வில்பத்து தேசிய பூங்காவின் கடல்சார் வலயத்தினை பாதுகாப்போம்!

வில்பத்து தேசிய பூங்காவின் கடல்சார் வலயத்தினை பாதுகாப்போம்!

றிப்தி அலி

எமது நாட்டின் சுற்றுல்லா தளங்களில் பிரதான இடங்களில் ஒன்றாக  வில்பத்து தேசிய பூங்காவும் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொண்ட இந்த பூங்காவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுல்லாப் பயணிகள் தினந்தோறும் விஜயம் செய்கின்றனர்.

இதனால் எமது நாட்டுக்கு பாரிய அந்நியச் செலாவணியினை ஈட்டக்கூடியதாகவுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பூங்கா  நில மற்றும் கடல் வளங்களைக் கொண்டுள்ளன. எனினும் நில வலயம் மாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றன. எனினும், பேசப்படாத கடல் வலயம் மற்றும் சதுப்பு நிலத் தொகுதியும் இந்தப் பூங்காவினுள் காணப்படுகின்றது.  

இலங்கைத் தீவின் அதிக வளம் கொண்ட மற்றும் ஆற்றல்மிக்க கடற்கரையோரங்களில் ஒன்றாகவே இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது. எமது நாட்டின் வட மேற்குப் பகுதியிலேயே இக்கடற்கரையோரம் காணப்படுகின்றது. இந்த தனித்துவமான பகுதியில் பல் வகையான கடற் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் ஒன்றிணைவது இந்த தேசிய பூங்காவின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும்.

உலகப் புகழ்பெற்ற இந்த பூங்காவினுள் தீவுகள், கடற் புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், நதிக்கரைகள், பவளப் பாறைகள், மணற்கல் பாறைகள், ஆழ் கடல் போன்றன காணப்படுகின்றன.

இவ்வாறான புவியியல் இருப்பிடத்தின் காரணமாக அதிகளவிலான உயிர்ப்பல்வகைமையினை இந்தப் பூங்கா கொண்டுள்ளது. இந்தப் பூங்காவின் கடற்கரையானது மேற்கில் பல சங்கிலி கூட்டத் தீவுகளுடனும் வடக்கு மற்றும் தெற்கே பாதுகாக்கப்பட்ட வன சரணாலயங்களுடனும்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கிலிக் கூட்டத் தொடராக 14 தீவுகள் இங்கு காணப்படுகின்றன. அவற்றில் 450 ஹெக்டேயரைக் கொண்ட உச்சிமுனைத் தீவும், 145 ஹெக்டேயரைக் கொண்ட பட்டலங்குண்டுவ தீவும் மிகப் பெரியதாக காணப்படுகின்றன.

இவற்றில் வெள்ளைத்தீவு மாத்திரம் 1.5 ஹெட்டேயர் அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. இந்த தீவுகள் புலம்பெயர் மற்றும் பூர்வீக பறவைகள் கூட்டங்களிற்கு அவற்றின் கூடுகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை வழங்கி வருகின்றன.

இந்த தீவுகளில் பெரும்பாலானவை மீன்பிடி சமூகங்களினால் பருவ காலங்களின் போது குடிபெயரப்படுகின்றது. அதே போன்று சில தீவுகளில் தொடர்ந்தும் பல வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள அழிகிய உச்சிமுனை ரோமன் கத்தோலிக்க தேவாலயமானது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், தேவாலயத்தின் திருவிழா வருடாந்தம் இடம்பெற்று வருகின்றமை முக்கிய விடயமாகும்.

இதேவேளை, ஒரு திருகு வெட்டுப் புதிர் ஒன்று சேர்ந்து ஒரு முழுமையான படத்தை உருவாக்குவது போல வில்பத்து தேசிய பூங்காவின் கடல் செல்வாக்கு மண்டலம் பல செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆற்றரங்கரைக் காடுகள், சதுப்பு நிலங்கள், கடற்பாசி, புல்வெளிகள், மாறுபட்ட பரப்பளவிலான தீவுகள், ஆழமற்ற நீர்ப்பவளப் பாறைகள், ஆழமான நீர் மணற்கல் வாழ்விடங்கள் மற்றும் கடல்சார் மண்டலம் ஆகியன இந்த கடல் மண்டலத்தை உருவாக்க அருகருகே அமைந்துள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டில் அழிந்து வருகின்ற கடற்பசு இனத்தொகு கற்பிட்டி தீவகற்பத்தின் வடக்கே பரந்து விரிந்த கடல் புல்வெளிக்குள் கடந்த காலங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோ – பசுபிக் கூனல் ஓங்கில்கள் சிறியளவில் தீவு முழுவதும் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட பரம்பலைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் மக்கள் தொகை அழுத்தங்கள் அதிகரித்து வருவதனால் இந்த இரண்டு கடற் பாலூட்டிகளையும் காணக் கிடைப்பது அருகி வருகின்றது.

