மத்திய வங்கிக்கு இரு பிரதி ஆளுநர்கள் நியமனம்
இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான திருமதி ரி.எம்.ஜே.வை.பி. பர்னாந்து மற்றும் என்.டபிள்யு.ஜி.ஆர்.டி.நாணயக்கார ஆகியோர் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக பதவியுர்த்தப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 14ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வரையிலான இந்த பதவியுயர்வு நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து
திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து, வங்கிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம் மற்றும் நாணய முகாமைத்துவம் ஆகிய விடயப் பரப்புக்களில் மத்திய வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பணிக் காலத்தினைக் கொண்டவராவார்.
இக்காலப்பகுதியில் திருமதி பர்னாந்து வங்கி மேற்பார்வைப் பணிப்பாளராகவும் செலாவணிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் சர்வதேச நியமங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் உறுதியான ஒழுங்குமுறைப்படுத்தல்
கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தனது தலைமைத்துவத்தை வழங்கியதன் மூலம் நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு மிக முக்கியமான பங்கினை வழங்கியுள்ளார்.
பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் திருமதி பர்னாந்து உதவி ஆளுநர் பதவி வகித்ததுடன் வங்கி மேற்பார்வை, நாணய, வெளிநாட்டுச் செலாவணி மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகிய திணைக்களங்களுக்குப் பொறுப்பாகவிருந்தார்.
திருமதி பர்னாந்து, இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களுக்கிடையிலான சபை மற்றும் தேசிய கொடுப்பனவுச் சபை என்பவற்றின் பதவிவழி உறுப்பினராக அத்தகைய குழுக்களின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை அடைவதில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்.
திருமதி பர்னாந்து, கொடுகடன் தகவல் பணியகம், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, கோல்டன் கீ கிறடெடிற் கார்ட் கம்பனி லிமிடெட், ஜிகே கொஸ்பிட்டல்ஸ் லிமிடெட், ஜெற்விங் சிம்பொனி லிமிடெட் போன்றவற்றில் பணிப்பாளர் ஒருவராகவும் மற்றும் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கூட்டாண்மை ஆளுகை நியமங்களை மதிப்பாய்வு செய்யும் குழு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பேச்சுவார்த்தை தொடர்பான முதலீட்டு துணைக்குழு, தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் பயிற்சி தொடர்பான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் அங்கத்தவர் ஒருவராகவும் இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தில் துணை தலைவராக செயற்படுகின்றார். இவர் நிதியியல் பொருளியலில் முதுமானிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் வர்த்தக இளமானிப் பட்டப்படிப்பை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பெற்றவராவார்.
என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார
திரு. நாணயக்கார, மத்திய வங்கியில் விசேடமாக வங்கிகள் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், வெளிநாட்டு ஒதுக்குகள் முகாமைத்துவம் மற்றும் பன்னாட்டுத் தொழிற்பாடுகள், உள்நாட்டுத் தொழிற்பாடுகள், பேரண்ட முன்மதியுடைய மேற்பார்வை மற்றும் பொதுப்படுகடன் முகாமைத்துவம் ஆகிய விடயப்பரப்புக்களில் 27 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டவராவார்.
பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் நாணயக்கார, மத்திய வங்கியின்
பொதுப் படுகடன், பிரதேச அபிவிருத்தி, நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் மற்றும் அலுவலர் பணிகள் முகாமைத்துவ திணைக்களங்களுக்கு பொறுப்பான உதவி ஆளுநர் பதவியினை வகித்தார்.
நாணயக்கார, வாசிங்டன் டிசீ, அமெரிக்கன் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியலில்
விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார நிர்வாக இளமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் ஐக்கிய அமெரிக்காவின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட நிதியியல் பணிகள் கணக்காய்வாளராகவும் உள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)