இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை வலுப்படுத்தும் உறுதிப்பாட்டினை புதுப்பிக்க நடவடிக்கை
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது (FAO), பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் உலக உணவு தினத்தை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த நிகழ்வின் தொனிப்பொருளானது 'சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கை' நோக்கிய ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிகழ்வில் பகிரப்பட்ட காணொளி செய்தியின் ஊடாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக உணவு தினத்தை அனுஷடிக்கின்றமை தொடர்பில் FAO, IFAD மற்றும் WFPஆகியவற்றிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டினை மீள்வலியுறுத்தினார்.
"அதிகரித்த உணவுப் பாதுகாப்பின்மையுடன் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான நிலையில் இலங்கை இருக்கின்றது. தற்போதைய நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்கு கைகள் கோர்த்து, இந்த பலம்மிக்க பங்காளித்துவத்தை கட்டியெழுப்பியமைக்காக ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு, பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளர்கள் மற்றும் நன்கொடையாளர் சமூகத்திற்கு நாம் நன்றியுடையவர்களாவோம்" என அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதான உரையாற்றிய, பிரதமர் தினேஷ் குணவர்தன,
"சுமார் 30 தொடக்கம் 35 சதவீதமான மக்கள் தொகையானது நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது வாழ்வாதாரமாக விவசாயத்தில் தங்கியிருப்பதாகவும், விவசாயத் துறையை நவீனமயப்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் இலங்கை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.
"இந்த மாபெரும் செயற்பாட்டினை எட்டுவதற்கு அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தேசிய முன்னுரிமையாக இருக்கின்றது" என அவர் மேலும் தெரிவித்தர்.
எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குரிய நெகிழ்வுத் தன்மையை கட்டியெழுப்பல் மற்றும் நவீனமயப்படுத்தல் தொடர்பில் இலக்கு வைத்த புதிய விவசாய கொள்கையை பாராளுமன்றில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்தார்.
இலங்கையில் நவீன, நெகிழ்வான விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான தொழிநுட்ப உதவியை வழங்கியமைக்காக FAOஇற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்" என அவர் குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான தமது நிறுவனத்தின் உறுதிப்பாட்டினை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர ஷரண் வலியுறுத்தினார்.
"உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு மற்றும் உணவுப் பாதுகாப்பான தேசமாக மாறுவதனை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கும் எமது பங்காளர்களுக்கு உதவுவதன் மூலம் விதைகள், பசளைகள் போன்ற அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளை வழங்கும் அதேவேளையில், இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு முக்கியமான, இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மீனவர்கள் மற்றும் விவசாயிகளை நெருக்கடியின் மிக மோசமான தாக்கங்களில் இருந்து பாதுகாக்கப்படுவதனை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு குயுழு அர்ப்பணிப்புடன் உள்ளது" என அவர் கூறினார்.
சமுதாயம் ஒன்றிற்கும், நாடொன்றிற்கும் உணவுப் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதில் சிறு விவசாயிகளின் அத்தியாவசிய வகிபாகத்தினை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான IFADஇன் வதிவிடப் பணிப்பாளர் ஷெரினா தபாஸ்ஸம் சுட்டிக்காட்டினார்.
"எமது உணவு கட்டமைப்பின் முதுகெலும்பான சிறு விவசாயிகள் பெருந்தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய புறத்தாக்கங்களின் அழிவுகரமான விளைவுகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும், அதற்குத் தயாராகவும் இருப்பதனை உறுதி செய்வது எமது இலக்காகும். அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் இலங்கையின் உணவு கட்டமைப்புக்களை நிலைபேறானதாக நிலைமாற்றுவதற்கு அரசாங்கத்துடன் எமது பணியைத் தொடர்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என அவர் கூறினார்.
நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மற்றும் நலிந்த சமுதாயங்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என WFPஇன் இலங்கை பொறுப்பதிகாரியான ஜெர்ராட் ரெபெல்லோ சுட்டிக்காட்டினார்.
"3.4 மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கான தமது அவசர காலச் செயற்பாடுகளை WFP ஆரம்பித்துள்ளது. உணவு முறைகளை மிகவும் பலமிக்கதாகவும், காலநிலையால் ஏற்படும் அதிர்ச்சிகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் மாற்றுவதற்கு சிறு விவசாயிகளுடன் நாம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் கட்டமைப்புடன் இணைந்து FAO, IFAD மற்றும் WFPஆகியன பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சமுதாயங்களுக்கு அத்தியாவசிய பண உதவி, அத்தியாவசிய பசளைகள் மற்றும் வாழ்வாதார உதவியை களத்தில் இருந்து வழங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு பசியைத் தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்துகிறது.
இது நாடுகளுக்கு விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி நடைமுறைகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் அவற்றை மிகவும் நிலையானதாக மாற்றுகின்றது என்பதுடன் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது.
FAO உலகின் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் பசியுள்ள மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களை வளர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாகும், இது அவசர காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுகிறது மற்றும் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான பாதையை உருவாக்க உணவு உதவியைப் பயன்படுத்துகிறது.
IFAD என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமாகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய மையமான உரோம் நகரை தளமாகக் கொண்ட IFAD கிராமப்புற மக்களில் முதலீடு செய்து, வறுமையைக் குறைக்கவும், உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பின்னடைவை வலுப்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
1978 முதல், வளரும் நாடுகளில் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 23.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்கள் மற்றும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு, IFAD-ஆதரவு திட்டங்கள் 130 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளன.
Comments (0)
Facebook Comments (0)