இந்த போசனை நிறைந்த நிலப் பரப்பில் புலம்பெயர்ந்த பறவைகள் தவிர ஏராளமான நீர்வாழ் பறவைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. தெற்கு முனையிலுள்ள நிலப் பரப்பானது மத்திய ஆசியாவின் ஆகாய மார்க்கம் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு இந்தியா ஆகாய மார்க்கத்திலிருந்தும் வெளியேறும் பல புலம்பெயர்ந்த உயிரினங்கள் இறுதியாக சேரும் இடமாக இருப்பதனால் இந்தப் பகுதியில் பறவைகளை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.

பார் பவளப்பாறை கடல் சரணாலயம் ஆனது இலங்கையின் மிக விரிவான பவளப் பாறை அமைப்புக்களில் ஒன்றாகும். இந்த பகுதியிலுள்ள பவளப் பாறைகள் கரையோரத்திலிருந்து சிறுதி தொலைவில் கடினமான அடி மூலக்கூறுகளின் உயரமான கூம்புகளில் வளரும் பவளப் பாறைகளைக் கொண்ட இணைப்பு பாறைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

பார் பவளப்பாறை கடல் சரணாலயத்திற்குள் சுமார் ஒரு மீற்றர் முதல் 10 மீற்றர் வரை ஆழமற்ற பகுதியில் காணப்படுகின்றன. பார் பவளப்பாறை கடல் சரணாலயத்திலுள்ள தனிப்பட்ட பவளத் திட்டுகள் இலங்கையில் உள்ளமற்ற கடல் நீரடிப் பாறைகளுடன் ஒப்பிடுகையில் ஓப்பீட்டளவில் பெரியவையாகும். சில பவளப் பாறைகள் பல ஏக்கர் அளவைக் கொண்டு விளங்குகின்றன.

துரதிஷ்டவசமாக பெருங் கடல்களில் வெப்பமாயமாதலால் ஏற்படும் பவளப்பாறை வெலுப்பால் அப்பகுதியில் உள்ள பவளப் பாறைகள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகின்றன. மேலும் அவை தற்போது சீரழிந்த நிலையில் உள்ளன.

\இருப்பினும், பார் பவளப் பாறை கடல் சரணாலயத்திலுள்ள பவளப் பாறைகள் கடந்த காலங்களில் இதே போன்ற நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவதற்கான ஆற்றல்களைக் கொண்டிருந்தன. இது எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகின்றது.

இவ்வாறான அம்சங்கள் மூலமும் பல்வேறு விலங்கினங்களை தன்னகத்தே கொள்வதன் மூலமும் மனதை மயக்கும் ஒரு செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றது வில்பத்து தேசிய பூங்கா.

எனினும் மக்கள் தொகை அழுத்தம் அதிகரித்து வருவதால், ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் ஏராளமாக இருந்த விலங்குகளின் செழிப்பு மெதுவாக மறைந்து வருகின்றது. துரதிஷ்டவசமாக அண்மைய ஆண்டுகளில், இந்த மென்மையான கடற்பசுக்கள் இருந்தமைக்கான ஒரே ஒரு அறிகுறியாக இதன் இறந்த உடல்கள் சிக்குவதன் மூலம் மட்டுமே அறிய முடிகின்றது.

வெடிமருந்துப் பொருட்கள் மூலம் மீன்பிடித்தல் மற்றும் வலைகளில் சிக்குவதன் விளைவாக இவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதேவேiளை அழிவுகரமான மீன்பிடி முறைகளினால் போசனை நிறைந்த இந்த நீர்நிலைகள் வெகுவாக அழிந்துவிடுகின்றன.

லைலா வலை மற்றும் இழுவை வலை மூலமான மீன்பிடி நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள குறைபாடுகள் காரணமாக இந்த சட்டவிரோத நடைமுறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

உள்நாட்டு நீர் மாசுபாடு மற்றும் கடல் குப்பைகள் காரணமாகவும் இந்த நீர்வாழ் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், இலங்கைத் தீவின் அதிக வளம் கொண்ட வில்பத்து தேசிய பூங்காவினை பாதுகாப்பு அனைவரதும் பாரிய பொறுப்பாக மாறியுள்ளது.

வில்பத்து தேசிய பூங்காவாவினை தற்போது கடல்சார் வனவிலங்கு சரணாலயமாகவும் பிரகடணப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இதனை கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலம் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதிக்கு மேலும் பாதுகாப்பை வழங்க முடியும்.

எனினும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இந்தப் பிரகடணம் அமைய வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்தப் பூங்காவினை ஊடறுத்துச் செல்லுகின்ற மன்னார் - புத்தளம் வீதி தற்போது மூடப்பட்டுள்ளது.

இதனால், 75 கிலோ மீற்றர் தூரத்தினை சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்து கடக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வனஜீவராசிகள் நன்மை கருதி இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், மாற்று வீதியினைப் பயன்படுத்தப்படும் போது ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் மற்றும் வீரயங்களை கவனிக்க நாம் மறந்துவிட்டோம்.

அது போன்றே எதிர்காலத்தில் வில்பத்து தேசிய பூங்காவாவினை கடல்சார் வனவிலங்கு சரணாலயமாகவும் பிரகடணப்படுத்தும் போதும் இவ்வாறான பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்நோக்க நேரிடும். அவ்வாறில்லாத வகையில் இந்த கடல்சார் வனவிலங்கு சரணாலய பிரகடணம் அமைய வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாகும்.