புத்தளத்தில் வாழ்ந்துகொண்டு மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு
அஷ்ரப் ஏ சமத்
புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டு வாக்களிப்பதற்காக மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பில் பதிய முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிகேவா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"புத்தளத்தில் வாழ்ந்தால் அந்த மாவட்டத்திலேயே அவர்கள் தமது வாக்குகளை பதிய வேண்டும். அவ்வாறில்லாமல் புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்கு பதிய முடியாது.
அவர்களது இருப்பிடம், வதிவிடம் மன்னாரில் இருப்பின் அங்கே போய் வாழ வேண்டும். புத்தளத்தில் வீடு, பாடசாலை, தண்ணீர், மின்;சாரம், வீட்டு வரி ஆகியவற்றை பாவிப்பார்களேயானால் அந்த பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி, மாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்கள் வாக்களிக்க வேண்டும்.
புத்தளத்தில் வதிவிடம், மன்னாரில் வாக்களிப்பு என்பது இனி சாத்தியப்படாத காரியம். அவ்வாறில்லாவிடின் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அங்கு அவர்களுடைய வீடு, காணிகள் சொத்துக்கள் இருப்பின் அங்கு போகி வாழ வேண்டும்.
அங்கு உள்ள கிராம சேவகரிடம் பதிய வேண்டும். ஆகவே இம்முறையில் இருந்து புத்தளத்தில் வாழ்ந்து கொண்டும் இப்பிரதேசத்தில் சகல அரச அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டு மன்னாரில் வாக்குரிமை வழங்க முடியாது. அத்துடன் வாக்களிப்பதற்கும் நாங்கள் பிரயாணம் ஒழுங்குகள் செய்து கொடுக்கவும் முடியாது" என்றார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 7,727 பேர் மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பிலிருந்து இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)