கல்வி பணிப்பாளர் நிசாமின் மனுவினை விசாரணை செய்தது நிந்தவூரினைச் சேர்ந்த நீதிபதியா?

கல்வி பணிப்பாளர் நிசாமின் மனுவினை விசாரணை செய்தது நிந்தவூரினைச் சேர்ந்த நீதிபதியா?

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக எம்.ரீ.ஏ. நிசாமினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர்பில் போலிப் பிரச்சாரமொன்று சமூக ஊடகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

www.jvpnews.com எனும் இணையத்தளத்தினாலேயே குறித்த போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. "ஹிஸ்புல்லாஹ் காலத்தில் நிசாமின் நியமனத்தில் வெடித்தது சர்ச்சை! அதிருப்தியில் முஸ்லிம்கள்" எனும் தலைப்பிலான இந்த செய்தி கடந்த ஜுலை 17ஆம் திகதி குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

குறித்த போலிச் செய்தியினை இன்று (19) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை 368 பேர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய எம்.ரி.ஏ. நிசாமினை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் கடந்த 2018ஆம் ஆண்டுக்கு நீக்கப்பட்டு விட்டு, அவ்விடத்திற்கு கே.எல்.எம்.மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 2019ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்டதை அடுத்து, மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

எனினும், ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்தை எதிர்த்து திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மன்சூரினால் வழக்கொன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கினை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், மாகாண கல்வி பணிப்பாளராக நிசாம் செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பானது  கடந்த ஜுன் 01ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனினால் வழங்கப்பட்டது.

மன்சூர் - தொடர்ந்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக செயற்பட இதன்போது மேல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை நிசாம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதியரசர்களான ஸிரான் குணரட்ன மற்றும் ருவான் பெர்ணான்டோ முன்னிலையில் கடந்த 14ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜராகியிருந்தார். இவ்வாறான நிலையில் குறித்த மனுவினை நிந்தவூரினைச் சேர்ந்த நீதிபதியே விசாரித்ததாக www.jvpnews.com இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது உண்மையில் பொய்யானதாகும். நிந்தவூரினைச் சேர்ந்த நீதியரசர் ஏ.டி.எச்.எம்.நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக செயற்படுகின்ற போதும், அவர் இந்த மனு மீதான விசாரணைகளில் பங்கேற்கவில்லை. அத்துடன் இவர்கள் இருவரும் உறவினர்கள் என பொய்யாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 11 பேரைக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழுவிலுள்ள நீதியரசர்களான ஸிரான் குணரட்ன மற்றும் ருவான் பெர்ணான்டோ ஆகியோரே இந்த மனுவினை விசாரணை செய்து இடைக்கால தடை உத்தரவு வழங்கினர்.

இந்த மனு மீதான விசாரணையில் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜராகியிருந்தார். இந்த நிலையில், நிந்தவூரினைச் சேர்ந்த சட்டத்தரணியே குறித்த வழக்கில் நிசாம் சார்பில் ஆஜரானதாக பொய்யாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிசாமின், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி உடன் பிறந்த சகோதரவார். எனினும் குறித்த பதவிக்கு எந்தவித அரசியல் செல்வாக்குமின்றிய நிலையிலேயே நிசாம் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் போன்ற பல்வேறு கல்வி நிர்வாக பதவிகளை வகித்த நிசாமிற்கு பதவியுர்வின் மூலமே மாகாண கல்வி பணிப்பாளர் பதவி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் கட்சி உறுப்பினராக நிசாம் செயற்படுகின்றார் என்பதும் முற்றிலும் பொய்யானதாகும்.

இதற்கு மேலதிகமாக நிந்தவூர் முஸ்லிம் சமூகம் எனும் அமைப்பொன்றே நிந்தவூரில் இல்லாத நிலையில் குறித்த அமைப்பினால் இந்த நியமனத்திற்கு எதிராக கண்டம் வெளியிடப்பட்டுள்ளது எனவும் போலியான தகவலொன்று குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு போலியான செய்தியினை வெளியிடும் இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருப்போம்.