கொவிட்-19 அச்சுறுத்தலும், தொற்றா நோய்களின் அதிகரிப்பும்
தொற்றா நோய்கள் என்பது, ஒரு நோயாளியிலிருந்து இன்னுமொரு நோயாளிக்கோ சுகதேகிக்கோ தொற்ற முடியாத நோய்களாகும். அதாவது ஒருவரிடம் உள்ள நோயானது, அவருடன் நெருங்கிப் பழகுதல், அவருடைய பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாகவோ அல்லது அவரின் உடல் நீர்மங்கள் மூலமாகவோ ஏனையவர்களுக்கும் அதே நோய் நிலைமை ஏற்படாது இருக்குமானால் அது தொற்றா நோயாகும்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸினால் ஏற’பட்ட அச்சுறுத்தலில் இருந்து உலக நாடுகள் மீளாத நிலையில், அதன் அடுத்த கட்டத் தாக்கமாக தொற்றா நோய் நிலைமைகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதாரத் தாபனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுமார் 70%மான இறப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொற்றா நோய்களாக, இதய நோய்கள், புற்று நோய்கள், தீவிர சுவாச நோய்கள், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை றுர்ழு அடையாளப்படுத்தியுள்ளது.
இவை தவிர, சிறுநீரக நோய்கள், உளப்பாதிப்பு நோய்கள், ஆஸ்துமா, உயர் குருதியழுத்தம், கொலஸ்ட்ரோல் (Cholesterol), விபத்துக்களால் ஏற்படக்கூடிய காயங்கள் போன்ற அனைத்தும் தொற்றா நோய்களாகும்.
மேலும் வருடாந்தம் 41 மில்லியன் மக்கள் இத்தொற்றா நோய்களினால் இறப்பதாகவும் அவற்றில் நான்கில் மூன்று பகுதியினர் குறைந்த மற்றும் மத்திய வருமானமுடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதாரத் தாபனம் குறிப்பிடுகின்றது.
கொவிட்-19 தொற்றானது, அது ஒரு தொற்று நோய் என்ற அடிப்படையில் நேரடியான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன், தொற்றா நோய்களை உடையவர்களுக்கு மறைமுகமாக அந்நோய்களின் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் ஒன்றாக விளங்குகின்றது.
இவ்வாறாக கொவிட்-19, தொற்றா நோய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஜி. அகர்வால் மற்றும் பலரினால் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் அதனுடன் தொடர்பான பெருமூளைக் கோளாறு போன்ற நோய்களுடன் இருப்பவர்களின் நோய்த் தீவிரத்துடன் கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்புடையது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எச்.எஸ்.மார்க்கஸ் மற்றும் எம்.பிரய்னின் என்பவர்களின், "கொவிட்-19 மற்றும் பக்கவாதம் - உலக பக்கவாத அமைப்பின் ஒரு உலகளாவிய நோக்கு" என்ற ஆய்விலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓ.டயர் என்பவர் "கொவிட்-19 தொற்றானது, தொற்றா நோய்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று றுர்ழு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது" என்ற தனது ஆய்வில், பலவீனமானவர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் ஒரே நேரத்தில் பல நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை, கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களுடன் இணைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் சேர்ப்பது தான் சில நாடுகளின் தொற்றா நோய்களின் அதிகரித்த இறப்பு வீதங்களுக்கு காரணமாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல ஆய்வு முடிவுகளில் இருந்தும் தொற்றா நோய்களின் அதிகரிப்பில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படுவதை அறிய முடிகின்றது. இவ்வாறான நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தலானது தொற்றா நோய்களின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளமைக்கான ஏனைய காரணிகளாக புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை, உடலியல் சார் செயற்பாடுகளற்ற நிலை, அளவுக்கதிகமான மது பாவனை மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.
அத்துடன் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு தமது தொடர் மருத்துவப் பராமரிப்புக்களை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், கொவிட்-19 தொற்றுக்கு இலகுவில் உட்படக்கூடியவர்களாக இவர்களது உடல் நிலை பலவீனமாகக் காணப்படல் ஆகியவற்றையும் குறிப்பிட முடியும்.
குறிப்பாக இத் தொற்றானது, முதலில் சுவாசத் தொகுதியை தாக்குவதன் கர்ரணத்தினால் ஏனைய தொற்றா நோயுடையவர்களை விட தீவிர சுவாச நோய்களையுடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் தொடர்ந்து முகக் கவசம் (Face Mask) அணிந்த நிலையில் இருப்பது, சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றது.
