இந்திய - இலங்கை கூட்டறிக்கை: பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான பங்குடைமைகளை மேம்படுத்துதல்

இந்திய - இலங்கை கூட்டறிக்கை: பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான பங்குடைமைகளை மேம்படுத்துதல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்திய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வமான விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் டிசம்பர்  16 ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்த நிலையில், சுமூகமானதும் பரந்தளவிலானதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆழமாக வேரூன்றிய கலாசார மற்றும்  நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அமைவு,  இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா - இலங்கை இடையேயான இருதரப்பு பங்குடைமை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் இடம்பெற்ற முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்கு  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். 

வளமான எதிர்காலம், சிறந்த வாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிய இலங்கை மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தனது வலுவான அர்ப்பணிப்பை இங்கு நினைவுகூர்ந்த அவர், இந்த இலக்குகளை அடைவதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்நோக்கியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின்  'அயலுறவுக்கு முதலிடம்' என்ற கொள்கை மற்றும் 'சாகர்'  தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கைக்கு விசேட இடத்தை வழங்கி, இவ்வாறான விடயங்களில் இந்தியா முழு உறுதியுடன் ஆதரவு வழங்கும் என்று இலங்கை  ஜனாதிபதி திசாநாயக்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும், இலங்கையின் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் மேலதிக ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த இரு தலைவர்களும், இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக இந்திய-இலங்கை உறவை பரஸ்பர நன்மை பயக்கும் விரிவான பங்குடைமையாக முன்னேற்றுவதற்கான தங்கள் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினர்.

அரசியல் பரிமாற்றங்கள்:

கடந்த தசாப்தத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டதுடன் தலைமைத்துவ மட்டத்திலும் அமைச்சர்கள் மட்டங்களிலும் அரசியல் ரீதியான ஈடுபாட்டினை மேலும் தீவிரப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஜனநாயக பெறுமானங்களை ஊக்குவிப்பதற்கும், சிறந்த நடைமுறைகள் குறித்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கும் வழக்கமான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அபிவிருத்தி ஒத்துழைப்பு:

இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியாவின் உதவி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.  தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியிலும்,  அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் கடன் சுமையை குறைக்கும் வகையில், கடனுதவி அடிப்படையில் முதலில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நன்கொடை திட்ட உதவிகளாக வழங்குவதற்கான இந்தியாவின் முடிவையும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த நெருக்கமாக பணியாற்ற, தமது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்ததுடன் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்:

i. இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டம்,  மூன்று தீவுகளின் புதுப்பிக்கத்தக்க & கலப்பு முறைமை எரிசக்தித் திட்டம் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள உயர் தாக்கச் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட, நடைமுறையில் உள்ள திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதை உறுதிசெய்ய ஒத்துழைத்தல்;

ii. கிழக்கு மாகாணம், இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள மத ஸ்தலங்களை சூரிய மின்மயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குதல்;

iii. இலங்கை அரசாங்கத்தின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக,  அபிவிருத்தி பங்குடைமைக்கான புதிய திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம் காணுதல்.



பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு:

இலங்கைக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கை சுட்டிக்காட்டும் வகையில்,  இலங்கையில் பல்வேறு துறைகளில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான தேவையைக் காரணியாக்குதல், என்ற அடிப்படையில்,  இரு நாடுகளினதும் தலைவர்களும்;

i. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் 1500 இலங்கை சிவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்,

ii. இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப சிவில், பாதுகாப்பு, சட்ட துறைகளில் இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குதல், ஆகியவற்றுக்கும் இணங்கியிருந்தனர்.

கடன் மறுசீரமைப்பு:

அவசர நிதியுதவி மற்றும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி உதவி உட்பட இணையற்ற, பன்முக உதவிகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி திசாநாயக்கா பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். 

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில், அதிகாரபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் (OCC) இணைத் தலைமை வகித்தமை உட்பட, கடன் மறுசீரமைப்பு விவாதங்களை சரியான நேரத்தில் முடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை போன்றவை இந்தியாவின் முக்கியமான உதவிகளாகுமென அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தற்போதுள்ள கடன் உதவிகளின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்காக இலங்கை செலுத்த வேண்டிய பணத்தை செலுத்துவதற்கு 20.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடனான நெருக்கமான மற்றும் விசேடமான உறவை வலியுறுத்திய பிரதமர் மோடி அவர்கள், பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் செழுமைக்கான அதன் முயற்சிகளில் தேவைப்படும் சகல காலங்களிலும் இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்குமென மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுகளை பூர்த்தி செய்யுமாறு தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். கடன் அடிப்படையிலான திட்டங்களுக்கான மாதிரிகளிலிருந்து பல்வேறு துறைகளிலும் முதலீடு சார்ந்த ஒத்துழைப்புகளை நோக்கிய மூலோபாய மாற்றம்,  இலங்கையின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கான நிலையான பாதையை உறுதி செய்யும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இணைப்புகளை உருவாக்குதல்

இரு நாடுகளினதும் தலைவர்கள் அதிக இணைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதுடன், இரு நாடுகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மேலதிக வாய்ப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர்.  

