ரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை: முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம்
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணைக்கு எதிராக முஸ்லிம் தரப்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த மனுவினை தற்போதைய சூழலில் தாக்கல் செய்வதில்லை எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சட்டத்தரணிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபும் கலந்துகொண்டிருந்தார்.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அத்துரலியே ரதன தேரரின் குறிப்பிட்ட தனிநபர் பிரேரணை விவாதிக்கப்பட்டு, வாக்களிப்புக்குச் செல்வது சாத்தியமில்லை என்பதால் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
அத்தோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய என்போர் அத்துரலியே ரதன தேரரின் தனிநபர் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதும் கருத்தில் கொள்ளப்பட்டு மனுத்தாக்கல் செய்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரதன தேரரின் தனிநபர் பிரேரணைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் முஸ்லிம்களிடமிருந்து பெயர், விலாசம் மற்றும் விபரங்களைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)