மேலும் தற்காலங்களில் உலக நாடுகளின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியிருந்தாலும் அனைவரும் தமது தொழில் சார் அலுவலக செயற்பாடுகளை தொடர்பு சாதனங்களினூடாக வீடுகளில் இருந்தே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் மற்றும் தொழினுட்ப சாதனங்களின் இடைவெளியற்ற பயன்பாடு என்பனவும் தொற்றா நோய்களின் அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளதை மறுக்க முடியாது. இதனால் மூட்டுக்களில் வலி ஏற்படல், கண் வலி, தலை வலி மற்றும் மலச் சிக்கல் போன்றனவும் ஏற’படுகின்றன. மேலும் இன்று உடலியல் சார் தொழிற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்ற நிலை குறைந்து முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் ஏற்படும் உடற் பருமன் அதிகரிப்பானது, தொற்றா நோய்களுக்கான அடிப்படைக் காரணியாக மாறியுள்ளது. இவை தவிர உளவியல் ரீதியான பாதிப்புக்களும் மக்களிடையே அதிகரித்துள்ளன.
இதுவரை கொவிட்-19 தொற்றுக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.01 மில்லியனாக இருக்கும் நிலையில், நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமையும் பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டவர்களின் வறுமை நிலையும் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டு நிலையும் மக்களிடத்தில் உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இக்காலப் பகுதிகளில் வறுமைக்குப் பயந்து பலர் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் எம்மை வந்தடையாமலில்லை.
கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொற்றா நோய்களுடன் வாழும் மக்கள் அந்நோய்களில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்கான பரிந்துரைகளை றுர்ழு முன்வைத்துள்ளது. கொவிட்-19 தொற்று மற்றும் இறப்பினை ஏற்படுத்தக் கூடிய அந்நோயின் தீவிரத்தன்மை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
தொற்று நோயானது வீடுகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் இருந்து பரவுதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் அவ்விடங்களில் அவதானமாக இருங்கள்.
தொற்று நோய்களை கட்டுப்பாடாக வைத்திருக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள். (பரிந்துரைக்கப்பட்டதன் படி மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்)
உலக சுகாதார தாபனம் பரிந்துரைத்த அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவும்:
- அடிக்கடி முறையாக கைகளைக் கழுவவும்.
- சமூக இடைவெளியைப் பேணவும்.
- சுவாசப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளவும்.
- கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
- நேயறிகுறிகள் தென்படுமாக இருப்பின், ஆரம்பத்திலேயே மருத்துவ உதவிகளை நாடவும்.
நோய் பரவுவதாக அறியப்பட்ட நாடுகள் அல்லது இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும். (இதனுள் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகள் அடங்கும்.)
WHO வளைதளம் அல்லது அது தொடர்பான அரச நிறுவனங்களின் கொவிட்-19 தொடர்பான நம்பகமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதன் மூலம் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
தொற்றா நோய்களுடன் வாழுபவர்கள், பராமரிப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் வாழுபவர்கள் மேலே றுர்ழு இனால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.
அத்துடன் சுகதேகியாக இருப்பவர்களும் தமது ஆரோக்கியம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு WHO ஆரோக்கியமாக இருப்பதற்கான 12 குறிப்புக்களை பரிந்துரைத்துள்ளது.
1. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை பேணல்.
2. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல்.
3. தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்.
4. புகையிலையின் எல்லா விதமான பயன்பாடுகளையும் தவிர்த்தல்.
5. மதுபானப் பாவனையை தவித்தல் அல்லது குறைத்தல்.
6. உடல், உள ஆரோக்கியத்திற்காக மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளல்.
7. சிறந்த சுகாதாரப் பயிற்சிகளை எடுத்தல்.
8. வாகனத்தை, வேகமாக செலுத்துவதையும் மது அருந்திய நிலையில் செலுத்துவதையும் தவிர்த்தல்.
9. வாகனத்தை செலுத்தும் போது இருக்கைப் பட்டிகளை அணிவதுடன் இரு சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தலைக் கவசம் அணிதல்.
10. ஆரோக்கியமான பாலியல் முறைகளைப் பேணல்.
11. தொடர்ந்து உடல் ஆரோக்கியத்தை சரிபார்த்துக்கொள்ளல்.
12. குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுதல்.
இவ்வாறாக உலக சுகாதார தாபனத்தினால் மக்களின் ஆரோக்கியம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை பின்பற்றுவதன் மூலம், தொற்றா நோய்களையுடையவர்கள் தமது நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிவதுடன் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்த விதமான நோய் நிலைமைகளுக்கும் உட்படாது இருக்க முடியும். நோய் வந்த பின் சிகிச்சை செய்வதை விட, நோய் வரும் முன் காப்பது சிறந்ததாகும்.
M.M முபஷ்ஷரா பேகம்
கொழும்பு பல்கலைக்கழகம்
"வழித்தடம்" - அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்
Comments (0)
Facebook Comments (0)