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:

i. நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டமைக்கு திருப்தி தெரிவித்த அவர்கள், இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் அதிகாரிகள்  துரிதமாக்  பணியாற்ற வேண்டுமெனவும் ஒப்புக் கொண்டனர்.

ii. இந்திய  அரசின் நன்கொடை  உதவியுடன் இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்க கூட்டாக பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.

சக்தித் துறை  அபிவிருத்தி:

சக்தி துறை பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நம்பகமானதும்,  இலகுவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான மின்சக்தி வளங்களின் அவசியத்தை வலியுறுத்திய இரு தலைவர்களும், எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர்.

இவ்விடயம் தொடர்பான முடிவுகள்:

i. இலங்கையின் தேவைகளுக்கேற்ப சம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் திறனை மேலும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.

ii.  பல்வேறு நிலைகளில் உள்ள பல முன்மொழிவுகளை தொடர்ந்து பரிசீலித்தல்:

(அ) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரவ நிலை இயற்கை எரிவாயுவை (LNG)  விநியோகித்தல்.

(ஆ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவுதல்.

(இ) மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு.
 
(ஈ) விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பாக்கு நீரிணை கடலோர காற்றாலை மின் திறனை கூட்டாக மேம்படுத்துதல்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்பட வெண்டுமென ஏற்றுக்கொண்ட இரு தலைவர்களும், திருகோணமலையை பிராந்திய மின்சக்தி மற்றும் கைத்தொழில் மையமாக மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல்:

ஆட்சியை மேம்பாடு, நிலை மாறும் சேவை வழங்கல்கள், வெளிப்படைத்தன்மை ஊக்குவிப்பு மற்றும் சமூக நலனுக்கான ஆதரவு ஆகியவற்றில், மக்களை மையப்படுத்திய டிஜிட்டல்மயமாக்கலில் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கையில் இதேபோன்ற அமைப்புகளை இந்தியாவின் உதவியுடன் நிறுவுவது குறித்து தனது அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.  இந்த விவகாரத்தில் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:

i. அரசாங்க சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கத்துக்கு உதவுவதற்காக இலங்கை பிரத்தியேக டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை விரைவுபடுத்துதல்;

ii. இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை (DPI)  முழுமையாக செயல்படுத்துவதற்காக சகல வழிகளிலும் ஒத்துழைத்தல்.

iii.  இலங்கையில் டிஜிட்டல் பெட்டகங்களை பயன்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்ப சம்பாஷனைகளை முன்னெடுத்துச் செல்வது உட்பட,  இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில்  உள்ள விடயங்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில், இலங்கையில் DPI  சட்டகத்தினை செயல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு கூட்டுப் பணிக்குழுவை ஸ்தாபித்தல்.

iv.  இரு நாடுகளின் நலனுக்காகவும், இரு நாடுகளின் பணம் செலுத்தும் முறைகள் தொடர்பான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல்.

v. இலங்கையில் சமமான அமைப்புகளை நிறுவுவதன் நன்மைகளை ஆராயும் நோக்குடன், இந்தியாவின் ஆதார் தளம், GeMபோர்டல், PM கதி சக்தி டிஜிட்டல் தளம், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சுங்க சேவைகள் மற்றும் பிற வரிவிதிப்பு நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து அனுபவங்களைப் பெறுவதற்கான இருதரப்பு பரிமாற்றங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்.

கல்வி மற்றும் தொழில்நுட்பம்:

இலங்கையில் மனித வள அபிவிருத்தியினை ஆதரிப்பதற்கும் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இரு தலைவர்களும் பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டனர்:

I. விவசாயம், மீன்வளர்ப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய துறைகள் போன்றவற்றில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவாக்கல்.

ii. இரு நாடுகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரித்தல்.

iii.  இலங்கையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் உட்பட ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப முகவர் (ICTA) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.

வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு:

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள், அத்துடன் இலங்கையில் விரிவடைந்து வரும் சந்தை மற்றும் இலங்கைக்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கான அதன் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை எடுத்துரைத்த இரு தலைவர்களும்,  வர்த்தக உறவுகளை மேலும் விரிவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை அங்கீகரித்த்துடன், இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பங்குடைமையை வலுப்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டனர். மேலும் வர்த்தக பங்குடைமையை ஆழமாக்குவதற்கு இது ஒரு சிறந்த தருணம் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்வரும் அம்சங்கள் ஊடாக வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்:

i.  பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான கலந்துரையாடல்களை தொடர்ந்தும் மேற்கொள்ளல்.

ii. இரு நாடுகளுக்கும் இடையே INR-LKR வர்த்தக கொடுப்பனவுகளை மேம்படுத்துதல்.

iii. இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்பை மேம்படுத்துவதற்காக பிரதான துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல்.

18.  உத்தேசிக்கப்பட்டுள்ள இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதமாக நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

விவசாயம் மற்றும் விலங்குகள் பராமரிப்பு:
 

தன்நிறைவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் பால்பண்ணைத் துறையின் வளர்ச்சிக்குத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.

விவசாயத்துறையின் நவீனமயமாக்கலுக்கு ஜனாதிபதி  அதி மேதகு திசாநாயக்க அவர்களின் வலியுறுத்தலைக் குறிப்பிட்டு, இலங்கையின் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த பணிக்குழுவொன்றை அமைக்க இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு:

இந்தியா மற்றும் இலங்கையின் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை அங்கீகரித்த இரு தலைவர்களும், இரு நாடுகளினதும் பாதுகாப்பு விவகாரங்களுக்கு இரு நாடுகளாலும் வழங்கப்படும் முன்னுரிமை, பரஸ்பர நம்பிக்கை, மற்றும்  வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட கிரமமான பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். 

இயல்பான  பங்காளிகளாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டியதுடன், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உறுதி செய்வதிலும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 

இந்தியா இலங்கையின் நெருங்கிய கடல்சார் அயல் நாடாக இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான எந்த வகையிலும் தனது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி திசாநாயக்கா இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

பயிற்சிகள், பரிமாற்ற திட்டங்கள், கப்பல்களின் விஜயங்கள், இருதரப்பு பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான உதவிகள் ஆகியவற்றில் தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து திருப்தியினைத் தெரிவித்த இரு தலைவர்களும்,  கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணங்கியுள்ளனர்.

கடற்படை கண்காணிப்புக்காக ஒரு டோனியர் விமானத்தை வழங்கியதற்காகவும், இலங்கையில் கடற்படையின் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் கடல்சார்  விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு இன்றியமையாத ஏனைய  உதவிகளை வழங்கியமைக்காக ஜனாதிபதி திசாநாயக்கா இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார். 

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண விவகாரங்களில் இலங்கைக்கு ‘முதலில் பதிலளிப்பவராக’ இந்தியாவின் வகிபாகத்தினை அவர் பாராட்டினார். முக்கியமாக, பாரியளவிலான போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்களைக் கையகப்படுத்துவதில் இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் கூட்டு முயற்சிகளின் அண்மைய வெற்றிகள் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்பட்டதுடன்,  இந்திய கடற்படையினருக்கு ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் நன்றி தெரிவித்திருந்தார்.

நம்பகமான பங்காளியாக , இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் தேவைகளை முன்னேற்றுவதிலும், அதன் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கான அதன் திறன்களை அதிகரிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது தொடர்ச்சியான ஆதரவை இந்தியா உறுதிப்படுத்தியது.

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, பயிற்சி, திறன் வளர்ப்பு, புலனாய்வு, தகவல் பகிர்வு ஆகியவற்றில் தற்போது நடைபெற்று வரும் கூட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இவ்விடயத்தில் கீழ்க்காணும் அம்சங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

i.     பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பினை உருவாக்குவதற்கான சாத்தியத்தை ஆராய்தல்;

ii  நீரியல் துறை சார் ஒத்துழைப்பை வளர்த்தல்;

iii. இலங்கையின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான பாதுகாப்பு தளங்கள் மற்றும் கலங்கள் குறித்த ஏற்பாடுகள்;

iv. கூட்டுப் பயிற்சிகள், கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உரையாடல் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்தல்;

v.  பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, அனர்த்தங்களை குறைத்தல், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் இலங்கையின் திறன்களை வலுப்படுத்த உதவிகளை நீடித்தல்;  மற்றும்..

vi. இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு ஆளுமை விருத்தி மற்றும் ஏனைய பயிற்சிகளை மேம்படுத்துதல், மற்றும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான பயிற்சித் திட்டங்களை நடத்துதல்.

