ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்கும் மொழி கல்வியே தீர்வு!
றிப்தி அலி
கடந்த 2019ஆம் ஆண்டு சிறியதொரு குழுவினரால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளினால் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொத்து ரொட்டியில் கருத் தடை மாத்திரை கலப்பு, வைத்தியர் ஷாபி சட்டவிரோதமாக சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார், கருத்தடை மருந்து தடவப்பட்ட பெண்கள் அணியும் ஆடைகளை முஸ்லிம் வர்த்தகர்கள் விற்பனை செய்கின்றனர், முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களை பகிஷ்கரிக்க வேண்டும் ஆகியன இந்த போலிப் பிரச்சாரங்களில் சிலவாகும்.
இதன் காரணமாக சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் சந்தேக கருத்தாக்கங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. இந்த போலிப் பிரச்சாரங்கள் எல்லாம் பெரும்பாலும் சிங்கள மொழி மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
அதை மறுத்துரைக்கவோ, குற்றம்சாட்டப்பட்டவர் பக்க நியாயங்களை எடுத்துக்கூறவோ முடியாத சூழல் நிலையொன்று காணப்படுகின்றது. இதற்கான பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும்.
இதனால், ஊடகங்களுக்கு ஊடாக கட்டியெழுப்பப்படும் இத்தகைய கருத்தாக்கங்களுக்கான மாற்று கருத்துக்களை அதே மொழியி;ல் முன்வைக்கமுடியாத நிலை உள்ளது.
இதனால், சிங்கள மொழி ஊடகங்களுக்கு ஊடாக ஊடாக கட்டியொழுப்பப்படும் இத்தகைய கருத்தாக்கங்களுக்கான மாற்றுக் கருத்துக்களை அதே மொழியில் முன்வைக்க முடியாத நிலை உள்ளது.
இதே போன்றே முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்திலும் தமிழர் தரப்பு நியாயங்களை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்கமுடியாது போனது. இதற்கும் மொழியே முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் 18ஆவது சரத்தின் 1ஆவது பிரிவில் இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதன் இரண்டாவது பிரிவில் தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது சரத்தில் சிங்களமும், தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஆங்கிலம் இணைப்பு மொழி எனவும் அரசியலமைப்பில் குறிப்பிட்பட்டுள்ளது. இதற்கமைய, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் எமது நாட்டில் பயன்பாட்டில் காணப்படுகின்றன.
இலங்கையினைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேச, எழுத மற்றும் வாசிக்க தெரிந்தவர்களின் சதவீதம் மிகக் குறைவாகும்.
நாட்டின் சனத்தொகையில் 75 சதவீதமான சிங்கள மக்கள் சிங்கள மொழியினையே பேசுகின்றனர். அதேபோன்று இலங்கை தமிழர்கள், இலங்கை சோனகர்கள் மற்றும் இந்திய தமிழர்கள் ஆகிய சமூகங்களினைச் சேர்ந்த 25 சதவீதமானோர் தமிழ் மொழியினை பேசுகின்றனர்.
எவ்வாறாயினும் தென் பகுதியில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், தமிழினை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் சிங்களத்திலேயே பேசுகின்றனர். எனினும் இதுவொரு குறிப்பிட்ட சிறு சதவீதமேயாகும்.
சிங்களத்தில் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முஸ்லிம்களும், தழிழர்களும் சிங்களத்தை கதைப்பதற்கு கற்றுக்கொண்டுள்ளனர். பல முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் நிலைகளையும் காணலாம்.
ஆனால், சிங்களவர்கள் தமிழ் கற்றுக்கொள்வது என்பது மிகமிக அரிதாகும். தற்போது பாடசாலைக் கல்வி, அலுவலக சம்பள உயர்வு போன்றவற்றுக்காக சிங்களவர்கள் தமிழ் மொழியைக் கற்கின்றனர். ஆனாலும் தழிழ் பேசுபவர்களுக்கு சிங்களம் எவ்வளவு அவசியம் என உணர்கிறார்களோ, அதேயளவு தமிழ் தெரிய வேண்டும் என சிங்களவர்கள் உணர்வதில்லை பதில் இல்லை.
"யுத்தத்திற்கு பிந்திய நல்லிணக்க செயற்பாட்டில் மொழியின் பங்களிப்பு இன்றியமையாதொன்றாகும்" என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்க வேண்டும்; சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
அத்துடன் மும்மொழி கொள்கையினை நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும், இந்த ஆணைக்குழுவின் சிபாரிசு நாட்டில் அமுல்படுத்தப்பட்டதா? என்பது இன்று வரையான கேள்விக்குரியாகும்.
