மருந்து இறக்குமதியில் வெளிப்படைத் தன்மை அவசியம்!
றிப்தி அலி
சுமார் 80 வகையான மருந்துகளுக்கு நாட்டில் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டியே இந்த செய்தியினை தனியார் தொலைக்காட்சியொன்றின் இணையத்தளம் வெளியிடப்பட்டுள்ளது.
தட்டுப்பாடான மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் அத்தியவசிய சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையொன்று கடந்த 2022ஆம் ஆண்டும் எமது நாட்டில் ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலரின்மையினால் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டது.
பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டாலும் வைத்தியசாலைகளில் இது போன்ற தட்டுப்பாடு நிலவவில்லை என்பது தற்போது வெளிக்கொண்டரப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் எவ்வளவு கையிருப்பு காணப்படுகின்றது என்பது தொடர்பில் மதிப்பீடு செய்யப்படாமல் மருந்துவ விநியோகப் பிரிவில் இருந்த கையிருப்புக்களை மாத்திரமே கவனம் செலுத்தியே மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதனைக் காரணமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட அவசர மருந்துக் கொள்வனவில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ள விடயம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவசர கொள்வனவு நடமுறையைப் பயன்பயடுத்தி மருந்துகளை கொள்வனவு செய்வது சட்டவிரோதம் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான மருந்துக் கொள்வனவு மோசடியாக இந்த அவசர மருந்துக் கொள்வனவு மோசடி தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடொன்றின் சுகாதார கட்டமைப்பு என்பது அந்நாட்டு மக்களை வாழ வைக்கும் மிக முக்கிய துறையாகும். மருந்து என்பது நாட்டு மக்களின் சுகாதாரத் துறையினை உறுதிப்படுத்தும் அத்தியவாசியக் காரணியாகும்.
நாட்டு மக்களுடைய உயிர்களின் பெறுமதி பொருட்படுத்தப்படாமலேயே இந்த மருந்துக் கொள்வனவு மோசடி இடம்பெற்றுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வினைத்திறனான சுகாதாரத் துறை இலங்கையிலேயே காணப்பட்டது. எனினும், மருந்துக் கொள்வனவு மோசடியினை அடுத்து குறித்த நாமத்தை இலங்கை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரதுராமான புற்று நோயால் அவதியுற்றும் வாழும் அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற இம்யூனோகுளோபூலின் மற்றும் ரிட்டுக்ஸிமாப் போன்ற மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளின் கொள்வனவில் இடம்பெற்ற மோசடியே இதற்கு காரணமாகும்.
நாட்டு மக்கள் பொருளாதார நெருடிக்கடியினால் அவதியுற்றிருந்த சமயத்தில் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இரண்டு வகையான மருந்துகளுக்கும் பதிலாக நீர் அல்லது வேறு திரவம் அடங்கிய மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள விடயம் தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்யூனோகுளோபூலின் எனக் கூறி இறக்குமதி செய்யப்பட்ட 3,985 மருந்து குப்பிகளில் 2,985 நாடாளவிய ரீதியிலுள்ள பிரதான வைத்தியசாலைகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது போன்றே ரிட்டுக்ஸிமாப் எனும் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட திருட்டு மருந்தும் சீமாட்டி ரிட்ஜ்வே, அம்பாறை, நுவரெலிய, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை மற்றும் பேராதெனிய போன்ற பல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தேவையான அனுமதிகள் எதுவுமின்றி ஆரம்பிக்கப்பட்டிருந்த Isolez Biotech Pharma AG (Pvt) Ltd எனும் நிறுவனமே இந்த இரண்டு மருந்துகளையும் நாட்டுக்கு இறக்குமதி செய்து சுகாதார அமைச்சுக்கு விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்துக் கொள்வனவிற்காக கொவிட் அவசர பெறுகைக் குழுவினை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு கடந்த 2022ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மருத்துவ உபரணங்கள் கொள்வனவிற்கு எந்தவித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் இந்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவுசெய்யாமல் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அங்கீகாரம் கிடைத்தது. அதனைப் பயன்படுத்தியே Isolez Biotech Pharma AG (Pvt) Ltd எனும் நிறுவனம் இந்த மருந்து மோசடியை மேற்கொண்டது.
அத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த மருந்துகளை கொள்வனவு செய்யவும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. இந்த கடன் திட்டத்தில் முன்பதிவுசெய்யப்பட்ட மருந்துகளை கவனத்திற் கொள்ளாது அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை மாத்திரம் முன்பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 285 அத்தியவாசிய மற்றும் உயிர் பாதுகாப்பு மருந்துகளை இந்திய கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டன.
இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக் கொண்ட மீளாய்வு குழுவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
விலை மற்றும் விநியோகிக்கப்படும் காலம் ஆகியவற்றினை மாத்திரமே இந்த மீளாய்வுக் குழு கவனத்தில் எடுத்துள்ளதுடன் விநியோகத்தின் தரம் தொடர்பில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.