கலாசார மற்றும் சுற்றுலாத் துறை  அபிவிருத்தி

இரு நாடுகளினதும் கலாசார உறவு,  புவியியல் அமைவு மற்றும் நாகரிக உறவுகளை சுட்டிக் காட்டிய இரு தலைவர்களும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் சுற்றுலாத் துறை ரீதியான உறவுகளை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா ஆதாரமாக இந்தியா இருந்து வருவதால்,  இரு தலைவர்களும் பின்வரும் விடயங்கள் குறித்து உறுதி பூண்டுள்ளனர்:

i. சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை வெற்றிகரமாக மீண்டும் தொடங்கியுள்ள அதே வேளையில், இந்தியா இலங்கை இடையே பல்வேறு இடங்களுக்கு விமான இணைப்பை மேம்படுத்துதல்.

ii. இலங்கையில் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்தல்.

iii. இலங்கையில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய முதலீடுகளை ஊக்குவித்தல்.

iv. சமய மற்றும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.

v. இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் மொழி ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றத்திற்கும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவித்தல்.
.
மீன்பிடித் துறை சார்ந்த  விவகாரங்கள்

இரு தரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டும் மீனவர்களின்  வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் இந்த விவகாரத்தினை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை  இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, எந்தவொரு ஆக்ரோஷமான அல்லது வன்முறையுடனான நடத்தையினை தவிர்க்க வேண்டிய தேவையையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மீன்பிடி  தொடர்பான 6ஆவது கூட்டுப் பணிக் குழு கூட்டத்தின் முடிவுகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாடுகள் மூலம், ஸ்திரமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும் என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விசேட உறவைக் கருத்தில் கொண்டு,  இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஈடுபாட்டைத் தொடருமாறு இரு தலைவர்களும் தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துதல், காரைநகர் படகுத்துறையை புனரமைத்தல், மற்றும் இந்திய உதவியின் மூலமான நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான ஒத்துழைப்பு  உள்ளிட்ட இலங்கையின் மீன்பிடித் துறையின் ஸ்திரமான மேம்பாட்டுக்காக இந்தியா முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு இலங்கை  ஜனாதிபதி அதி மேதகு அநுர குமார திசநாயக்க அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு:

இந்து சமுத்திர பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நலன்களை அங்கீகரித்து, தற்போதுள்ள பிராந்திய கட்டமைப்புகள் மற்றும் இருதரப்பு கட்டமைப்புகள் மூலம் பிராந்திய கடல் பாதுகாப்பை கூட்டாக வலுப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

இதனடிப்படையில், கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட கொழும்பு பாதுகாப்பு குழுமத்தின் அதிகார பூர்வ சட்ட ஆவணங்களில் அண்மையில் கையொப்பமிட்டமையை இரு தலைவர்களும் வரவேற்றனர். இதேவேளை இக்குழுமத்தின் நோக்கங்களை முன்னேற்றுவதில் இலங்கைக்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.

IORA அமைப்புக்கு இலங்கை தலைமை வகித்து வரும் நிலையில்  இந்தியா தனது முழு ஆதரவையும் இலங்கைக்கு தெரிவித்துள்ளது.  இந்த பிராந்தியத்தில் உள்ள அனைவரின் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை IORA உறுப்பு நாடுகள் வகுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

BIMSTEC அமைப்பின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர். BRICS அமைப்பில் உறுப்பினராவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை இலங்கை  ஜனாதிபதி  திசாநாயக்க கோரியிருந்தார்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் 2028/2029ஆம் ஆண்டிற்கான நிரந்தரமற்ற உறுப்பினருக்கான இந்தியாவின் விண்ணப்பத்துக்கு இலங்கை அளித்த ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

முடிவுரை

இந்த கூட்டறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளவாறு, ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க வகையிலும் உரிய நேரத்திலும் அமுல்படுத்துவது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதோடு, நட்பு மற்றும் அயல் நாடுகளின் உறவுகளுக்கான புதிய நியதியினை உருவாக்கும் என இரு நாடுகளினதும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கமைவாக இப்புரிந்துணர்வுகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன்  தேவைப்படும் சந்தர்ப்பங்களில் வழிகாட்டுதலை வழங்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இலங்கையின் ஸ்திரமான அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு உறவுகளை உரிய முறையில் மேம்படுத்துவதற்கு தலைமைத்துவ மட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்க பிரதமர் மோடியினை பொருத்தமான காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.