளியில் இருந்தால் இனவாதம், மதவாதம் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
உண்மையில் ஆனந்த சாகர தேரர் சுதந்திரமாக வெளியில் இருந்தாலேயே இனவாதமும், மதவாதமும் உச்ச நிலைக்குச் செல்லும். எனவே அவரே முதலில் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவும், வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்பவர் களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டங்களைக்கொண்டு வரவேண்டும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)