வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

வக்பு நியாய சபையின் (Wakfs Tribunal) விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்று (21) சனிக்கிழமை குறித்த நபர் மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

வக்பு நியாய சபையின் அமர்வு அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதியான கலாநிதி யூ.எல்.ஏ. மஜீட் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வக்பு நியாய சபையின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இல்யாஸ் மற்றும் சட்டத்தரணி ஏ.டப்ளியூ.எம். இம்தியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளை ஒலிப்பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஒலிப்பதிவினை வட்ஸ்அப் மூலம் பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனுக்கு அனுப்பியதாக குறித்த நபர், பொலிஸாருக்கு  வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பில் இன்றைய விசாரணைகளுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு விசாரணை அமர்வுகளையும் ஒலிப்பதிவு செய்து முஸ்லிம் சலாஹுதீனுக்கு அனுப்பியதாக குறித்த நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பாக வக்பு நியாய சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முதலாவது பிரதிவாதியாக தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  வக்பு நியாய சபையானது மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.