கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவினை அமுல்படுத்துவாரா ஆளுநர்?
றிப்தி அலி
இலங்கையில் அதிக முஸ்லிம்கள் வாழும் மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இதனாலே கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படாது தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக செயற்பட்டு வருகின்றது.
அன்றிலிருந்து இந்த மாகாணத்தின் அனைத்து முக்கிய பதவிகளும் இன விகதிசார அடிப்படையில் பகிரப்பட்டு வருகின்றமை முக்கிய விடயமாகும். குறிப்பாக இந்த மாகாணத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளுக்கு இரண்டு முஸ்லிகளும், இரண்டு தமிழர்களும், ஒரு சிங்களவரும் நியமிக்கப்படுவது வழமையாகும்.
இதற்கு மேலதிகமாக ஆளுநரின் செயலாளராக சிங்கள சமூகத்தினைச் சேர்ந்த ஒருவரே செயற்படுவார். அத்துடன், கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர் பதவிகளும் இன விகிதாசார அடிப்படையில் நிரப்பப்படுவது வழமையாகும்.
இவ்வாறான நிலையில், கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்ட பின்னர் சிவில் சேவையினைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு முக்கிய எந்தப் பதவிகளும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக யூ.எல்.ஏ. அஸீஸ் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம். அன்சார் ஆகியோர் கடமையாற்றி ஓய்வுபெற்றனர்.
இவர்கள் இருவரினதும் ஓய்வினை அடுத்து அவர்களது இடத்திற்கு வேறு முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்.
ஆனால், கிழக்கு மாகாணத்தின் முதலாவது தமிழ் ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்ட போது கிழக்கு வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் பாரியளவில் அவரின் நியமனத்தினை வரவேற்றனர்.
எனினும், அவர் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றிய முஸ்லிம் சிவில் அதிகாரிகளுக்கு உரிய இடத்தை வழங்கியத் தவறியமை கவலைக்குரியதாகும்.
அது மாத்திரமல்லாமல், ஆளுநரினால் நியமிக்கப்படுகின்ற முக்கிய பதவிகள் எதிலும் முஸ்லிம்கள் உள்வாங்கப்படவில்லை. இதற்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தொடர்ச்சியாக இது விடயமாக கண்டனத்தை வெளியிட்டு வருகின்றார். பாராளுமன்றத்திலும் இது விடயமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடிதம் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இலங்கை சிவில் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.மன்சூர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரனுஸ் இஸ்மாயில், மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு, சுற்றுலா பணியகம், வீடமைப்பு அதிகார சபை, கூட்டுறவு ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அதிகார சபை என ஐந்து திணைக்களங்கள் காணப்படுகின்றன.
இதில் பெரும்பாலான நிறுவனங்களின் தலைவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வெளியிலிருந்தே நியமிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமல்லாமல், ஒரேயொரு நிறுவனத்தின் தலைவர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்திலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட மன்சூர், திடீரென குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டார்.
எனினும், இவருடன் கனிஷ்ட நிலையிலுள்ளவர்கள் மாகாண அமைச்சுக்களின் பதில் செயலாளர்களாகவும், சில நிறுவனங்களின் ஆணையாளர்களாகவும் செயற்படுகின்றனர்.
இதேவேளை, மேற்படி இருவருடைய தரத்தினைச் சேர்ந்த ஏ.எல்.எம். அஸ்மிக்கு எந்தவித உயர் பதவிகளும் வழங்கப்படாமல், கல்முனை மாநகர சiபிய்ன ஆணையாளர் பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் பதில் செயலாளராக செயற்படுவர்களை விட சிரேஷ்ட நிலையிலுள்ள எம்.எம். நசீர் மற்றும் றிபா அப்துல் ஜெலீல் ஆகியோருக்கு எந்தவித அதிகாரமுமற்ற பிரதிப் பிரதம செயலாளர் பதவிகளே ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எம்.எம். றபீக், பல்வேறு போராட்டங்களின் பின்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கிழக்கு ஆளுநரினால் தொடர்ச்சியாக முஸ்லிம் சிவில் அதிகாரிகள் புறக்கணிக்கப்படு வருகின்ற விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபிடம் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
கிழக்கு ஆளுநருடன் பாராளுமுன்ற உறுப்பினர் முஷாரப் மிகவும் நெருங்கிச் செயற்படுவதுடன், கடந்த மாதம் இவர்கள் இருவரும் இந்தியாவிற்கான பயணமொன்றினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கேள்விக்கு பதிலளித்த முஷாரப் எம்.பி, "கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அதிகாரிகளுக்கு போதிய மொழி அறிவில்லை. இதனாலேயே அவர்கள் மாகாண அமைச்சசுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அது மாத்திரமல்லாமல், சில முஸ்லிம் சிவில் அதிகாரிகளின் பெயர்களையும் இந்த ஊடக மாநாட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பாரியளவிலான விமர்சனங்கள் முஷாரப் எம்.பிக்கு எதிராக முன்வைக்கப்பட்டதுடன் நேரடி விவாத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், இந்த விமர்ச்சனத்திற்கோ, விவாத அழைப்பிற்கோ இதுவரை முஷாரப் எம்.பியிடமிருந்து எந்தவித பதிலும் வெளியாகவில்லை. இதேவேளை, "மிக விரைவில் முஸ்லிம் சிவில் அதிகாரிகள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள்" எனவும் குறித்த ஊடக மகாநாட்டில் முஷாரப் எம்.பி குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்த நியமனம் எப்போது இடம்பெறும் என அவர் கூறவில்லை.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுநர் செந்திலுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, அலி ஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எஸ்.எம்.எம். முஸாரப் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
"சுமார் 44 சதவீத முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு மாகாண அமைச்சின் செயலாளர் பதவிக்கும் முஸ்லிம் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்படாத விடயம்" இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து இரண்டு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் சிவில் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு ஆளுநருக்கு அறிவுறுத்தினார்.
இதற்கமைய, சிரேஷ்ட தரத்திலுள்ள மூன்று முஸ்லிம் சிவில் அதிகாரிகளின் பெயர்கள் கிழக்கு ஆளுநரிடம் முஸ்;லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக, குறித்த சந்திப்பு இடம்பெற்று ஒரு வாராங்கள் கழிந்துள்ள நிலையிலும், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இதுவரை எந்தவொரு முஸ்லிம்களும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக செயற்படுகின்ற ஐ.கே.ஜீ. முத்து பண்டார கடந்த வாரம் ஓய்வுபெற வேண்டியிருந்தது.
எனினும், அவரது சேவை காலம் மேலும் மூன்று மாத காலங்களிற்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தினை நிறுத்துவதற்கான கோரிக்கைக்கு எந்தவிதமான சாதக தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு அமைச்சிற்கு முஸ்லிம் சிவில் அதிகாரியை நியமிக்க முடியாதா இந்த முஸ்லிம் எம்.பிக்கள், எப்படி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவார்கள் என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
அரசாங்கத்திற்கு இரகசியமாக ஆதரவளிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முஸ்லிம் சிவில் அதிகாரிகளை நியமிக்க கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் தலையாக கடமையாகும்.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோரும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை உணர்ந்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க முஸ்லிம் சிவில் அதிகாரிகளை உடனடியாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலமே கிழக்கில் வாழும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்வதற்கும் மாகாணத்தில் இன சௌஜன்யத்தை பேணுவதற்கும் முடியுமாகவிருக்கும்.
Comments (0)
Facebook Comments (0)