இவ்வாறான நிலையிலேயே சமூக ஊடகங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கள சமூகத்தினை இலக்கு வைத்து சிங்கள மொழி மூலமே முஸ்லிம்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக அளுத்கம, அம்பாறை, திகன, சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் முஸ்லிம்களின் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டும் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரங்கள் பேஸ்புகின் ஊடாக திட்டமிடப்பட்டது எனத் தெரிவித்து குறித்த நிறுவனம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கோரியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை அடுத்து மேலும் வீரியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், "இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுகின்றனர். இதனை இல்லாமலாக்குவதற்காக முஸ்லிம் சமூகத்தின் நியாயங்களை ஏனைய சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்' என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அறைகூவலொன்றை அண்மையில் விடுத்தார்.
"இதற்காக முஸ்லிம் எழுத்தாளர்கள் தங்களின் பேனாவினை பயன்படுத்த வேண்டும். அது மாத்திரமல்லாமல் இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் முன்வர வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
இதேவேளை "சிங்கள மொழி மூலமான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழில் பதில் வழங்குவது ஒரு தகவல் மாத்திரமேயாகும். எனினும் அதற்கு சிங்களத்தில் பதில் வழங்குவதன் ஊடாகவே உரிய தரப்பினரை அது சென்றடையும்" என கலாநிதி பீ.ஏ. ஹுசைன்மியா குறிப்பிடுகிறார்.
"இந்த போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழில் பதில் வழங்குவதன் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. இதனால் சிங்களத்தில் பதில் வங்குவதற்கான ஊடகவியலாளர்களை அல்லது சமூக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட்ட வேண்டும். இது இன்றைய காலத்தின் தேவையாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயங்கள் சிங்கள மொழி மூலம் அதிகளவில் முன்வைக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஊடக மொழியாக சிங்களம் இருக்க வேண்டும்.
இன்னும் தெளிவாக சொல்வதானால், தழிழ் ஊடகத்துடன் சிங்கள மொழி மூல ஊடகங்களையும் உருவாக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல், சமூக வலைத்தளங்களில் சிங்களத்தில் பதிலிறுக்கும் தன்மையும் இருக்க வேண்டும்.
இது பற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. நிக்ஷன் கூறுகையில், 'அரசியல்வாதிகள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்காக இந்த மொழி ஊடான நல்லிணக்கத்திற்கு எப்போதும் குந்தகம் விளைவிப்பர்களாவே காணப்படுகின்றனர்' எனக் குற்றஞ்சாட்டினார்.
உண்மையில் இரண்டு மொழியும் தெரிந்த ஒருவர் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் போது ஒரு நாட்டில் இரு வேறு உலகங்களில் வாழும் உணர்வைப் பெறுவார். ஒரே விடயத்தை இரு மொழிச் சமூகங்களுக்கும் இரு வேறுபட்ட விதத்தில் ஊடகங்கள் முன்வைக்கின்றமை முக்கிய விடயமாகும்.
இவ்வாறான நிலையிலேயே சிங்கள மொழி மூலமான தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுகிறது. இது பற்றி நீதி அமைச்சர் அலி சப்ரியும் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
"இவ்வாறு சிங்கள மொழி மூலமாக ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் சிறுபான்மை சமூகத்திலிருந்து உருவாக்கும் போது, அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக பதில் வழங்க முடியும்" என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் ஊடாக சிங்கள சமூகத்தில் தவறான கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதை இல்லாமலாக்க முடியும் என அவர் மேலும் கூறினார். சிங்கள மொழி மூலமான ஊடகவியலாளர்களை உருவாக்குதவதன் ஊடாக சமூகங்களுக்கு இடையில் இலகுவாக நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
அது மாத்திரமல்லாமல் சிறுபான்மையினர் தொடர்பான முக்கிய தகவல்களை தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்க முடியும். இதன் மூலம் ஏனைய சமூகங்கள் தொடர்பான தேவையற்ற சந்தேகப் பார்வையினையும் இல்லாமலாக்க முடியும்.
அது போன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒருபோதும் தமிழ் மொழி மூலமான ஊடகங்களில் வெளிக்கொணரப்படுவதில்லை. இதனால் "சிங்கள மக்களுக்கு எந்தவித பிரச்சினையுமில்லை என்ற எண்ணப்பாடு" குறித்த ஊடகங்களை பார்க்கும் சிறுபான்மை மக்கள் மத்தியில் தோன்றுகின்றது.
இதுவும் தவறான கருத்துருவாக்கமேயாகும். நாட்டில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் போன்று சிங்கள மக்களும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவையும் தமிழில் அறிக்கையிடப்பட வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரகாரம் மும்மொழிக் கொள்கையினை நாட்டில் வலுவாக அமுல்படுத்துவதுடன் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிக் கற்றலை கட்டமாயக்க வேண்டும். இதன் ஊடாக இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சிறந்த உறவினை கட்டியொழுப்ப முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.
Comments (0)
Facebook Comments (0)