இதேவேளை, ஒரு மாதத்திற்கு குறைவான பயன்பாட்டில் மருந்துகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே அவசரக் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மூன்று மாதங்களுக்கு தேவையான ரிட்டுக்ஸிமாப் மருந்துகள் கையிருப்பில் இருந்த நிலையிலேயே திருட்டு மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
அது மாத்திரமல்லாமல், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகின்ற 317 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரப்பட்டது. ஏற்கவே தட்டுப்பாடு எனக் கோரி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட மருந்துகளில் சிலவும் இந்த 317 மருந்துகளில் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கடன் வசதியின் கீழ் இந்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரப்பட்ட போதிலும் அந்த மருந்துகளுக்கான பணம் குறித்த கடன் வசதியின் கீழ் செலுத்தப்படவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியான மருந்துகளை வழங்கிய குறித்த நிறுவனத்திற்கு 144 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ விநியோகப் பிரிவின் வங்கிக் கணக்கின் ஊடாக இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. தலா 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய தொகையை முக்கியத்துவதன் அடிப்படையில் வழங்குமாறு உயர் அதிகாரிகளினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகள் மோசடியான மருந்து என்பது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே நிறுவன உரிமையாளர் பணத்தினை பெற்று முடித்துள்ளார். இந்த ஊழல் மோசடி நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 17 ஆயிரம் ரூபா மாத்திரமே மிகுதியாக காணப்பட்டுள்ளது.
இது போன்றே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பிரட்னிசிலோன் மருந்தினால் 20க்கு மேற்பட்ட நோயாளர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தினால் தேசிய கண் ஆஸ்பத்திரி மற்றும் நுவரெலியா வைத்தியசாலை ஆகியவற்றில் சத்திரசிசிக்கைக்கு உட்பட்ட 20 நோயாளர்களில் சில முழுமையாக பார்வையை இழந்துள்ளதுடன் சில பகுதியளவில் பார்வையினை இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வரை மக்கள் மயப்படுத்தப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு நீதி கிட்டியதா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
இவ்வாறு பல்வேறு வகையான ஊழல் மோசடிகள் சுகாதார அமைச்சில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதனால், சுகாதாரத் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
இந்த நம்பிக்கையினை கட்டியொழுப்புவதற்காக குறித்த மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட்டது. அவர்களின் விசாரணையினை அடுத்து இந்த மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் மருந்தினை இறக்குமதி செய்த கம்பனியின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துல்ல அமைச்சராக பதவி வகித்த நிலையில் ஹெகலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக இடம்பெற்றுள்ளது.
சுமார் ஏழு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி பல்வேறு நிபந்தனைகளுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், நாட்டில் இடம்பெற்ற மருந்துக் கொள்வனவு மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்;ச்சியாக முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கு சொந்தமான 16 வங்கிக் கணக்குகள் மற்றும் ஐந்து காப்புறுதிப் பத்திரங்களை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தனது நெருங்கிய நண்பர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அரச நிதியை தவறாக பயன்படுத்தி 600 பிளாஸ்டிக் குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, 35 சத்திர சிகிச்சை விளக்குகளை கொள்வனவு செய்த போது அரசாங்கத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவின் பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் ஏற்றப்பட்ட நோயாளர்களுக்கு நடந்த என்ன என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த மருந்து கொள்வனவு மோசடியில் ஈடுபட்டவர்கள் போன்று பொதுமக்களின் வரிப் பணத்தில் கொள்ளையடித்த பலர் இன்னும் சட்டத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் மக்கள் நீதி நிலை நாட்டும் வரை காத்திருக்கின்றனர்.
இவ்வாறான மோசடிகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக நாட்டில் அமுலிலுள்ள கொள்முதல் வழிகாட்டியினை மருந்துக் கொள்வனவின் போது முழுமையாக பின்பற்றி குறித்த செயன்முறை வெளிப்படுத்தன்மையாக இடம்பெற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்துடன் அவசியமில்லாத சந்தர்ப்பங்களில் அவசர நிலமையின் கீழ் மருந்துகள் கொள்வனவு செய்வதை சுகாதார அமைச்சு தவிர்ப்பதுடன் மருந்துளின் தரம் சரியான முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, கிராம மற்றும் மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற சுகாதார சேவை தொடர்பான ஊழல்களை அம்பலப்படுத்த மக்களின் விழிப்புணர்வும் அவதானமும் மிகக அவசியமாகும்.
இதற்காக பொதுமக்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பொதுமக்களை விழிப்புணர்வூட்டி சுகாதாரத் துறை காணப்படுகின்ற ஊழல்களை ஒழிக்க சிவில் அமைப்புக்கள் காத்திரமான பங்களிப்பினை செய்ய வேண்டும்.
இவற்றின் ஊடாக சுகாதாரத் துறையில் இடம்பெறும் ஊழல்களை நிச்சயமாக ஒழிக்க முடியும். எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு சுகாதார அமைச்சு முன்னுரிமை வழங்கி நோயாளிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)