மனித – யானை மோதலை குறைக்க Spa Ceylon & WNPS இணைந்து செயற்திட்டம்

மனித – யானை மோதலை குறைக்க Spa Ceylon  & WNPS இணைந்து செயற்திட்டம்

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து மீளுந்திறனை மேம்படுத்துவதற்காக தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து மீள்வதை மேம்படுத்தும் முகமாக தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக Wildlife & Nature Protection Society (WNPS) உடன் இலங்கையின் முன்னணி ஆடம்பர ஆயுள்வேத சுகவாழ்வு வர்த்தகநாமமான Spa Ceylon கைகோர்த்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற உலக யானைகள் தினம் 2024 ஐக் கொண்டாடும் வகையிலேயே குறித்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன.

இதற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Help Save the Majestic Ceylon Elephant Wellness Run’ நிகழ்வானது, எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகி, நிகழ்வுகள் தொடராக இடம்பெறவுள்ளன.

WNPS இன் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கான ஒரு ‘City Run’ நிகழ்வாக அமையும். Spa Ceylon இன் அனுசரணையில் 5 கிலோ மீற்றர் மற்றும் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஓட்ட நிகழ்வுகளாக இது அமையவுள்ளது.

இரு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்ற வெற்றியாளர்கள் Spa Ceylon மற்றும் WNPSஇடமிருந்து வியப்பூட்டும் பரிசுகளைப் பெற்றுக்கொள்வர். இதில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள், நிகழ்வு நடைபெறும் இடத்திலோ அல்லது முற்கூட்டியே https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfem7ZO2e9o9TiH_yY62VRuSRx4NVcOEwiIzf_Oef2alxccZQ/viewform ஊடாகவோ பதிவுகளை மேற்கொள்ள முடியும்.  

அதே தினத்தில், ‘Gaja Nana Sahana’ என்ற தலைப்பில் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு காரணமாக பெற்றோரை பறிகொடுத்த சிறுவர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படவுள்ளது.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 689 பேர் மரணித்துள்ளதுடன், 2023ஆம் ஆண்டில் மாத்திரம் 169 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை இந்த புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு காரணமாக மரணித்தவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தின் பிரதான உழைப்பாளர்களாக காணப்படுகின்ற நிலையில், அவர்களது அகால மரணம் குடும்பத்தின் சமூக பொருளாதார நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது.

ஆகவே அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அதிலிருந்து மீண்டு வருவதை மேம்படுத்துவதே இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முதற் கட்டத்தில், 2023ஆம் ஆண்டில் தமது தந்தையையோ அல்லது தாயையோ பறிகொடுத்த பாடசாலை மாணவர்கள் பயனாளிகளாக கருதப்படுவர். அவர்கள் தமது முறையான பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதாந்தம் புலமைப்பரிசில் தொகையொன்று அவர்களுக்கு வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப நடைமுறை குறித்து இந்நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளதுடன், முதற் தொகுதி மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் ஒரு மாதத்தினுள் வழங்கப்படும். மேலும், யானைகளின் பாதுகாப்பு குறித்து அவை முகங்கொடுக்கின்ற வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் WNPS எவ்வாறு அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது என்பதைக் காண்பிக்கும் சுவரொட்டி கண்காட்சி நிகழ்வொன்றும் இந்நிகழ்வுக்கு சமாந்தரமாக இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பினை மேற்கொள்ளும் ஊடகவியலாளர் மாநாடொன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த செயற்திட்டம் குறித்து Spa Ceylon நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், குழும பணிப்பாளருமான ஷலீன் பாலசூரிய கருத்து வெளியிடுகையில்,

"எமது நாடு ஆசியாவிலேயே யானைகளின் எண்ணிக்கையில் அதிக அடர்த்தி கொண்ட நாடாக காணப்படுவதுடன், அவை எமது பாரம்பரியத்தில் முக்கிய அங்கமாகும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாகும். வனசீவராசிகளைப் பாதுகாக்கும் ஆர்வலர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இதற்காக உழைக்க வேண்டும்.  

இலங்கையில் யானைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் மற்றும் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு குறித்த விழிப்புணர்வு ஆகிய இரு முனைகளிலும் முன்னோக்கிச் செல்வதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளுடன் அதற்காக உழைப்பதில் Spa Ceylon தொடர்ந்தும் ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.

Spa Ceylon தனது இலங்கை யானைகள் தயாரிப்பு (Ceylon Elephant) வரிசையை இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளதுடன், இத்தயாரிப்பு வரிசையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு கொள்வனவின் போதும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன் பூமி, மக்கள் மற்றும் சூழல் ஆகியவற்றின் நலன் மீது இந்த வர்த்தகநாமம் கொண்டுள்ள முழுமையான அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.    

WNPSஇன் மனித - யானை சகவாழ்வு உப குழுவின் தலைவர் சுபுன் லாஹிரு பிரகாஷ் இந்தநிகழ்வில் கருத்து வெளியிடுகையில்,

"1874ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு, ஒரு மையமான இனமாக காட்டு யானைகளின் முக்கியத்துவத்தை Wildlife and Nature Protection Society இனங்கண்டுள்ளதுடன், வனாந்தரத்தின் நலன் மற்றும் ஏனைய உயிரினங்கள் அதனைச் சார்ந்துள்ளன.

