CID இல் ஆஜராகுமாறு றிசாதிற்கு நீதிமன்றம் உத்தரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீனை விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜுலை 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அறிவித்தது.
இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளினால் தனது தேர்தல் பிரச்சாரங்களை ஒழுங்காக முன்னெடுக்க முடியாதுள்ளதாக முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டினை கடந்த ஜுலை 15ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற தேர்தல் நிறைவடையும் வரை முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் ஜுலை 27ஆம் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)