யானைகளின் இயற்கை குணம் அற்றுப் போனால், மற்றைய உயிரினங்களும் இதைப் பின்பற்றுவதுடன், இந்த தீவின் வளமான பல்லுயிரினங்கள் விரைவில் அழிவடைந்து போகும் மனித - யானை சகவாழ்வு உப குழுவானது பின்வரும் மூலோபாயங்களுடன், தணிவிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கவனம் செலுத்தியுள்ளது:

1. யானைகளைப் பாதுகாத்தல், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கினைத் தணிவித்தல் குறித்த சட்டமன்ற கட்டமைப்பினை வலுப்படுத்தல்

2.    மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கினைத் தணிவிப்பதில் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல்

3.    யானைகளைப் பாதுகாத்தல், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கினைத் தணிவித்தல் குறித்து தொடர்புபட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஈடுபாட்டை தூண்டுதல்

4.    மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கினை தணிவிக்கும் முயற்சிகளில் செலவு குறைந்தவை என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டவற்றை ஊக்குவித்தல்

5.    யானைகளைப் பாதுகாக்கும் விவகாரங்கள் தொடர்புபட்ட விஞ்ஞான ரீதியான புரிதல்களை மேம்படுத்தல்

இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, சிறுவர்கள் ஏழ்மையில் வளர்வதுடன், அவர்கள் உயிர் வாழ்வதற்கும், செழித்து வளர்வதற்கும் தேவையான உணவு, சுகாதாரம், உறைவிடம், மருத்துவப் பராமரிப்பு மற்றும் கல்வி இல்லாதவர்களாகவே வளர்கின்றனர்.

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான பிணக்கினால் மரணித்தவர்களின் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமாகக் காணப்படுவதுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள், பொருளாதார கஷ்ட நிலைமைகள் காரணமாக. பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடுவதற்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகவே, அத்தகைய குடும்பங்கள் அந்த நிலைமையிலிருந்து மீண்டு வருவதை மேம்படுத்துவதற்காக அவசர உதவி தேவைப்படுவதை இனங்கண்டுள்ள நாம், ஏனைய அனுட்டிப்பு செயல்பாடுகளுக்குப் புறம்பாக, ‘Gaja Nana Sahana’ என்ற நாடளாவிய புலமைப்பரிசில் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.

‘Help Save The Majestic Ceylon Elephant’ முயற்சியின் நிகழ்வுகளில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரூந்து சவாரி மற்றும் முன்னணி சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் செயல்விளக்க படைப்பாக்க நிகழ்வுகளும் அடங்கியுள்ளன.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு எந்த அளவுக்கு பாரதூரமானது மற்றும் இலங்கையில் யானைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் எவ்வாறு WNPSஉடன் கைகோர்க்க முடியும் ஆகியன குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12ஆம் திகதி அன்று, இது தொடர்பான ஊக்குவிப்பு பிரச்சாரப் பொருட்களுடன் அலங்கரிக்கப்பட்ட இரட்டைத் தட்டு பேருந்து ஒன்று கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வலம் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொடர் நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக ஆகஸ்ட் 15ஆம் திகதி  அன்று BMICHஇல் நேஷன்ஸ் டிரஸ்ட் WNPS மாதாந்த விரிவுரை இடம்பெறவுள்ளது. 'காட்டு யானைகளுடன் இணக்கமாக வாழுதல் - பொட்ஸ்வானா மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பீடு' என்ற தலைப்பில் புகழ்பெற்ற சூழல் ஆர்வலர்களும், யானைகள் சம்பந்தமான ஆராய்ச்சியாளர்களுமான கலாநிதி டெம்பே அடம்ஸ் மற்றும் கலாநிதி சுமித் பிலப்பிடிய ஆகியோரின் விளக்கக்காட்சி நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு  காரணமாக இலங்கை முகங்கொடுக்கின்ற சமூக பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்கள் குறித்து அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளனர்.

2.7 மில்லியன் மக்கள் தொகையையும், 130,000 யானைகளையும் பொட்ஸ்வானா கொண்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் சுமார் 350 - 400 யானைகள் கொல்லப்படுவதுடன், மனிதர்களின் உயிரிழப்பு வழக்கமாக ஒற்றை இலக்கத்திலேயே காணப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம், 5,879 யானைகளையும் தற்சமயம், சுமார் 22 மில்லியன் மக்களும் உள்ளனர். 2023ஆம் ஆண்டில் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான பிணக்கு காரணமாக 476 யானைகளும், 169 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர்.

முற்றிலும் வேறுபட்ட அளவிலான சனத்தொகையைக் கொண்டுள்ள இந்த இரு நாடுகளிலும், பெறுமதிமிக்க பொருளாதார, கலாச்சார மற்றும் சூழலியல் சொத்தாக யானைகள் காணப்படுகின்றன. அவை தொடர்ந்தும் நிலைபெறுவதற்கும், அவற்றின் பயனைப் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் அவற்றுடன் இணக்கமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டியுள்ளது.

WNPS மாதாந்த விரிவுரைக்கு நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி ஆதரவளித்து வருகின்றது. கலாநிதி அடம்ஸ் அவர்கள் இங்கு வருகை தருவதற்கான அனுசரணையை Spa Ceylon வழங்கியுள்ளது. இவ்விரிவுரையில் அங்கத்தவர்களும், அங்கத்தவர்கள் அல்லாதோரும் கலந்துகொள்ள முடிவதுடன், இதற்கான அனுமதி முற்றிலும் இலவசமாகும்.